இந்நாட்டில் 75 வருடங்களாக முன்னாள் ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லை என்றும், தங்களுக்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பொய்களை சொல்லி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தளையில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நாட்டில் 1948 களில் 3,188 பாடசாலைகள் மட்டுமே காணப்பட்டதெனவும், தற்போது அநுரகுமார திசாநாயக்க கல்வி கற்ற தம்புத்தேகம மத்திய கல்லூரி உள்ளடங்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் நாட்டில் உள்ளதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்று ஒரோயொரு அரச பல்கலைக்கழகம் மட்டுமே இருந்த நிலையில் இன்று 17 அரச பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாகியுள்ளன.
அதனால் வருடாந்தம் 1278 எம்.பீ.எஸ் பட்டதாரிகளும், 1,600 பொறியல் பட்டதாரிகளும் வருடாந்தம் வௌியாகின்றனர் என்றும், 1950 களில் 470 டொலர் மில்லியன்களாக காணப்பட்ட ஏற்றுமதி வருமானம் 16 டொலர் பில்லியன்களாக அதிகரித்திருப்பதோடு, 1948 நாட்டின் நீர்பாசன தொழில் துறையின் கீழ் காணப்பட்ட எட்டு இலட்சத்து அறுபதாயிரம் ஏக்கர்களுக்கு பதிலாக இன்று 21 இலட்சம் ஏக்கர்கள் காணப்படுவதால் இரண்டு பெரும்போகங்களை விளைவிக்க முடிந்துள்ளது.
அதனால் அநுரவும் சஜித்தும் நாட்டு மக்களிடம் பொய் சொல்லக்கூடாதென வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் கவிழ்த்து நாட்டு மக்களை வீதியில் தள்ளுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை. மாத்தளை அரசியலில் இரு குழுக்கள் பற்றி பேச வேண்டும். ஒருவர் டீ.பி.தென்னகோன்.
தம்புள்ளையை தனது வலுவான ஆசனமாக பேணி வந்தார். மறுமுனையில் அலிக் அலுவிஹார அவருடன் இணைந்து அரசியல் செய்திருக்கிறேன். ஜே.ஆர். ஜயவர்தனவின் வெற்றிக்கு பாடுபட்டிருக்கிறோம். அலிக் அலுவிஹார உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். அவர் உயிரோடு இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காரரை தும்புத் தடியால் அடித்து விரட்டியிருப்பார்.
எவ்வாறாயினும், இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படுவதில்லை. மாறாக 2022 பொருளாதார வீழ்ச்சியை கண்ட மக்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் வந்துள்ளது. அதனால் எதிர்காலத்திற்காக நமக்கு தெரியாத இடத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எமது நிலையான எதிர்காலதிற்கான வழியை அறிய வேண்டும். நாட்டில் நெருக்கடி வந்தபோது எவரும் நாட்டை பொறுப்பேற்க வரவில்லை. சஜித் தப்பியோடினார். இங்குள்ள சில தோட்டங்களில் நிர்மாணிப்பதாக உறுதியளித்த வீடுகளையும் சஜித் இடைநடுவில் கைவிட்டு ஓடியுள்ளார். அவற்றை நான் அமைத்து தருகிறேன்.
அனுரகுமார திசாநாயக்க வாய் திறக்கவே இல்லை. ஹர்ஷ தம்மால் முடியாதென ஒப்புக்கொண்டார். இலங்கையில் முதல் முறையாக பிரதமர் பதவி யாசகம் சென்றது உலக சாதனையாகும். அதனைக் கூட ஏற்றுக்கொள்ள அன்று தலைவர்கள் இருக்கவில்லை. நாம் ஏற்றுக்கொண்ட பின்னர் எமக்கு ஆதரவளிக்கவும் அவர்கள் முன்வரவில்லை.
ஆனால் நாம் IMF உடன் பேசினோம். எமது கடன் நூற்றுக்கு 120 சதவீதமாக இருந்தது. அதனைக் குறைக்குமாறு IMF வலியுறுத்தியது. சிறிய தொகையிலேனும் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினர். பணம் அச்சிடவும் தடைபோட்டனர். வங்கிகளில் கடன் பெறக்கூடாதெனவும் வலியுறுத்தினர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு ஓடச் சொல்வதை போல் இருந்தது. இருப்பினும் சவாலை ஏற்றுக்கொண்டோம்.
கஷ்டத்துக்கு மத்தியில் விரும்பமின்றியேனும் வரியை அதிகரித்தோம். பொருட்களின் விலை இரட்டிப்பானது. நாட்டு மக்கள் கஷ்டத்தில் விழுந்தனர். மக்கள் என்னை திட்டித் தீர்த்தனர். ஆனால் நாட்டின் பொருளாதாரம் சுமுக நிலைக்கு வர ஆரம்பித்தது. பொருட்களின் விலை குறைய ஆரம்பித்து. இப்போது கிடைத்திருக்கும் நிவாரணம் போதுமானத்தல்ல.
இன்றும் மக்களுக்கு உணவுப் பிரச்சினைகள் உள்ளன. அந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2025ஆம் ஆண்டை இலக்கு வைத்திருக்கிறோம். அதற்காக நாம் முதலில் 'அஸ்வெசும' நிவாரணம் வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு உதய செனவிரத்ன அறிக்கையை மையப்படுத்தி சம்பளத்தை அதிகரித்தோம். வரிச்சலுகை வழங்கியிருப்பதோடு, வாகன இறக்குமதியை ஆரம்பித்திருக்கிறோம்.
இவ்வாறு படிப்படியாக சென்று அடுத்த வருடத்தில் மேலும் வளர்ச்சியடைவோம். வரிச் சுமையும் படிப்படியாக குறையும். இன்றும் கஷ்டங்கள் உள்ளதென ஏற்றுக்கொள்கிறேன். கிறீஸ் போன்ற நாடுகள் அரச ஊழியர்களை நீக்கிவிட்டு, சேவையில் தக்க வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும் 50 சதவீத்தினால் சம்பளத்தை குறைத்தது. நான் அவ்வாறு செய்யவில்லை.
எதிர்வரும் காலங்களில் அரச, தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். வௌிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல தொழில் பயிற்சி வழங்குவோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கம். மாத்தளையில் விவசாய நவீனமயமாக்களை செயற்படுத்துவோம். அதேபோல் சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை, கொக்கோ, கோப்பி உற்பத்திகளையும் பலப்படுத்துவோம் என்றார்.
தம்புளையில் தொழிற்சாலைகளை அமைப்போம். இப்போது செல்லும் பாதையே சிறந்தது. இதே பயணத்தைத் தொடருவோம்.
அநுரகுமாரவின் வழிகாட்டலில் வரவு செலவு திட்டத்தைத் தயாரித்தால் 2025ஆம் ஆண்டு டொலரின் பெறுமதி 400 ரூபா வரை அதிகரிக்கும். அதனால் IMF நிபந்தனைகள் மீறப்படும். அப்படிச் செய்தால் டொலரின் பெறுமதி தலையெடுக்கும். இப்போது கிடைக்கும் உதவிகள் தடைப்படும். அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய போகிறார்கள் என்ற கேள்வியையே அவர்களிடம் கேட்கிறேன்.
அநுர என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். நானும் தயார். ஆனால் அவர்களின் பொருளாதார முறை பற்றி சரியாக விளக்கமளிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டது. எனது கேள்விக்கு அநுர பதிலளிக்கவில்லை. திருடியவர்களிடம் பணத்தை மீட்போம் என்று சொல்கிறார்கள். இன்னும் திருடியவர்களையே தேடிப்பிடிக்கவில்லை. 2015 - 2019 வரையிலான காலத்தில் 400 கோப்புகளை வழங்கினோம். ஆனால் 15 கோப்புகளை மட்டுமே அவர்களால் திருப்பித் தர முடிந்தது.
