மீரா ஸ்ரீனிவாசன்
தற்போது கடுமையாக சிந்திப்பதைப் போன்று முன்னர் ஒருபோதும் ஒரு தேர்தலுக்கு முன்னதாக சிந்தித்ததில்லை என்று புத்திக திசாநாயக்க என்ற பெண்மணி கூறினார். "முன்னதாக எமது குடும்பம் பரம்பரையாக ஆதரித்த கட்சிக்கு நாம் வாக்களித்தோம். அது சுலபமான தெரிவாக இருந்தது" என்று இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர வயதான அவர் தெரிவித்தார். முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் சில தினங்களே இருக்கின்ற போதிலும் அவர் ஒரு முடிவுக்கு வரமுடியாதவராக இருக்கிறார்.
சுமார் ஒரு கோடி 70 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராகும் செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு மாத்திரமல்ல இலங்கை வாக்காளர்களில் பெருமளவானோருக்கு அந்த திரிசங்கு நிலை இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்ப்பட்ட 2019 தேர்தலுக்கும் தற்போதைக்கும் இடைப்பட்ட ஐந்து வருடங்களில் நாட்டின் அரசியல் கோலங்களும் பொருளாதாரப் பாதையும் பெருமளவுக்கு மாறிவிடடன. அதன் விளைவாக முன்னைய தேர்தல்களை விடவும் இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.
இதற்கு முன்னரான எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் மத்திய இடது போக்குடைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மத்திய வலது போக்குடைய ஐக்கிய தேசிய கட்சியும் அல்லது அவற்றில் இருந்து பிரிந்த கட்சிகளும் ஒவ்வொரு வேட்பாளரை களத்தில் இறக்கின. அந்த ஒவ்வொரு தேர்தலிலும் எதிரெதிரான கோட்பாடுகளைக் கொண்ட இருவருக்கு இடையிலானதாக அமைந்த தேர்தல் போட்டியில் தெளிவான வெற்றியாளரை காணக்கூடியதாக இருந்தது.
ஆனால், இந்த தடவை மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டியிடும் மிகவும் சிக்கலான தேர்தல் களத்தை வாக்காளர்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. பதவியில் இருந்து விரட்டப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இடத்துக்கு பாராளுமன்றத்தினால் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரின் பிரதான போட்டியாளர்களாக எதிச்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் களத்தில் நிற்கிறார்கள்.
வீழ்ச்சிகண்ட இலங்கை பொருளாதாரத்தை சீர்செய்து உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அடுத்த அரச தலைவரையும் அரசாங்கத்தையும் தெரிவுசெய்வதில் எதிர்நோக்கும் பாரிய பொறுப்பைச் சுட்டிக்காட்டிய புத்திக திசாநாயக்க " நாம் மிகவும் கடுமையாக சிந்தித்து அவதானமாக தெரிவைச் செய்யவேண்டும் " என்று கூறினார்.
குருநாகல் வெளிநாடுகளில் வீட்டுப்பணிப் பெண்களாக பெரும் எண்ணிக்கையான பெண்மணிகளை அனுப்பிக் கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாகும். குருநாகல் நகரத்தின் பிரதான வீதியின் நடுப்பகுதியில் நீளத்துக்கு வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிறுவனங்களின் விளம்பரங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் பாதுகாப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குபவராக செயற்பட்டுவரும் புத்திக திசாநாயக்க பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவான சிக்கன நடவடிக்கைகள் காரணமாக பெருவாரியான குடும்பங்கள வறுமையில் மூழ்கியதையடுத்து வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு அந்தரிக்கும் பலரைச் சந்திக்கிறார். " எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும், அவர் தலைவிரித்தாடும் ஊழலை ஒழித்து எமது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவேண்டும். தற்போதைய நிலைவரம் தொடருவதை எம்மால் அனுமதிக்க முடியாது" என்று அவர் சொன்னார்.
2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது மக்கள் கிளர்ச்சி மூண்டது. மக்கள் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாட்டுக்கும் மின்வெட்டுக்கும் எதிராக மாத்திரம் வீதியில் இறங்கிப் போராடவில்லை, தாங்கள் வெறுத்த " ஊழல்தனமான " பழைய அரசியல் ஒழுங்கையும் உறுதியாக நிராகரித்தார்கள். கிளர்ச்சி செய்த மக்கள் " முறைமை மாற்றத்தை " வேண்டிநின்றார்கள்.
மாற்றத்துக்கான அந்த முழக்கமே இப்போது பல இலங்கை வாக்காளர்களை வழிநடத்தும் பிரதான தேர்தல் தர்க்க நியாயமாக வளர்ச்சி யடைந்திருக்கிறது.
"2022ஆம் ஆண்டில் ராஜபக்சாக்களை மக்கள் விரட்டியடித்தபோது தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதைக் காட்டினார்கள். அதற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தலான இந்த ஜனாதிபதி தேர்தலில் எமக்கு புதிய ஒருவர், முன்னையவர்களை விடவும் வேறுபட்ட ஒருவர் எமக்கு தேவை. எமக்கு மாற்றம் தேவை " என்று கூறி சூலா மிஹிராணி என்ற குடும்பப் பெண்மணி பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன் மறுசீரமைப்பு குறித்து முடிவின்றி விவாதிக்கிறார்கள். ஆனால் மிஹிராணியின் வீட்டில் பிரச்சினை தொடருகிறது.
"வாழ்க்கைச் செலவு தாங்கமுடியாததாக இருக்கிறது. எனது மகன் இறுதிப்பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார். அவரை தனியார் பிரத்தியேக வகுப்புக்கு அனுப்புவதோ அல்லது போக்குவரத்து ஒழுங்கைச் செய்வதோ எமக்கு கட்டுப்படியாகாது" என்று அவர் கூறினார். சாரதியாக வேலை செய்யும் தனது கணவரின் வருமானத்தில் முற்றுமுழுதாக தங்கியிருக்கும் அவரது குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறிய வயல் இருப்பதால் விளைச்சல் வீழ்ச்சியடைந்த போதிலும் பட்டினியில் இருந்து தப்பியிருக்கிறது.
"நிலைவரம் மேம்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். யாருக்கு மேம்படுகிறது. எமது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை நாம் இடைநிறுத்தியதன் காரணமாகவே இந்த இடைஓய்வுகூட வந்தது. கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நிலைவரம் மேலும் கடுமையானதாகப் போகிறது என்று மிஹிராணி கூறினார்.
இனநெருக்கடி முக்கியமான பிரச்சினையாக மாறுவதற்கு முன்னர், இறுதியாக 1977 ஆம் ஆண்டிலேயே தேசிய தேர்தல் ஒன்றை பொருளாதார அக்கறைகள் ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் வளர்ந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி அவரை தேர்தலில் தோற்கடித்து ஜே. ஆர்..ஜெயவர்தன மகத்தான வெற்றி பெற்றார்.
அரை நூற்றாண்டுக்கு பிறகு ஜெயவர்தனவின் மருமகனான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தனது அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை தொடருவதற்கு மக்களின் ஆணையைக் கேட்டுநிற்கிறார். வீதிகளில் இருந்து எரிபொருள் வரிசைகளை இல்லாமல் செய்ததற்காகவும் ஓரளவு நிதி உறுதிப்பாட்டைக் கொண்டு வந்தமைக்காகவும் விக்கிரமசிங்கவை அவரது ஆதரவாளர்கள் பாராட்டுகின்ற அதேவேளை, வேதனைமிகு சிக்கன நடவடிக்கைகள் காரணமாக எரிபொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதையும் மறைமுக வரிகள் 18 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவரைக் குறைகூறுபவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இவையெல்லாம் மிஹிராணியின் குடும்பத்தைப் போன்ற எண்ணற்ற குடும்பங்களை கடுமையாகப் பாதிக்கிறது. கொழும்பில் புகழப்படுகின்ற உறுதிப்பாடு அவர்களின் வாசற்படியை இன்னமும் சென்றடையவில்லை.
மறுபுறத்தில், இரு வருடங்களுக்கு முன்னர் நிலவிய தட்டுப்பாடுகளுக்கு பிறகு இப்போது அத்தியாவசியப் பொருட்களைப் பெறக்கூடியதாக இருக்கும் நிலைவரத்தை விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாடு என்று நோக்குகிறார்கள். இப்போது விநியோகங்களை பெறக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் வறிய குடும்பங்களினால் உயர்ந்த விலைக்கு அவற்றை பெறமுடியாமல் இருக்கிறது.
இந்த யதார்த்த நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்க பதவிக்கு வந்தபிறகு ஏற்பட்ட மாற்றத்தை காண முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக ராஜபக்சாக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த விக்கிரமசிங்க அபகீர்த்திக்கு உள்ளான அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றையே நடத்துகிறார்.
தெரிவுசெய்தல்
அதேவேளை, முன்னர் வலிமைபொருந்தியதாக விளங்கிய ராஜபக்ச என்ற பெயர் ஜனாதிபதி தேர்தலின் பின்புலத்தில் முக்கியத்துவம் இல்லாததாக போய்விட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதில் மக்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை இது காட்டுகிறது. 2020 பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு மகிந்த ராஜபக்ச பெருவெற்றி பெற்றதோதிலும் கூட நிலைமை இவ்வாறாக இருக்கிறது. அவரது மகன் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், உண்மையான போட்டி மூன்று பேருக்கு இடையிலானதாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று அவரது ஆட்சிதொடருமானால் அதில் பயன் இருக்கும் என்று சிலர் குறிப்பாக கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்ற அதேவேளை மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்கத் தீர்மானித்திருப்பவர்கள்பிரேமதாசவுக்கும் திசாநாயக்கவுக்கும் இடையில் தெரிவைச் செய்வதில் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
"நன்கு நிலைபெற்ற அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவராக பிரேமதாச விளங்குகின்ற போதிலும் நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்பை அவர் ஒருபோதும் பெற்றதில்லை. அவருக்கு இருக்கும் அனுபவத்தைக் கொண்டு அவரால் நன்றாக ஆட்சி செய்யக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று பாத்திமா றினோஷா என்பவர் கூறினார். பிரேமதாச பரீட்சித்துப் பார்க்கப்படாத ஒரு தலைவராக இருக்கின்றபோதிலும் அவர் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவாக அந்த பெண்மணி குரல் கொடுக்கிறார் என்று தெரிந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக தமிழர்கள் மத்தியில் விரும்பப்படுகின்ற வேட்பாளராகவும் பிரேமதாச நோக்கப்படுகிறார். மேலும், மார்க்கிய தொடக்கத்தைக் கொண்ட திசாநாயக்கவின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) முதலில் 1971 ஆம் ஆண்டிலும் பிறகு 1987 - 1989 காலப் பகுதியிலும் முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சிகளின் பயங்கரமான அனுபவங்களின் நினைவுகளைக் கொண்ட தென்பகுதி வாக்காளர்கள் திசாநாயக்கவையும் விட பிரேமதாசவை கூடுதலான அளவுக்கு விரும்புகிறார்கள் என்று குருநாகலில் இயங்கும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் சுமிகா பெரேரா கூறுகிறார்.
அவ்வாறு இருந்தபோதிலும், தங்களுக்கு சலித்துப்போன பழைய அரசியல் முறைமையில் இருந்து முற்றுமுழுதான ஒரு விலகலை பிரேமதாச பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று சில வாக்காளர்கள் கூறுகிறார்கள். பிரிந்துவந்து ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய ) தொடங்குவதற்கு முன்னதாக பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தார்.அவர் ஜே வி.பி. கிளர்ச்சியாளர்கள் மீது அரச பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனாவார்.
"ரணிலும் சஜித்தும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்" என்று கூறும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகரான கே விஜேரத்ன "அரசியல் அதிகார வர்க்கத்தின்" அங்கமாகவே இருவரையும் நோக்குகிறார்.
"அதிகரித்த வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்காக எமது வருமானம் சகலதையும் செலவுசெய்கிறோம். ஒரு சதத்தையேனும் சேமிப்பதில்லை. இந்த நெருக்கடி கூலித் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு வர்த்தகர்கள் என்று எம்மெல்லோருக்கும் துன்பத்தை தருகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு முற்றுமுழுதான ஒரு முறைமை மாற்றம் எமக்கு தேவை" தம்புள்ள பொருளாதார மையத்தில் உள்ள தனது கடைக்கு அருகில் வைத்து விஜேரத்ன கூறினார். அவர் தனது வாகனத்தை விற்கவேண்டியேற்பட்டது. வேறு பலர் நெருக்கடியைச் சமாளிக்க தங்களது நகைகளை அடகு வைத்தார்கள் அல்லது நுண்கடன்களைை எடுத்தார்கள்.
"எவருமே நாளைக்கே தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. ஆனால், ஆநுரா குமார திசாநாயக்க மாத்திரமே ஊழலை ஒழித்துக்கட்டி மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவர். அவர் ஊழல்தனமான அரசியல் வர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்ல" என்று விஜேரத்ன கூறினார்.
அதே காரணத்துக்காகவே மிஹிராணியும் திசாநாயக்கவை ஆதரிக்கிறார். பாரம்பரியமான பிரதான போக்கு அரசியல் முகாம்களைச் சேர்ந்த போட்டி வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது திசாநாயக்க இலங்கையின் அரசியல் அதிகார உயர் வர்க்கத்தில் இருந்து வேறுபட்டவர். மேலும் அவரது தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டங்கள், வீடுவீடாக பிரசாரம் மற்றும் சிறிய கூட்டங்கள் மூலமாக கடுமையான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. இலங்கையின் கிராமப் புறங்களில் குறிப்பாக தென்பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் வீதிகள் எங்கும் திசாநாயக்கவின் சுவரொட்டிகளை அடிக்கடி காணக்கூடியதாக இருக்கிறது. மற்றைய பிரதான வேட்பாளர்களின் சுவரொட்டிகளை அரிதாகவே காண முடிகிறது.
அயல் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசாங்க ஊழியரான எஸ். எச். ராஸி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி உணர்ச்சி வசப்படுபவராக இல்லை. ஆனால், 2022 அறகலயவுக்கு பிறகு " ஓரளவு நம்பிக்கையை " தரும் " ஒரே வேட்பாளராக " அவர் திசாநாயக்கவையே கருதுகிறார். " இலங்கை இளைஞர்கள் இந்திய விவசாயிகளிடம் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டார்கள். இப்போது பங்களாதேஷ் இளைஞர்கள் இலங்கை இளைஞர்களிடம் இருந்து படிக்கிறார்கள். கிளர்ச்சி எமக்கு நம்பிக்கையை தந்தது. அதில் இருந்து கட்டியெழுப்பி நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்" என்று அவர் சிரித்துக்கொண்டு சொன்னார்.
தேர்தல் கூட்டணிகள் (குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டணிகள்) ஊடாக பிரேமதாச படிப்படியாக ஆதரவைப் பெற்று வருகின்ற போதிலும், " மாற்றத்தின் சின்னமாக" ஆதரவாளர்கள் மனக்கிளர்ச்சியுடன் திசாநாயக்கவுக்கு வழங்கும் அங்கீகாரமும் முன்னணியில் இருப்பதாக காட்டும் பல கருத்துக் கணிப்புகளும் அவரை தேர்தல் போட்டியில் முன்னரங்க வேட்பாளராக்கியிருக்கின்றன.ஆனால், வாக்காளர் சனத்தொகை கடுமையாக பிளவுபட்டிருக்கும் நிலையில் எந்த வேட்பாளரானதும் வெற்றி குறித்து நிச்சயமாக கூறுவதற்கு இது தருணமல்ல என்பது வாக்காளர்களுக்கு தெரியும்.
அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ நகரைச் சேர்ந்த ஒரு விவசாயியான எஸ்.ஆர். கருணாரத்ன யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு அவசரப்படவில்லை. ஏனென்றால் சகலரினதும் வாழ்வை சிறப்பானதாக்கக்கூடிய " யதார்த்தபூர்வமான பொருளாதாரத் திட்டத்தை " எந்தவொரு வேட்பாளரும் முன்வைத்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.
"இவ்வளவு காலமும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக இறக்குமதிகள் மீதே நாம் தங்கியிருந்தோம். எமது பிள்ளைகளினாலும் கூட இந்த கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தி முடிக்க முடியாத அளவுக்கு நாம் இன்று நாம் கடனாளிகளாக இருக்கிறோம் " என்று கருணாரத்ன கூறினார்.
(தி இந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM