நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை 

Published By: Digital Desk 3

17 Sep, 2024 | 01:39 PM
image

எம். ஏ. நுஃமான்

ஆங்கிலத்தில் Hope Against Hope என்று ஒரு மரபுத் தொடர் உண்டு. நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை என்று இதைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கலாம். ஆனால், அது மூலத்தின் பொருளைத் தராது. ஒரு காரியம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், அது நடக்கும் என்று நம்புவதை இது குறிக்கும். நம்பிக்கை இழந்த ஒரு சூழலில் ஒரு பற்றுக்கோடாக ஒன்றில் நம்பிக்கைவைக்கும் மனநிலையாக இதனைக் கொள்ளலாம். ஸ்டாலின் காலத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகி மறைந்த, பிரசித்திபெற்ற சோவியத் கவிஞர் ஒசிப் மண்டல்ஸ்தாமின் துயரம் தோய்ந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய  அவரது மனைவி நடாஷா மண்டல்ஸ்தாம் அந்த நூலுக்கு வைத்த பெயரும் Hope Against Hope என்பதுதான்.

இலங்கை அரசியலில் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பதும் அது நடக்காமல் போவதும் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறது. எனது சொந்த அனுபவம் அப்படி. உங்கள் பலரின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று முகநூலிலும், வட்ஸ்அப்பிலும் பலரும் எழுதுவதை வாசிக்கும் போது எனது பங்குக்கு இப்குறிப்பை எழுதலாம் போல் தோன்றிது.

இதுவரை நடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றுமுறைதான் நான் வாக்களித்திருக்கிறேன். இரண்டு முறை எனது வாக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு முறையும் வாக்காளன் என்றவகையில் நான் தோல்வியடைந்திருக்கிறேன். மாற்றம் வேண்டும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் அளித்த வாக்குகள் அவை. ஆனால், அவை வீணாக்கப்பட்ட வாக்குகள் என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது.

முதல் வாக்கு 1994ல் சந்திரிகா அம்மையாருக்கு அளித்தது. அது ஒரு மாற்றத்துக்கான பேரலை வீசிய காலம். 17 ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை வீழ்த்தி, ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உறுதிப்பாடு பெரும்பாலான மக்கள் மத்தியிலும், இடதுசாரி ஆர்வலர்கள் மத்தியிலும் மேலோங்கி இருந்த காலம். அந்த உணர்வுக்குத் தலைமை வழங்கியவர் சந்திரிகா. முதல்முதல் ஒரு சிங்கள அரசியல் தலைவர் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக, யுத்தத்துக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக அரசியல் மேடைகளில் பலமாகக் குரல் எழுப்பினார் என்றால், அது அவர்தான். இதுவரை யாரும் பெறாத அளவு 62% வீத வாக்குகள் பெற்று அவர் ஜனாதிபதியானார். தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. பத்துவருட கால அவருடைய ஆட்சியில் ஜனாதிபதி முறையை அவர் ஒழிக்கவில்லை. யுத்தத்தையும் இனவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. பதிலாக யாழ்ப்பாணத்தை வென்றுவந்த அவரது தளபதி வெற்றிப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்ததை மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.

இரண்டாவது முறை நான் வாக்களித்தது 2015ல். அதுவும் மாற்றத்துக்காக. பத்தாண்டுகால ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக, அர்த்தமுள்ள சமாதானத்துக்காக, நல்லாட்சிக்காக, தேசிய ஒருமைப்பாட்டுக்காக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அளித்த வாக்கு அது. இம்முறையும் எனது வாக்கு வென்றது. ஆனால், வாக்காளராகிய நான் தோற்றேன். நல்லாட்சி விரைவிலேயே கேலிக்கூத்தாகி வன்முறையிலும், இனவாதத்திலும் முடடிந்தது. மீண்டும் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக் கதிரையில் ஏற்றியது அண்மைய வரலாறு. மூன்றாவது முறை நான் வாக்களித்தது 2019ல். அது மாற்றத்துக்காக அளித்த வாக்கு அல்ல. எதிர்ப்பு வாக்கு. இனவாதத்தின் உச்சியில் ஏறி நின்ற கோத்தபாய வெல்லக்கூடாது என்பதற்காக அளித்தவாக்கு. அந்த வாக்கு வெற்றிபெறவில்லை எனினும், அதைப்பெற்ற சஜித் பிரேமதாச தன்மீது இனவாதச் சேற்றைப் பூசிக்கொள்ளவில்லை என்பது சிறிது ஆறுதல் தந்தது

இப்போது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல். வரலாறுகாணாத மக்கள் எழுச்சியின் (அரகலய) பின்னர் நடைபெறப்போகும் தேர்தல். இதுவும் மாற்றத்துகான தேர்தல் என்றுதான் சொல்லப்படுகிறது. 38 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மூவர் முன்னணியில் இருக்கின்றனர். ஒருவர் பாதாளச் சேற்றில் புதையுண்டு கிடந்த தேசத்தை ஒற்றை விரலால் தூக்கி நிறுத்தியவராக நம்பப்படும் ரணில் விக்கிரமசிங்க. மற்ற இருவரும் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக முழக்கமிடுபவர்கள். இம்முறை தேர்தல் பிரசார மேடைகளில் காணப்படும் ஒரு ஆறுதல் யாரும் வெளிப்படையாக இனவாதம் பேசவில்லை என்பது. மூவருக்குப் பின்னாலும் மூவினத்தவரும் கைகோத்து நிற்கிறார்கள். இது அறகலயவின் சாதகமான செல்வாக்கு என்று தோன்றுகின்றது. 