எனவே, அவர்கள் மக்களுக்கு இன்று பொய் சொல்கிறார்கள். எனது கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடியவில்லை. இன்று அதிகமாக சுங்க வரியை அதிகரித்திருப்பதாக சாடுகிறார்கள். திசைக்காட்டியின் வரவு செலவு திட்டத்தின் படி பார்க்கையில் அதற்கு எங்கிருந்து பணம் தேடுவது என்ற கேள்வி உள்ளது.
கேள்விகளுக்கு உரிய பதில் வழங்குவதை விடுத்து மற்றையவர்களை திருடர்கள் என்றும், அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பளித்து பார்க்குமாறும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறார்கள். நாட்டை ஆட்சி செய்தவர்கள் 75 வருடங்களாக நாட்டு மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். ஆட்சியிலிருப்பவர்களை அடித்து துரக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசியலில் இருப்பவர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில், 1948 களில் 3,188 பாடசாலைகள் மட்டுமே இருந்தன. இன்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. அன்று 13 இலட்சம் மாணவர்களே இருந்தனர். இன்று 47 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அன்று ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. இன்று 17 பல்கலைக்கழங்கள் உள்ளன. தம்புத்தேகமை பாடசாலைக்கும் நானே புதிய கட்டிடத்தை வழங்கினேன்.
இன்று ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிறோம். 1950 களில் 470 மில்லியனாக இருந்த ஏற்றுமதி வருமானம் 16 பில்லியனாக அதிகரித்திருக்கிறது. நீர்ப்பாசனத்தின் 8 இலட்சத்து 60 ஆயிரமாக இருந்த நீர்ப்பாசன கட்மைபுக்கள் 21 இலட்சமாக அதிகரித்துள்ளன. அதனால் இரண்டு பெரும்போக விளைச்சல்களையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.
எனவே, மக்களிடம் பொய் சொல்லி வாக்கு திரட்டக்கூடாது. உண்மையை சொன்னால் என்னை திட்டித்தீர்க்கின்றனர். விவாதத்திற்கு நான் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்களின் பொருளாதார முறை எதுவென்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பொய் சொல்வோருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டுமா? மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க வேண்டுமா? எனவே மக்களிடம் உண்மையை பேச வேண்டும்.
மறுமுனையில், சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த கட்சிக்கு இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள் உள்ளன. ஒன்றில் கூறப்படும் சலுகை மற்றைய விஞ்ஞானபத்தில் இரத்தாவிடும். சஜித் போகுமிடம் எல்லாம் இலவச சலுகைகளை வழங்குகிறார்.
மக்களுக்கு தலைவலியையும் இலவசமாக தருகின்ற வல்லமை அவரிடமே உள்ளது. மேற்படி இருவரில் ஒருவரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் சிறக்காது என்றார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
நான் 12 தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருபோதும் வாக்களித்ததில்லை. அவர் துணிச்சலைக் கண்டு இம்முறை அவரோடு கைகோர்த்திருக்கிறோம். எதிர்கட்சியினர் தங்களிடம் நல்ல அணி உள்ளதென கூறிக்கொண்டாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் போல சவால்களை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருக்கவில்லை.
அடுத்த வருடத்துக்காக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிய பின்பே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைப்பார். எனவே சிலிண்டருக்கு வாக்களிப்பதால் மாத்திரமே சம்பள உயர்வு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்
நாடு கஷ்டத்திலிருந்த வேளையில் அந்த கஷ்டத்தை மேலும் உக்கிரப்படுத்தவே சிலர் முயற்சித்தனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் பக்கம் நின்றுகொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை செய்தார். எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் துணிச்சல் கருதியே நாம் அவருக்கு வாக்களித்தோம்.
