நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம் - ஜனாதிபதி

Published By: Vishnu

18 Sep, 2024 | 12:57 AM
image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்தார். 

இரு வருடங்களுக்கு முன்பிருந்த இருண்ட யுகத்தை மறந்துவிடக் கூடாதென தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அதன் பிரதிபலன்களை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

குளியாபிட்டியவில் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒற்றுமை இல்லை என்றும், தூய்மையான ஐக்கிய தேசிய கட்சி தனக்கு கீழேயே உள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உண்மையாக ஐக்கிய தேசிய கட்சியை நேசிப்போர் செப்டம்பர் 21ஆம் திகதி தனக்கே வாக்களிப்பர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

''இன்று ஜே.ஆர்.ஜயவர்தனவின் பிறந்தநாள். ஐக்கிய தேசிய கட்சி என்பதால் நாம் அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம். ஐக்கிய தேசிய கட்சி ஒன்று மட்டுமே இருப்பதால் நாம் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். மற்றைய கட்சிகளிடம் நான் ஒத்துழைப்பு மட்டுமே கோரினேன்.  மாற்று ஐக்கிய தேசிய கட்சிகள் இல்லை. எனவே, ஐக்கிய தேசிய கட்சியினர் எனக்கு வாக்களிப்பார்கள்.

ஜே.ஆர். ஜவர்தனவுடன் பணியாற்றிய காலத்தில் பெரும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டோம். அந்த காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டில் மகாவலி, புதிய தலைநகரம், இரண்டு வர்த்தக வலயங்கள், உதா கம்மான, மகாபொல, யொவுன் புரய  உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை ஒவ்வொரு அமைச்சுக்களிலும் செயற்படுத்தினோம். 

இம்முறை நான் ஜனாதிபதியான பின்னர் அவற்றை விடவும் பெரிய திட்டங்களை ஆரம்பித்து முழுமைப்படுத்துவேன்.  நான்கு வருடங்களாக அதிகளவில் கஷ்டப்பட்ட மக்களுக்கு நல்ல எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அர்பணிக்க நான் தயாராக இருக்கிறேன். எனவே, செப்டம்பர் 21ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். அன்று நாட்டினதும் உங்களுடையதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நாளாகும்.  

நல்ல எதிர்காலத்தை நோக்கி செல்வதா, இல்லையேல் மீண்டும் வரிசைகளில் நிற்கப்போகிறோமா என்பதை நீங்கள் 21 ஆம் திகதி தீர்மானிக்கலாம். நல்ல எதிர்காலமே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். கஷ்டங்களை மக்கள் விரும்புவதில்லை.  உணவு, கேஸ், மருந்து, எரிபொருள், உரம் என்று எதுவுமே இல்லாத நேரத்தில் மக்கள் குறித்து சிந்தித்தது யார்? 

எவராவது உங்களைப் பற்றி கவலைப்பட்டார்களா? மக்களின் துயரம் அவர்களுக்கு புரிந்ததா? அவர்களுக்கு இதயம் இருந்ததா? மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. நாங்கள் தப்பிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்தனர். அதனால் ஓட்டப் போட்டிக்குப் பயன்படுத்தும் நல்ல சப்பாத்துக்கள் இரண்டடை வாங்கி சஜித் பிரேமதாசவிடம் கொடுங்கள். மக்கள் கஷ்டத்தில் அழுத நேரத்தில் அநுரவும் சஜித்தும் தப்பியோடினர்.  

இன்று நாங்கள் ஒன்றுபட்டு நாட்டைக் காப்பாற்றிய பின்னர். தங்களுக்கும் நாட்டை காப்பாற்ற ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.  நீங்கள் எது கேட்டாலும் தருகிறேன், எனக்கு வாக்களியுங்கள் என்று எதிர்கட்சித் தலைவர் சொல்கிறார். எதிர்கட்சித் தலைவர் என்பவர் நாட்டின் மாற்று பிரதமராக இருக்க வேண்டுமே தவிர மாற்று சாரதியாக இருக்ககூடாது.  

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருந்த வேளையில் பாடசாலைகளுக்கு சென்று சிறு பிள்ளைகளிடம் தன்னால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த முடியுமென எதிர்கட்சித் தலைவர் கூறிவந்தார். 2022 ஆம் ஆண்டில் அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு ஏதாவது உதவிகளை செய்தாரா?

நாங்கள் வரியை அதிகரித்தபோது மக்களுக்கு கஷ்டம் இருந்ததை அறிவோம். அதனை நாம் அறிவோம். பொருட்களின் விலை இரட்டிப்பாகியுள்ளது ஆனால் வருமானம் கூடவில்லை.  என்னை மக்கள் திட்டித்தீர்த்ததையும் பொருட்படுத்தாமல் நான் நாட்டுக்கு தேவையான தீர்மானங்களை எடுத்தேன். அதன் பலனாக இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.  

அன்று ஒருவேளை உணவை தவிர்த்துவிட்டு பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்கு அனுப்ப வேண்டிய நிலையில் பெற்றோர் இருந்தனர். ஆனால் இன்று சாப்பாட்டு வேளையில் முட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  இன்னும் சில தினங்களில் 2 வேளையும் முட்டை சாப்பிடும் நிலையை உருவாக்குவோம்.

புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாக இருந்தது. தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புக்கும் வழி செய்திருக்கிறோம். அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்போம். மேலும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையவும் வழி செய்வோம். 

மற்றைய இருவரையும் அழைத்து எவ்வாறு வாழ்க்கைச் சுமையை குறைப்பார்கள் என்று கேட்டால், தரசு வைத்து குறைப்போம் என்றே சொல்வார்கள். அவர்களுக்கு பொருளாதாரமும் தெரியாது, மக்களின் வாழ்க்கைச் சுமையும் புரியாது.  நாம் தற்போதைய பொருளாதார முறையில் நாட்டைத் தொடர்ந்தும் கொண்டுச் செல்ல முடியாது. 

பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய நாட்டில் வௌிநாட்டு வருமானம் இல்லை.  நாம் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும். அதனை இலக்கு வைத்தே விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதன்கீழ் குருணாகல் போன்ற பகுதிகளில் புதிய பயிர் விளைச்சல்களை செய்வோம். கருவா உற்பத்தியை மேம்படுத்துவோம். அதேபோல் புதிய வகை தென்னை பயிர்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் நாம் ஆராயவிருக்கிறோம். 

எப்படியாவது பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிப்பதே எனது நோக்கம். கோழிப் பண்ணை தொழில் மற்றும் முட்டை உற்பத்தியையும் ஊக்குவிப்போம். அதிகரிப்போம். அதேபோல் காணி உறுதி இருப்பவர்களுக்கு நாம் நிரந்தர உரிமைகளை தருவோம். குளியாபிட்டிய, யாப்பஹூவ உள்ளிட்ட பிரதேசங்களின் பெருமளவானவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளது. 

நாம் பல தொழிற்சாலைகளை உருவாக்கவுள்ளோம்.  வெஸ்டர் ஓட்டோமொபைல் நிறுவனத்தைத் திறந்து வைத்துவிட்டே இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். அதுவே தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயற்படப்போகிறது. பிங்கிரியவில் ஆயிரம் ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.  குருநாகலில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவிருக்கிறோம். 

எனவே, மக்களை வாழ்ப்பதற்கான திட்டங்களை கொண்டுதான் 'இயலும் ஸ்ரீலங்கா' திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் இவ்வாறு எத்தனை திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அனைத்து கட்சியினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். 2022களில் ஒவ்வொரு கட்சியினரும் எவ்வளவு அச்சத்தில் இருந்தனர் என்பதை மறக்க முடியுமா? சிலர் இன்றும் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை சொல்ல அச்சப்படுகிறார்கள். 

அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு வெற்றிபெற்றால் நாட்டுக்கான எத்தனையோ திட்டங்களை செய்ய முடியும். ஐந்து வருடங்கள் ஒன்றுபட்டு செயற்பட முன்வாருங்கள், பின்னர் ஒற்றுமையாக செல்வதா வேறுபட்டு செல்வதா என்பதை தீர்மானிக்கலாம். அதனால் நாட்டை வழிநடத்தக்கூடிய பாராளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். செப்டம்பர் 21 நாம் வெல்வது உறுதி. சிலிண்டருக்கு வாக்களியுங்கள்." என ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

"இன்று பெரிய யானையை வெல்லச் செய்வதா குட்டி யானையை வெல்லச் செய்வதா என்ற தீர்மான்தை எடுக்க வேண்டியுள்ளது. சஜித் என்னும் குட்டியானைக்கு மதம் பிடித்திருந்தாலும், பெரிய யானையின் வெற்றி உறுதியாகியுள்ளது.  சஜித் சில தொலைக்காட்சிகளுக்கு சென்று அவர்கள் எழுதிக் கொடுத்ததை வாசித்து காட்டிவிட்டு வந்திருக்கிறார்.  

நெருக்கடியிருந்த காலத்தில் சஜித் இந்த நாட்டைபொறுப்பேற்றிருந்தால் அவருக்கு நாம் ஆதரவளித்திருப்போம். ஆனால் இன்று சஜித் கையில் கிடைத்த உணவை வாயில் போட்டுக்கொள்ளும் இயலுமை இல்லாதவர் என்று நிருபித்திருக்கிறார்.  

அதேபோல், முன்பு ரணில் - ராஜபக்‌ஷ என்று கூறிக்கொண்டவர்கள் இன்று ஞானசார - பிரேமதாசவாக மாறியுள்ளனர்." என்று தெரிவித்தார்.  

பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா

"கடந்த இரு நாட்களில் மற்றைய இரு வேட்பாளர்களினதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். அவர்கள் இருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் சேமிக்கப்பட்ட பணத்தை செலவிடுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.  மாறாக நாட்டுக்கு எவ்வாறு வருமானம் ஈட்டும் வழிகளைத் தேடித்தருவது என்பது குறித்து பேசவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரு வருடங்கள் தனது அனுபவத்தினால் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்று பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார். எனவே, அவருக்கு இன்னும் ஐந்தாண்டுகள் மக்கள் ஆணை கிடைக்க வேண்டியது அவசியமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அனுபவம் இல்லாதன் காரணத்தினாலேயே அவரின் ஆட்சி சரிந்தது. அந்த நாட்டை ஏற்றுக்கொண்டு நல்ல நிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுபவங்களே உதவியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரு வருடங்களில் ஆற்றிய சேவைக்காக அவருக்கு இன்னும் ஐந்து வருடங்கள் தேர்தல் இன்றியே நாட்டை கொண்டுச் செல்ல நாம் இடமளித்திருக்க வேண்டும். மற்றைய நாடுகளாக இருந்தால் அதனையே செய்திருப்பர்.  எமது வலயத்தில் உள்ள சில நாடுகள் சரிவடையும்போதும் உலக நிதி நிறுவனங்கள் இலங்கையை முன்னுதாரனமாக கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்துகின்றன. அத்தகைய கௌரவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலேயே எமக்கு கிடைத்திருக்கிறது." என்றார். 

முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல

"பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோய்விடுவார்கள் என்பதே பலரினதும் நிலைப்பாடாகும். ஆனால், நான் 20 வருட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு நாட்டுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன். 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் இன்று நாடு இந்த நிலையில் இருக்காது.  

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்த போது ரணில் ஆட்சி நீடிக்காது என்றும், ரணில் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலை நடத்தமாட்டார் என்றும் பல விடயங்களைக் கூறினர். ஆனால், அவை அனைத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய்யாக்கியுள்ளார்.  அவர் ஒருபோதும் ராஜபக்‌ஷர்களிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.  

இன்னும் சிலர் வெல்லும் சஜித் என்று சொல்கிறார்கள். ஆனால் நாட்டில் அனைத்தும் 'இயலும்' என்று சொல்லும் தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இடைக்கால ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே இன்னும் ஐந்து வருடங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கோருகிறார். எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் மக்கள் தேவைகள் தொடர்பில் அறிந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைப்பதே காலத்தின் தேவையாகும். 

எதிர்கட்சித் தலைவர் சந்திக்கு சந்தி வாக்குறுதிகளை வழங்குகிறார். அவரின் மேடைக்குள்ளே முட்டிமோதல்கள் காணப்படுகின்றன. நான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நான்கு வருடங்கள் விலகியிருந்தாலும் எமது தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே நினைத்திருந்தோம். அன்று ரணில் - ராஜபக்‌ஷ என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள், சஜித் - ராஜபக்‌ஷவாக அது தற்போது மாறியுள்ளமை வேடிக்கையானது." என்றார்.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

''ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக முடிசூட போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கவும் பிரதமராக்கவும் பல சந்தர்ப்பங்களில் தேர்தலை வழிநடத்தியுள்ளனர். 

சஜித் அதற்காக பணியாற்றியது ரகசியமல்ல. அனுரகுமார திசாநாயக்க இரு சந்தர்ப்பங்களில் அவ்வாறு செய்திருக்கிறார். 2010 களில் சரத்பொன்சேகாவை களமிறக்கியபோது ரணிலை பிரதமராக்க அநுர, பிரசாரங்களை செய்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டிலும் ரணிலை பிரதமராக்க அநுர அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். நாமல் ராஜபக்‌ஷவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக வாக்களித்தவர் என்பதை மறக்கக் கூடாது.  

அதனால், மக்கள் மாற்றுத் தீர்வுகளைத் தேடாமல் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதே சரியானதாகும். அதேபோல் ஒரு காலத்தில் ரணில் ஜனாதிபதியாக முடியாது என்று சொன்னார்கள். அந்த எண்ணத்தைப் பொய்யாக்கினார். அதற்கு முன்பும் பிரதமர் ஆக முடியாது என்று கூறினார்கள். பல சோதிடர்களும் கூட கூறினார்கள். அந்த எண்ணத்தையும் பல முறை ரணில் விக்ரமசிங்க பொய்யாக்கியுள்ளார்.  

அதேபோல் இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய சாதனையொன்றை பதிவு செய்து காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குருணாகலில் வாகன ஒருங்கிணைப்பு நிறுவனத்தை அமைக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் அதனைப் பொய்யாக்கி, புதிய நிறுவனத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இயலுமையை காண்பித்திருக்கிறார்." என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41