இவர்களுள் யாருக்கு வாக்களிப்பது? கட்சி ஆதரவாளர்களுக்குப் பிரச்சினை இல்லை. தங்கள் கட்சி வேட்பாளரைப் போற்றிப் புகழ்வதிலும் மாற்றுக் கட்சி வேட்பாளரை இழிவுபடுத்துவதிலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தேர்தல் பிரசார மேடைகளில் இதைக் காணமுடிகிறது. கட்சிச் சார்பாளர்கள்தான்  எண்ணிக்கையில் பெரும்பான்மையினர். சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளைப்போல் சந்தர்ப்பவாத வாக்காளர்களும் உள்ளனர். தற்காலிக சலுகைள் அவர்களைக் கவர்ந்துவிடும். அவர்களுக்கும் தேர்வு பிரச்சினை இல்லை. அவர்களும் எண்ணிக்கையில் கணிசமானவர்கள்.

கட்சிசார்பற்ற, கொள்கைப் பிடிப்புள்ள, இடதுசாரி அரசியல் ஆர்வலர்களின் நிலை சற்றுச் சிரமமானது. சமகால அரசியல் வரலாற்றை ஓரளவு அறிந்த இத்தகையவர்கள் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படும் முதல் இரு வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிப்பதற்கான காரணங்கள் அதிகம் இல்லை. அரகலய நிராகரித்த சந்தர்ப்பவாத,  இனவாத, ஊழல் மிக்க 225 பாராளுமன்ற அரசியல் வாதிகளுள் அநேகர் இவர்கள் இருவரையும் சூழ்ந்து நிற்கிறார்கள். அவ்வகையில் நாட்டுக்கு வேண்டிய மாற்றங்களை  இவர்களால் கொண்டுவர முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.

மூன்றாவது வேட்பாளர், அநுர குமார திசாநாயக்கவை அநேக இளந் தலைமுறையினர் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். பலருக்கு அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார். அதிலே ஓரளவு நியாயமும் இருக்கலாம். முன்னர் சந்திரிகா அம்மையார் இப்படிக் காட்சியளித்தது எனக்கு நினைவு வருகிறது. 

அநுர தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தியில் இருபதுக்கு அதிகமான சிறு இடதுசாரிக் கட்சிகளும் இயக்கங்களும் இணைந்துள்ளன. அதன் பலம்வாய்ந்த தலைமைக் கட்சி சுமார் அறுபது ஆண்டுகால வரலாறு உடைய மக்கள் விடுதலை முன்னணி. சமீபகாலம்வரை இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதன் வகிபங்கு சாதகமானதல்ல. பெருந்தேசியவாத, தீவிரவாத, கிளர்ச்சி அரசியலையே (Rebel politics) அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளனர். 2019ல் தேசிய மக்கள் சக்தி  உருவாகிய பின்னர்தான் இவர்களிடம் கொள்கை மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதுவும் வெளிப்படையான முழுமையான மாற்றம் அல்ல. ஊழல் அரசியலுக்கு எதிராகப் பேசுவதுபோல், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அவர்களால் உறுதியாகப் பேசமுடியவில்லை. இதுவரை தங்களுடைய கடந்தகால அரசியல்பற்றி ஜேவிபி ஒரு சுய விமர்சனம் செய்ததாகவும் தெரியவில்லை. 

நாடு முன்னேற வேண்டுமானால் நமக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றம் எரிபொருளுக்கான கியூ வரிசையை இல்லாமல் செய்யும் மாற்றம் அல்ல. சம்பள உயர்வு வழங்கும் மாற்றம் அல்ல. வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் மாற்றம் அல்ல. ஊழலை ஒழிக்கும் மாற்றம் அல்ல. அடிப்படையான அரசியல் மாற்றம். சுயசார்புப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம். இன நல்லுறவுக்கான,  சமூக நீதிக்கான மாற்றம். சட்டத்தின்முன் யாவரும் சமம் என்பதனை, அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான மாற்றம். கட்சிச் சர்வாதிகாரத் திலிருந்து,  சந்தர்ப்பவாத அரசியல் பண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான மாற்றம். சாதாரண மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கான மாற்றம்.   இந்த மாற்றத்தை தேசிய மக்கள சக்தியாலோ, மற்றவர்களாலோ கொண்டுவர முடியுமா? 

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூவரில் ஒருவர் அதிகாரத்துக்கு வரத்தான்போகிறார். வழமைபோல்  நமது அரசியல் அதன் சுற்றுப்பாதையில் தொடரத்தான் போகிறது.  

சுதந்திரத்துக்குப் பிந்திய கடந்த 75 ஆண்டுகாலமாக சந்தர்ப்பவாதச் சேற்றில் புதைந்துள்ள இலங்கை அரசியலைச் சுத்தப்படுத்துவதற்கு  இன்னும் சில மக்கள் எழுச்சிகள் தேவைப்படலாம் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38
news-image

மலையக தமிழ் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட...

2024-09-30 13:08:52
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதல் - மருத்துவமனையில் உயிருக்காக...

2024-09-30 11:03:05