யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் ஏற்படவில்லை. இந்நிலையை மாற்றி யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் அபிவிருத்தியின் புதிய கட்டத்திற்கு கொண்டுசெல்வதே தனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்ற யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் தொழில் வல்லுநர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டைக் ஏற்றுக்கொள்ள எவரும் இல்லாத வேளையிலேயே நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் தற்போது 38 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவர்கள் நாட்டைக் பொறுப்பேற்க முன்வந்திருந்தால், நான் அதற்காக முன்வந்திருக்க வேண்டிய தேவையும் வந்திருக்காது. நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் புதிய பொருளாதார முறையுடன் நிலையாக முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டும். இதுவரையான பயணத்தின் போது, பணம் அச்சிடுவதை நிறுத்துவது, அதிக கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்துவது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது.
அரசாங்க வருமானத்தை அதிகரிக்க VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதனால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து டொலரின் பெறுமதியும் 300 ரூபாயாக குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 10% - 40% வரை குறைந்தது.
அது போதுமானதல்ல இன்னும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். அடுத்த வருடம் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும் போது வாழ்க்கைச் செலவை இன்னும் குறைக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தற்போதுள்ள ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும்.
எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் வரி குறைப்பு தொடர்பில் பேசுகின்றனர். வரிகளை குறைப்பதையே நானும் விரும்புகிறேன். இருப்பினும் பொருளாதாரத்தை பாதகத்தில் தள்ளிவிட்டு அதை செய்ய முடியாது.
தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும். கிரீஸ் எதிர்கொண்ட விளைவினால் சிலர் தொழிலையும் இழந்தனர்.
தொழில் இரத்து மற்றும் வருமான குறைப்பை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். போதிய வௌிநாட்டு வருமானம் இல்லாமல், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாது. வீட்டுக்காக வாங்குவதை போல் தொடர்ந்தும் நாம் கடன் வாங்க முடியாது. எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக கொண்ட நாடாக மாற வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் நவீனமயப்படுத்தவும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உலக சனத்தொகை அதிகரித்து வருவதால், ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவில், விவசாய ஏற்றுமதியை விரிவுபடுத்தும் முயற்சிகளுடன் இலங்கையும் இணைத்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் வடக்கில் புதிய முதலீட்டு வலயங்களை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சூரிய மற்றும் காற்றாலை சக்தி மூலம் மின்சார உற்பத்தியை பலப்படுத்தல் போன்ற செயற்பாடுள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
நான் யாழ்ப்பாணத்தின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தின் பிரச்சினைகளை அதிகாரப் பகிர்வில் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. இப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி காணப்பட்ட போதிலும் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி இல்லை.
போருக்கு முன்னர், யாழ்ப்பாணம் கொழும்பு, கண்டி மற்றும் காலியுடன் இணைந்து நாட்டின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நகரமாக மாறியிருந்தது. இன்று யாழ்ப்பாணத்தை விட காலி மற்றும் மட்டக்களப்பு நகரங்கள் அபிவிருத்தி அடைந்துள்ளன.
எனவே நாம் இப்போது யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் பின்வருமாறு.
கேள்வி:
கடந்த சில தசாப்தங்களில் வட மாகாணத்தில் அமைந்துள்ள பல அரச தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையை உங்கள் அரசாங்கம் எப்படி தீர்க்கும்?
பதில்:
கடந்த சில தசாப்தங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பரந்தனில் சீமெந்து தொழிற்சாலை போன்ற நிறுவனங்கள் யுத்தத்தினால் செயலிழந்தன. எவ்வாறாயினும், தற்போது புதிய முதலீட்டு வலயத்திற்கு காங்கேசந்துறைப் பிரதேசத்தை பயன்படுத்த உள்ளோம்.
முதல் பகுதி காங்கேசன்துறை பகுதியிலும், இரண்டாம் கட்டம் பரந்தன் பகுதியிலும், மூன்றாம் கட்டம் மாங்குளம் பகுதியிலும் அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் வலயத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
சுற்றுலாத் துறையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். சர்வதேச போட்டித் தரத்தை அடையும் வகையில் வடக்கில் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதிலேயே எனது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும் கூற வேண்டும். மீன்பிடித்துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி விரைவில் வடக்கில் உண்மையான நிதி ஆதாரமாக மாறும்.
கேள்வி:
தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி செல்வாவும் நானும் செயற்கை நுண்ணறிவை மையமாக வைத்து ஐந்தாண்டு திட்டமொன்றைத் தயாரித்து ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளோம். அது உங்களுக்குத் தெரியுமா?
பதில்:
தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் தொடர்பான அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை காத்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு மையம் நிறுவப்பட்டதும், அது உங்களுடையதும் மற்றும் அது போன்ற திட்டங்களையும் ஒருங்கிணைக்கும்.அமைச்சர் கனக ஹேரத்தும் அமைச்சின் செயலாளரும் தற்போது அந்த அறிக்கையில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM