தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குளியாப்பிட்டியவில் ஜனாதிபதி திறந்து வைத்தார்

Published By: Vishnu

18 Sep, 2024 | 03:18 AM
image

நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை (17) திறந்து வைத்தார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலையான வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையை ஆரம்பிக்க, 27 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட 15 ஆசனங்களைக் கொண்ட முதல் வாகனம் இம்மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.

உலகளாவிய வாகனத்துறைசார்  வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்தரத்திலான சர்வதேச இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 

மேலும், உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு இணங்க, சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சி நிறுவனமும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பயிற்சியின் மூலம் இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

குளியாப்பிட்டியவில் உள்ள வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலைக்கு இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்து பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை சுற்றிப் பார்வையிட்ட ஜனாதிபதி, ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை, எதிர்ப்புக்களுக்கு அடிபணிந்து, அவற்றை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்கத்தேய ஓட்டோமொபைல் தொழிற்சாலைக்கான பணிகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க எவரும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் ஜனாதிபதி இங்கு  நினைவு கூர்ந்தார்.

நாட்டை மேம்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 2 வருடங்களில் நிறைவுசெய்யப்படவிருந்த இந்தத் திட்டத்திற்கு 10 வருடங்கள் பிடித்தது எனவும் இதனால்  இந்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

இந்த புதிய தொழிற்சாலை குளியாப்பிட்டிய உட்பட முழு நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில்  உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

''இந்தத் தொழிற்சாலையை நிறுவ 2015 இல் அனுமதி வழங்கியிருந்தோம். ஆனால் அன்றிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 2019 இல் தொடங்கப்படவிருந்த இந்தத் திட்டம், கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தடைப்பட்டது.

நான் ஜனாதிபதியான பின்னர், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பித்து வைத்தேன். அதன்படி இன்று வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் நிறுவனத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 50,000 வாகனங்களை சந்தைக்கு விநியோகிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் நமது ஏற்றுமதித் துறையை வலுப்படுத்த முடியும்.

இந்த தொழிற்சாலையை இரண்டே ஆண்டுகளில் தொடங்க இருந்தபோதும், இதற்காக எங்களுக்கு 10 ஆண்டுகள் எடுத்தது. பலர் இதற்கு எதிராக செயல்பட முயன்றனர். இதற்கு ஆதரவாக செயற்பட யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் இந்தத்  திட்டத்தை நிறுத்த முயற்சித்தனர். இத்தொழிற்சாலையின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளோம். எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டேன்.

இந்த திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன். இத்தொழிற்சாலை குளியாப்பிட்டியின் அபிவிருத்தியின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இத்துடன் குளியாப்பிட்டியின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது. பிங்கிரியில் ஆயிரம் ஏக்கர் முதலீட்டு வலயத்தை உருவாக்குகிறோம். அத்துடன், இரணவில பிரதேசத்தில் 500 ஏக்கர் சுற்றுலா வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பகுதிகளில் சுற்றுலா மற்றும் உற்பத்தி வலயமொன்று இங்கு உருவாக்கப்படும்.

இந்த புதிய வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுவர். எனவே, பொறியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். குருநாகல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவ இருக்கிறோம். நாம் 21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும். அதனை விட்டுச் செல்ல முடியாது.

சீன நிறுவனங்கள் இந்த முதலீடுகளுக்கு வருவது போல் இன்று ஐரோப்பிய நிறுவனங்களும் வருகின்றன. நாங்கள் வங்குரோத்து நிலையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுபடும் வரை அவை காத்திருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளோம். தற்போது தனியார் பிணைமுறி வழங்குநர்களுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அந்த உடன்படிக்கைகளின் படியே நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

வடமேல் மாகாணத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள முயற்சிக்கிறேன். கம்பஹா எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதேபோன்று வடமேற்கு பிரதேசமும்  முன்னேற்றப்படும். அதன் ஒரு அங்கமாக இந்த தொழிற்சாலையைக் குறிப்பிடலாம்." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர்களான ஜெராட் பெர்னாண்டோ, மைக்கல் செல்வநாயகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41