நாட்டின் பொருளாதாத்தை பற்றிய விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர மற்றைய வேட்பாளர்கள் கதைப்பதே இல்லை. நல்லது செய்தவர்களை என்றும் நாம் மதித்தத்தில்லை. நாட்டுக்கு இலவச கல்வியைத் தந்த கண்ணங்கராவும் அடுத்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் நன்றிக்கடன் செய்யவேண்டியவர்களை நாம் ஒருபோதும் ஒதுக்கிவைக்கக் கூடாது. அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். அதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தி அவரோடு பயணிக்க தீர்மானித்திருக்கிறோம். என்றார்.
இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க
பதினான்கு மணி நேர மின் தடை இருந்ததையும் மறந்துவிடக் கூடாது. அன்று மெழுவர்த்திகளுடன் வாழ்ந்த நாட்கள் இருந்தன. அன்று ஓடிப்போன தலைவர்கள் இன்று வந்து வாக்கு கேட்கிறார்கள்.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை கொடுத்தபோது அனுரவும் சஜித்தும் தங்கள் இருவரும் செயற்திறன் அற்ற தலைவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மேடையில் பேசுவதை கேட்டு சஜித் பிரேமதாச மறுநாள் அவரின் பொதுக்கூட்டங்களில் அவற்றைப் பேசுவது வேடிக்கையானது.
அதேபோல் நாட்டுக்குள் முதல் முறையாக நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடிந்திருக்கிறது. 1550களின் பேர்த்துக்கேயர்கள் வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்க மாத்தளை மக்கள் உயிர் தியாகம் செய்து போராடியுள்ளனர். எனவே, இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் மக்களால் உறுதி செய்யப்படும்" என்றார்.
முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல
பாராளுமன்றத்திலிருந்து எதற்காக விலகினேன் என்று கேட்கிறார்கள். ஆனால் நான் அந்தஸ்த்துகளுக்கான ரகசிய டீல் செய்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் சிலர் அவரிடத்தில் ரகசியமாக சென்று அமைச்சு அந்தஸ்த்துக்களைக் கோரியிருந்தனர். அந்த நிலைக்கு ஒருபோதும் நாம் செல்லவில்லை. இருப்பினும், விரும்பமின்றி ஒரு இடத்தில் இருக்கக் கூடாது என்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ஏற தீர்மானித்தேன்.
ஜனாதிபதி எல்லா வேளைகளிலும் சவாலை ஏற்றுக்கொள்வார். ஐக்கிய மக்கள் சக்தியினர் IMF பேச்சுவார்த்தை தோற்றுப்போகும் என்றனர். ரணில் ஆட்சி ஆறு வருடங்களில் முடங்கிவிடும் என்றார்கள். ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என்று சொன்னார்கள். ஆனால் அவை அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயலில் காட்டியுள்ளார்." என்றார்.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துசாமி சிவலிங்கம்
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் 76 ஆண்டுகள் இந்த நாட்டின் சாபம் என்று முன்னாள் ஆட்சியாளர்களை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத்தின் தந்தையாக போற்றப்படும் டீ.எஸ்.சேனநாயக்கவை தேசத்தின் சாபம் என்று சொல்ல முடியுமா? சிறிமாவோ பண்டாரநாயக்க, பண்டாரநாயக்க போன்றவர்களை இலங்கையின் சாபம் என்று மக்களால் சொல்ல முடியுமா?
அதனாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்திருக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்கியிருக்கும் அதேநேரம், லயன்களை கிராமங்களாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் முன்மொழிந்திருக்கிறார்.
இவ்வாறான தலைவர்கள் சாபம் என்று கருதி புதியவர்களுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள், இன்றைய பங்களாதேஷின் நிலைமையைப் பார்த்துவிட்டு, அந்த நாட்டில் 15 மணித்தியால மின்வெட்டுக்கு மத்தியில் மக்கள் அல்லல்படும் நிலை இலங்கைக்கும் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM