தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் - ஜனாதிபதி 

Published By: Vishnu

18 Sep, 2024 | 03:33 AM
image

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்க கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்கள் பொறுமை காக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை மட்டுமே குறியாக வைத்து தேர்தல் கோரி போராட்டம் நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

மன்னார் பஸ் நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும், சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று உடன்படிக்கைகளை மீறி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.  

நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் அதேவேளை, மன்னாரின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு எடுத்துரைத்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வதா அல்லது வரிசை யுகத்திற்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் எனது எதிர்காலமன்றி உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். செப்டம்பர் 21 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். உங்கள் திருமண தினத்தின் பின்னர் முக்கியமான நாள் இது. இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ முன்வந்தார்களா? அவர்கள் எங்கிருந்தனர்.

பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் பின்வாங்கினார்கள். இன்று நாட்டில் அனைத்தும் இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்படும் போது வராமல் இப்பொழுது தேர்தலுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களை தும்புத் தடியினால் அடித்துத் துரத்த வேண்டும். வாயில் இருந்து உமிழ்நீர் வடிய வந்து எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறார்கள்.

பல கஷ்டமான முடிவுகளை எடுத்தேன். அதனை நீங்கள் தாங்கிக் கொண்டீர்கள். சிலர் ஒருவேளை தான் சாப்பிட்டார்கள். நீங்கள் உங்களின் பொறுப்பைச் செய்தீர்கள். அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றினார்களா, தேர்தலை நடத்துமாறு முதலில் கோரினார்கள். உரம் இல்லாத நிலையில் தேர்தல் நடத்தி என்ன பயன்? படகுகளுக்கு எரிபொருள் இல்லாத நிலையில், தேர்தல் நடத்தி பயனிருக்கிறதா? அதனால் முதல் பணியாக உரத்தைப் பெற்றுக் கொடுத்தேன். எரிபொருளை கொடுத்தேன். அந்த நிலையில் எனக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். 

தற்பொழுதும் கடினமான நிலை உள்ளது. சமையலறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். அதனால் தான் சுமூக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். சம்பள உயர்வு வழங்கினேன். அஸ்வெசும வழங்கினேன். அது போதுமானதல்ல. அடுத்த வருடம் மேலும் சலுகை வழங்க வேண்டும்.

வரியைக் குறைப்பது ஐ.எம்.எப் நிபந்தனைக்கு முரணானது. சஜித்தும் அநுரவும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். நெருக்கடி ஏற்படும்.

மல்வது ஓய நீரை யோதவாவிக்கு கொண்டு வரவும் அதன் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதியில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவது குறித்து காதர் மஸ்தானுடன் கலந்துரையாடியுள்ளோம். அதனை நவீனமயப்படுத்துவோம். அவர் பெரிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார்.அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான பணத்தை ஒதுக்குவேன்.

மேலும், இந்தப் பகுதியை சூரிய சக்தி மையமாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். தெளிவான திட்டத்துடன் மக்களிடம் வந்திருக்கிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களுக்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம்.

புலிகள் இயக்கத்தில்  இணைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மன்னாரில் உள்ள சிங்களக் கிராமங்களில்  வாழும் மக்கள் அஞ்சத் தேவையில்லை.

மன்னார் பிரதேசம்  அபிவிருத்தி செய்யப்பட்டு, மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை அமைக்கப்படும். இப்பிரதேசத்தை நாம் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களித்து  ஆரம்பித்துள்ள பணியைத் தொடர மக்கள் ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்:

''சில அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பெருந்திரளான மக்கள் இங்கு திரண்டுள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் நடந்த எதிரணி கூட்டங்களை விட பாரிய கூட்டம் இங்கு திரண்டுள்ளது. நாட்டை முன்னேற்றும் ஒரே நோக்கத்துடனே ஜனாதிபதி செயற்படுகிறார். அதனாலே நாமும் அவருடன் கைகோர்த்துள்ளோம். 2022 இல் மக்கள் போராட்டம், எரிபொருள், கேஸ் வரிசை, உணவுத் தட்டுப்பாடு என பெரும் நெருக்கடி இருந்தது. வேறு நாடுகளில் இவ்வாறான நெருக்கடியில் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அனைவரையும் பாதுகாத்து ஜனநாயகத்தையும் நமது  ஜனாதிபதி காப்பாற்றியுள்ளார். எமது மக்கள் தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சுற்றுலாத்துறை வலயமான இப்பகுதியை முன்னேற்ற வேண்டும். புத்தளம் வீதியை புனரமைத்து திறக்க வேண்டும் எனவும்  தலைமன்னார் - இராமேஷ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. காணி விடுவிப்பு தொடர்பிலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கேஸ் சிலிண்டருக்கு வாக்களிப்போம். 

இந்தக் கூட்டத்திற்கு வரக் கூடாது என மக்களிடம் கோரியுள்ளனர். ஆனால் மக்கள் அவற்றை ஓதுக்கி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.'' என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப்:

''மூன்று பிரதான வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது  என கணிப்புகள் மேற்கொள்ளப்படுகிறன. தென்பகுதி எம்.பிகளையும், மலையகம் எம்பிகளையும்  சார்ந்த எமது பகுதியில் அனைத்தும் சரியாகிவிட்டது. ரகசியமாக ரணிலுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். வடக்கில் 60 - 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

கிழக்கில் ரணில் அலை வீசுகிறது. விலாம்பழம் போன்ற நிலையே எதிரணி வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடமாகாண முன்னாள் உறுப்பினர் அலிகான், முசலி தலைவர் உட்பட உறுப்பினர்கள் மாந்தை மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை ஆதரிக்க இணைந்துள்ளனர்.

திருகோணமலை அப்துல்லா மஹ்ரூப் ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபடுகிறார். தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு என சுமந்திரன் அறிவிப்பு செய்தும் அந்தக் கட்சியின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதியையே ஆதரிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அணியைச் சேர்ந்த பலர் இன்று  ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர்.  நாடெங்கும் ரணில் விக்ரமசிங்கவின் அலை அடிக்கிறது. முதலாம் இடத்தில் ரணில் விக்ரமசிங்க உள்ளார். சஜித் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.'' என்றார்.

முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி:

''6 தடவை பிரதமராக இருந்து அனுபவம் பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாட்டைப் பொறுப்பேற்று உலக நாடுகளுடன் பேசி  நாட்டை மீட்டார். அவரை நம்பி உலக நாடுகள் உதவி வழங்கின. ஆளும் தரப்பில் இருந்த அனைவரும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள். போராட்டங்களை முறியடித்து பாராளுமன்றத்திற்கு தீவைக்கும் முயற்சியையும் தடுத்தார். முஸ்லிம் தாய்மாரின் கருவில் தான் பயங்கரவாதத்தின் ஆரம்பம் உருவாவதாக அநுர கூறினார். அவரின் பின்னால் சென்று நாம் நரகத்திற்குச்  செல்லப் போகிறோமா என அவரை ஆதரிக்கும் எமது முஸ்லிம் உறவுகளைக் கேட்கிறேன்.

ரணில் விக்ரமசிங்கவுடன் 125 எம்.பிகளின் ஆதரவு மட்டுமன்றி பல க ட்சிகள் ஆதரவும் இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற 69 இலட்சம் வாக்குகளை விட அதிக வாக்குகளினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றி பெறுவார்" என்று தெரிவித்தார்.

 மதத் தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபால மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41