இதுவரை காலமும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றார்கள்? உண்ணக் கொடுத்து, குடிக்கக் கொடுத்து, பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். பணியவைத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டாமா? இந்த மலையக மக்கள் சதாகாலமும் அடிமைகளாக வாழவேண்டுமா? பயந்து வாழவேண்டுமா? ஹங்குரன்கெத்த மக்கள் எஸ்.பீ.இற்கு பயந்து வாழவேண்டுமா? மலையக மக்கள் தொண்டமான்களுக்கு திகாம்பரத்திற்கு பயந்து வாழ்ந்திருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல. மக்களைப் பற்றிச் சிந்தித்து அவர்களின் எதிர்பார்புகளை ஈடேற்றி நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கமே இப்போது எங்களுக்குத் தேவை. சுதந்திரமான மக்களை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். அதனால் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி நாங்கள் நல்லதொரு முடிவினை எடுப்போம். இப்பொழுது முழு நாட்டினதும் மக்கள் அந்த முடிவினை எடுக்க தயாராகி இருக்கிறார்கள்.
மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன?
எமது நாட்டில் அரசாங்கங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன? மலையகத் தலைவர்களின் ஒத்துழைப்பினை பெறுகிறார்கள். தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கிறார்கள். தலைவர்களுக்கு கப்பம் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கிறார்கள். தலைவர் வந்து மக்களை ஏமாற்றுகிறார். ஆனால் இப்போது நாட்டு மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். தென்மாகாணத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒருங்கிணைந்துள்ளார்கள். அதைப்போலவே கிழக்கிலங்கை முஸ்லீம்கள் பல்லாயிரக்கணக்கில் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.
அதைப்போலவே வடக்கின் தமிழ் மக்களின் நம்பிக்கையும் தற்போது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன? ஆம், அதுதான் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது. ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா - மஸ்கெலியா தொகுதிகளில் நாங்கள் அமோக வெற்றியீட்ட வேண்டும். இன்று நீங்கள் ஒரு கிளாஸ் சாராயத்திற்காகவா இங்கே குழுமியிருக்கிறீர்கள்? சாப்பாட்டுப் பொதிக்காகவா? இல்லை. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவே. இன்று நாங்கள் முதல்த்தடவையாக நாட்டு மக்கள் என்ற வகையில் பொதுத்தேவைக்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம். இது ஒரு விசேடமான தருணமாகும். நாட்டு மக்கள் புதிய மாற்றத்திற்காக அணிதிரண்டு இருக்கிறார்கள்.
இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல
நாங்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகளின் பெறுபேறுகள் செப்டெம்பர் 21 அந் திகதி உறுதியாகின்றது. தோட்டங்களில் வசிக்கின்றவர்களின் வாழ்க்கை பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு வசிக்க பொருத்தமான வீடு கிடையாது. சரியான கழிப்பறை வசதிகள் கிடையாது. தோட்டத்திற்குச் செல்ல சரியான பாதை கிடையாது. பிள்ளைகளுக்கு கல்வி வசதி கிடையாது. உங்கள் பிள்ளைகளுக்கு சரியான ஒருவேளை உணவு கிடையாது. மருந்து வாங்கிட வழியில்லை. முழு வாழ்க்கையும் துன்பம் நிறைந்தது. நீங்கள் இவ்வாறு வசிக்கவேண்டியவர்களா? இல்லை. இதனை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல: மேலே இருக்கின்ற தலைவர்களின் அரசாங்கமாகும். அவர்கள்தான் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அவர்களுக்காகவே தீர்மானங்களை மேற்கொண்டார்கள்.
நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது
பெருந்தோட்டத் தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் இங்கே கல்வி பயில்கிறார்களா? இல்லை. ஒன்றில் கொழும்பிலுள்ள பெரிய பாடசாலைகளில். இல்லாவிட்டால் வெளிநாடுகளில். தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி பயில பாடசாலை கிடையாது, பாடப் புத்தகங்களை கொள்வனவுசெய்ய பணம் கிடையாது. வசதிகள் கிடையாது. வாழ்க்கை வீணே நாசமாகி வருகிறது.
இதனை மாற்றியமைத்திடவே நாங்கள் அதிகாரத்தைக் கோரிநிற்கிறோம். மக்கள் பட்ட துன்பங்கள் போதும். நாங்கள் மலையக மக்களை உள்ளிட்ட நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அரசாங்கமொன்றை அமைப்போம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது மக்களைப் பற்றிச் சிந்தித்து பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமாகும்.
நாங்கள் இந்த நாட்டில் முதல்த்தடவையாக பெரியபுள்ளிகளின் அரசாங்கத்திற்குப் பதிலாக மக்களின் அரசாங்கமொன்றை அமைப்போம். தற்போது இந்த மலையகப் பிரதேசங்களில் போதைத்தூள் பெருந்தொற்று வியாபித்துள்ளது. போதைத்தூளற்ற மலையகமொன்று எமக்குத் தேவையில்லையா? போதைத்தூளற்ற ஒரு நாடு எமக்குத் தேவையில்லையா? தேவை. ஏன் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை? நுவரெலியாவுக்கு தூள் கொண்டுவருபவர் யார்? இந்த பிரதேசத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகளே கொண்டுவருகிறார்கள்.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது திகாம்பரமும் வேலுகுமாரும் பங்கேற்றார்கள். இருவரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். திகாம்பரம் நுவரெலியாவில் இருந்தும் வேலுகுமார் கண்டியில் இருந்தும் பாராளுமன்றம் சென்றார்கள். வேலுகுமார் ரணிலுக்கும் திகாம்பரம் சஜித்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தார்கள். இருவரும் தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வந்தார்கள். என்ன நேர்ந்தது? திகாம்பரம் வேலுகுமாருக்கு என்ன கூறினார்? பார்குமார் என்று கூறினார்.
வேலுகுமார் திகாம்பரத்திற்கு என்ன கூறினார்? குடுதிகா என்று கூறினார். அது ஏன்? அவர்களே கூறுகின்ற விதத்தில் அவர்கள் தான் இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் இருக்கிறார்கள். இங்கு மாத்திரமல்ல, முழு நாட்டிலுமே அப்படித்தான். அரசியல்வாதிகள் தான் நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தின் திரைமறைவில் இருப்பவர்கள். போதைப்பொருளால் எமது ஊர், எமது நாடு, எமது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பொய்யாக இரு பக்கத்தில் பிரிந்து இந்த நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியையே வெற்றிபெறச் செய்விக்க வேண்டும்.
நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது. போதைப் பொருட்களை முற்றாகவே கட்டுப்படுத்துவோம். நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவோம். பிள்ளைகளைப் பற்றிய பயமின்றி சந்தேகமின்றி பெற்றோர்கள் வாழக்கூடிய ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். பிள்ளை தூள் பாவிக்குமாயின் கல்வி கற்க மாட்டாதெனில் இந்த அரசியல்வாதிகள் அதை விரும்புவார்கள். அப்போது தான் அவர்கள் விரும்பியவாறு நாட்டின் பொதுப்பணத்தை கொள்ளையடிக்க முடியும்.
நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள்?
இந்த மலையகத்தில் வசிக்கின்ற மக்கள் இலங்கைக்கு வந்து இப்போது 200 வருடங்களாகிவிட்டன. அந்த சகோதர மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என நாங்கள் கேட்பதில் பயன் உண்டா? தமிழ் நாட்டிலிருந்து வந்தார்களா? கேரளாவிலிருந்து வந்தார்களா? என கேட்பதில் பயன் இருக்கிறதா? இப்போது நீங்கள் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறீர்கள். இந்த நாட்டுக்கே வியர்வையை சிந்துகிறீர்கள்.
இந்த மண்ணுக்கே உரமாகுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் எப்படி இந்திய தமிழர்களாக முடியும்? நீங்கள் தமிழ் மொழியை பேசுகின்ற இலங்கை பிரஜைகள். நீங்கள் இந்த நாட்டின் மக்கள். நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும்போது இந்திய தமிழர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் எமது நாட்டின் பிரஜைகள்.
நாட்டின் பொருளாதாரத்தின் பங்காளிகள். இந்த தேயிலைத் தோட்டங்கள் உங்களின் உழைப்பால் செழிப்படைந்தன. உங்களின் முதாதைகள் தான் இந்த மலைநாட்டில் பயிர் செய்ய ஆரம்பித்தவர்கள். நோய் நொடிகளுக்கு இறையாகி பட்டினியால் வாடி செத்து மடிந்தார்கள். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துத்தான் நீங்கள் இந்த நாட்டை பிரஜைகள் ஆகினீர்கள். இன்றும் வாழ்க்கையில் மாற்றமில்லை. 1 1/2 இலட்சம் குடும்பங்களுக்கு தமக்கென ஒரு அங்குல நிலம் கூட இல்லை.
ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்கள் ஒரு அங்குல நிலம் கூட இல்லாமல், வீடு இல்லாமல், கழிப்பறை இல்லாமல் இருப்பார்கள் எனில் அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டுமல்லவா? நீங்கள் மனிதர்கள் இல்லையா? தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த அனைத்துப் பிரஜைகளினதும் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கும். வழங்கக்கூடிய எல்லா இடங்களிலிருந்தும் பொருத்தமான காணிகளை நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம்.
உங்களால் பயிர் செய்ய, வீடுகளை அமைத்துக்கொள்ள, குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக சீவிக்க தொடங்க முடிகின்ற வாழ்க்கையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தோட்டத்தில் உள்ள பிள்ளைகள் தமது வாழ்க்கையிலிருந்து வெளியே வர, தொந்தரவுகளிலிருந்து வெளியே வருவதற்கான சிறந்த கல்வியை எங்களுடைய ஆட்சியின் கீழ் உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம் என்பதை உறுதியாக கூறுகிறோம்.
தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்
இந்த பிரதேசங்களின் பிள்ளைகள் தமது வறுமையிலிருந்து வெளியில் வருவதற்குள்ள பிரதான வழிவகையாக ஒழுங்கமைந்த நவீன கல்வி வசதிகள் நிலவுகின்ற, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவாத பாடசாலைகளை நாங்கள் இந்த பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம். ஒவ்வொரு பிள்ளையையும் கவனித்துக் கொள்கின்ற அரசாங்கமொன்றை ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியை உறுதி செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
நீங்கள் இந்த பிரதேசத்திலுள்ள அரசாங்க நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் மொழிப்பிரச்சினை காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். தத்தமது மொழிகளில் எந்தவொரு பிரஜையும் சிரமங்களின்றி அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கான ஆட்சியொன்றை நாங்கள் அமைப்போம்.
நாங்கள் இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொடுப்போம். நீங்கள் அரசாங்க அலுவலகமொன்றுக்கு தமிழ் மொழியில் கடிதமொன்றை அனுப்பினால் தமிழ் மொழியில் கடமை புரியக்கூடிய உத்தியோகத்தர்களை அரச சேவைக்கு சோ்த்துக் கொள்வோம். அதனை ஈடேற்றும்வரை தற்காலிகமாக அதற்கான மொழிபெயர்ப்பாளர்களை ஈடுபடுத்துவோம். தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்.
அப்போது தான் நீங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதுமாத்திரமல்ல உங்களுக்கு உயிர்வாழ்வதற்கு ஏற்ற வருமான வழிவகை தேவை. புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கொழும்பு வீடுகளில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள, ஹோட்டல்களில் வெய்ட்டர் வேலையை செய்வதுதானா மலையக இளைஞர்களின் தொழிலாக அமைய வேண்டும்? நீங்கள் புதிய உயர் தொழில்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த கல்வி வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும்.
புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக நுவரெலியா மாவட்டம் சுற்றுலா தொழில் துறைக்கு பொருத்தமான மாவட்டமாகும். அதில் தொழில்கள் உருவாக வேண்டும். வருடத்திற்கு நாற்பது இலட்சம் சுற்றுலா பயணிகளை கொண்டுவர நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். அவர்கள் நுவரெலியாவிற்கும் வருவார்கள். புதிய ஹோட்டல்கள் உருவாகும்.
புதிய பொழுதுபோக்குகள் உருவாகும். மலையக விவசாயிக்கு பயிர்ச் செய்ய அவசியமான வசதிகளைப் போன்றே தமது உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்தவும் விளைச்சல் விரயமாவதை தடுப்பதற்கும் அவசியமான திட்டங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை நிலவுகின்றது
பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கியுள்ள இரத்தச்சோகை ஆகிய நிலைமைகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவும் பெருந்தோட்டங்களில் மாத்திரமன்றி முழுநாட்டிலுமே அந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்காகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து அந்த அழகான நாட்டை கட்டியெழுப்புவது உறுதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM