வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து எதிர்காலத்தை இருளாக்கிவிடாதீர்கள்! - ஜனாதிபதி

Published By: Vishnu

17 Sep, 2024 | 10:49 PM
image

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு புரட்சியை செய்ததன் மூலம் அடுத்த 05 வருடங்களில் நிச்சயமாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, 'வாய்ப்பு' கேட்கும் அரசியல்வாதிகளிடம் தமது எதிர்காலத்தை ஒப்படைத்து, நாட்டையும் எதிர்காலத்தையும் இருளடையச் செய்ய வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மினுவங்கொடையில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில், இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக 03 பிரதான அரசியல் கட்சிகள் நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன. சஜித்துக்கு வழங்கப்படும் வாக்கு, அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்காகும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, அதேபோன்று நாமலுக்கு அளிக்கப்படும் வாக்கும் அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்கு என்பதை பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''செப்டம்பர் 21 உங்களுக்கு மிக முக்கியமான நாள். 2022 இல் இந்த நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியது. உணவு, மருந்து, எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். உணவோ உரமோ இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்தது. அப்போது அரசியலும் சரிந்தது. பிரதமரும் அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஓடிவிட்டார். இந்த அரசாங்கத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக தெரிவித்தார். முன்னாள் விவசாய அமைச்சர் அனுர குமார திஸாநாயக்கவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது உங்கள் துன்பம் அவர்களுக்குப் புரியவில்லை. மக்கள் துன்பப்படும் போது தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அந்த நேரம் அவர்கள்  ஓடினர். எனக்கு ஆதரவு வழங்க இணைந்த குழுவுடன் நாட்டைப் பொறுப்பேற்று பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வந்தேன். இப்போது சிலர் 'வாய்ப்பு' கேட்கிறார்கள். 

இந்த நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க, செப்டம்பர் 21 அன்று உங்கள் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைப்பீர்களா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். திசைகாட்டிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க, உங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டுமா என்று நான் கேட்கிறேன்.

கடந்த பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிரமமாக இருந்தாலும் அந்த முடிவுகளை எடுத்தோம். அந்த துன்பத்தை இந்நாட்டு மக்கள் சகித்தார்கள். தெருவில் இறங்கி கூச்சல் போடவில்லை. அந்த சக்தி மக்களிடம் இருந்தது. அதனால்தான் இந்த நாட்டு மக்களை நான் மதிக்கிறேன்.

அப்போது சஜித்தும், அனுரவும் எங்கிருந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டோம்.  ஆனால் அவர்கள் உதவவில்லை. தேர்தலை நடத்துமாறு கேட்டனர். போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டனர். நீதிமன்றம் சென்றனர். அப்படிப்பட்ட ஒரு குழுவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா என்று கேட்கிறேன்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை நாம் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாம் முன்னேற வேண்டும். அடுத்த 05 ஆண்டுகளில் மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இன்று வரலாற்றில் முதல் தடவையாக 03 பிரதான கட்சிகள் நாட்டு மக்களுக்காக ஒன்றிணைந்துள்ளன. ஆனால் சஜித்தும் அனுரவும் அதில் இணைய விரும்பவில்லை. இந்த பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது.

மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வேகமாக வளர்ந்து வரும் நாடு இலங்கை என்பதை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த 05 ஆண்டுகளில் அனைவரும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். செப்டம்பர் 21 ஆம் திகதி  அந்த ஆணையை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன

‘‘நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எதிர்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்  இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது தப்பி ஓடினார்கள். ஆட்சியைப் பொறுப்பேற்று நடத்த முடியாத இந்தத் தலைவர்களுக்கு வாக்களிக்க முடியாது என்ற தெளிவான தீர்மானத்திற்கு மக்கள் வந்துள்ளனர்.  

ஆனால், இந்நாட்டுக்கு ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் நாடு அராஜகமானது. அப்போது மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சிய ஏற்றார். மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றார். பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவருடன் கைகோர்த்தனர். 

ஆட்சி என்பது இலகுவான விடயம் அல்ல என்பதை சஜித் பிரேமதாஸவும், அநுரகுமார திஸாநாயக்கவும் அன்றே ஏற்று கொண்டுவிட்டனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனையோரைவிட கல்வி அறிவிலும் திறமையிலும் அவர் முன்னிலையில் உள்ளார். பொருளாதார நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில், சர்வதேச தலைவர்களுடன் தொலைபேசி ஊடாகவேனும் கதைத்து அவர்களின் ஆதரவுகளைப் பெறக்கூடிய ஒரே ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. 

இவ்வாறான திறமையான ஒருவர் இருக்கும்போது, வேறொருவருக்கு ஆட்சியை வழங்கினால் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாத எமது கடன் பத்திரங்களுக்கு மீண்டும் அங்கீகாரத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொடுத்தார். அவர் தனது உலகலாவிய தொடர்புகள் மூலம் இதனை செய்தார். மீண்டும் அத்தியாவசியப் பொருட்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடிந்தது. 

அன்று எமது  நாட்டில் இருந்த பொருளாதார நிலைமை எமக்கு நினைவிருக்கிறது. தற்போது அது மீண்டு வருகின்றது. எனவே இதுவரை முன்னெடுத்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல, எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நமது வாக்குகளை அளித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் அவரைத் தெரிவுசெய்வோம்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

‘‘இந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனாதிபதி  தனது கட்சியில் இருந்து விலகி இன்று சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். 22 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் போது, இந்நாட்டின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கம்பஹா மாவட்டத்தில் இருந்து மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளால் வெற்றி பெறச் செய்யவே நாம் செயற்பட்டு வருகின்றோம்.  ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு நிகரான எவரும் இல்லை. ஜனாதிபதியின் அடுத்த ஐந்தாண்டு பதவிக்காலம் அமுல்படுத்தப்படும் போதும் நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.’’ என்றார்.

அமைச்சர் அலி சப்ரி

‘‘நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டைப் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை. அதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டுவந்தார். அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தார். இவ்வருட ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இத்தகைய சர்வதேச உறவுகளைக் கொண்ட வேட்பாளர் யாரும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றது இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம். அதன் பலனை இன்று மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இன்று எரிபொருள் வரிசைகள் இல்லை, எரிவாயு வரிசைகள் இல்லை, மின்வெட்டு இல்லை. இக்கட்டான காலங்களில் ஜனாதிபதி பதவியை ஏற்க முடியாத தலைவர்கள் தற்போது அவர்களுக்கும் வாய்ப்புக் கேட்கின்றனர். இன்று நாம் சர்வதேச ரீதியில் முன்னோக்கிச் செல்லும் போது, இரண்டரை வருடங்களில் இலங்கை எவ்வாறு மீட்கப்பட்டது என்று அந்த அந்த மக்கள் கேட்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு செய்த விடயங்களே, பங்களாதேஷுக்கு இன்று தேவை என்று உலக வல்லரசுகள் கூட கூறுகின்றன. எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி

‘‘கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு ஆற்றிய சேவையின் காரணமாக நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்நாட்டின் அனைத்து இனங்களையும் ஒரே மேடையில் கொண்டுவர முடிந்தது. சஜித் பிரேமதாஸ மற்றும் அனுர குமார திஸாநாயக்க இரண்டு வருடங்கள் ஜனாதிபதி தேர்தலை நோக்கி அரசியல் செய்தனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு வருடங்கள் மக்களை வாழ வைக்க பாடுபட்டார். ஜனாதிபதியுடன் வைத்தியர் ஒருவர் சென்ற போது நகைச்சுவையாக பேசிய அனுர குமார திஸாநாயக்க, தற்போது ஒவ்வொரு தேர்தல் மேடைகளுக்கும் மருத்துவருடன் செல்கிறார்.

எனவே, பொய் மூலம் அரசியல் செய்யும் இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் பங்களாதேஷுக்கு நடந்ததே எமது நாட்டுக்கும் நடக்கும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக உங்கள் அனைவரையும் அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.

 பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா,

‘‘இன்னும் நான்கு நாட்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கப்படும் நாள் விடியும். மக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தமைக்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக முன்வந்துள்ளோம். ராஜபக்ஷ நாட்டை அழித்து எரிபொருளையும் உணவையும் கொண்டு வர முடியாமல் மக்களை வீதிக்கு இறக்கிவிட்டார்கள். அப்போது சஜித்தும், அனுரவும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ இந்த நாட்டை அதளபாதளத்தில் தள்ளிவிட்டார்கள். தற்போது, நாமல் ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாசவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். மொட்டின் வாக்குகளை சஜித்துக்கு வழங்குங்கள் என்று கூறுகிறார்கள். எரிபொருள், எரிவாயு, மருந்துகள் இன்றி மக்கள் தவித்த போது இவை அனைத்தையும் மக்களுக்கு வழங்க முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அவரது வெற்றிக்காக அனைவரும் அர்ப்பணிப்போம்.’’ என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, 

‘நாட்டின் எதிர்காலம் வரும் 21 ஆம் திகதி முடிவு செய்யப்படும். நெருக்கடியில் இருந்தபோது நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால் எந்தத் தலைவரும் நாட்டைக் பொறுப்பேற்கவில்லை. தட்டில் வைத்து இலவசமாக கொடுக்கப்பட்ட ஜனாதிபதிப் பதவியை ஏற்க அநுர விரும்பவில்லை. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருந்த வேளையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த முன்வந்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்பதற்காக செயற்படும் ஜனாதிபதி, உறுமய வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கினார். இப்போது நாடு அமைதியாக இருக்கிறது. எனவே, பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் ருவன் விஜயவர்தன,

‘‘அநுர திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இரண்டாவது இடத்துக்காக போராடுகின்றனர். நாட்டுக்கு ஒரு நெருக்கடி வந்ததும் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடிவிட்டனர். ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே சவாலை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அந்தச் சவாலை வெல்வதற்கு இந்நாட்டு மக்கள் அவருக்கு பலத்தைக் கொடுத்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சொத்துக்களை இழந்தாலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபட்டார். மக்களின் வாழ்வுரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிந்தித்தார்.

பொருளாதாரம் பற்றிய அவரது புரிதலின் காரணமாக, நாடு வங்குரோத்து  நிலையில் இருந்து விரைவாக மீட்கப்பட்டது. பங்களாதேஷின் இன்றைய நிலையைப் பார்த்தால், சோசலிசத்தின் செயற்பாடுகளைக் காணலாம். சவால்களை ஏற்கக்கூடிய ஒரு தலைமை சோசலிசத்தில் இருந்திருந்தால், அது 2022 இல் நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும்.

ஆனால் அநுர குமார திஸாநாயக்கவைப் போன்று சஜித் பிரேமதாசவும் அன்று நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவருக்கு சிறந்த அணி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்போதும் அந்த அணிகள் அப்படியே தான் இருந்தன. எனவே இந்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

சர்வ மதத்தலைவர்கள், அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக்க, சஹன் பிரதீப், பேராசிரியர் ஆஷு மாரசிங்க மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41