மகனின் காதலியை, மகனுடன் சேர்ந்து கடத்திய பெற்றோர் மற்றும் மகனை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யுவதியொருவரைக் கடத்தி தடுத்து வைத்திருந்த இளைஞர் மற்றும் இளைஞனது பெற்றோர் இருவர் உள்ளிட்ட மூவரை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதும் நீதிபதி அம் மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பசறைப் பகுதியின் மீதும்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய யுவதி அங்கிருந்து கடத்தப்பட்டு பசறைப்பகுதியின் கோணக்கலை தோட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற புகாரையடுத்து விரைந்த பொலிசார் யுவதியை கடத்திய யுவதியின் காதலன் உள்ளிட்டு அவரது பெற்றோர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

குறிப்பிட்ட யுவதி பதுளை தாதியர் பயிற்சி நிலையமொன்றில் பயிற்சியொன்றினை மேற்கொண்டிருந்தார். அவ் வேளையில் அவ் யுவதி பிறிதொரு இளைஞனுடன் காதல் கொண்டிருந்தார். 

இவ்விடயம் யுவதியின் முன்னால் காதலனுக்கு தெரிய வரவே முன்னால் காதலன் தமது பெற்றோருடன் மீதும்பிட்டியவிற்கு சென்று யுவதியை கடத்தியமை குறிப்பிடத்தக்கது.