சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை' படத்தின் ஒடியோவை வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி

Published By: Vishnu

14 Sep, 2024 | 06:46 AM
image

அறிமுக நாயகன் ஏகன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி இப்படத்தின் ஒடியோவை வெளியிட்டனர்.

தேசிய விருதினை வென்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' எனும் திரைப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, பவா செல்லத்துரை, லியோ சிவக்குமார், சத்ய தேவி, ஜெய சூர்யா, 'குட்டி புலி' தினேஷ், ரியாஸ், மானஸ்வி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். அண்ணன் - தங்கை உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , இயக்குநர் ஹரிஹரன்,  நடிகர் ரியோ ராஜ், விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.‌

படத்தைப் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், '' கோழிப்பண்ணை செல்லத்துரை எனும் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான  விடயத்தை அழுத்தமாக பேசுகிறது. வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்தவர்கள். இந்த வாழ்க்கையில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள்... வாழவே பிடிக்கவில்லை என விரக்தி அடைந்தவர்கள். இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று தனிமையில் புலம்புபவர்கள்...‌ இவர்களுக்கு இந்த திரைப்படத்தில் ஒரு செய்தி இருக்கிறது.

இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் ஒருபோதும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை பாதுகாக்கும். இதனை பார்வையாளர்கள் உணரும் வகையில் படைப்பு தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை பட மாளிகையில் வந்து ரசிக்கும் பார்வையாளர்களை ஒருபோதும் ஏமாற்றாது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right