(க.கமலநாதன்)
கண்டியில் இடம்பெறவுள்ள சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு சமூமளிக்காத அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக மத்திய குழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம் மேற்படி கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்கும் சுதந்திர கட்சிக்கு வலுசேர்க்கும் வகையிலான முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதானமாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் கண்டி கெடம்பே விளையாட்டரங்கிள் இடம்பெறவுள்ளது. அதற்கான அழைப்புக்களை ஏழுத்துமூலம் கட்சியின் மக்கள் பிரதி்நிதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம்.
கடந்த முறை காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் போன்று கட்சியின் சகல மக்கள் பிரதிநிதிகளும் கண்டியில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதற்கமைய 1600 பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வருவதாக கட்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது 2300 பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வருவோம் என்று கூறியுள்ளனர். அதனால் வருகின்ற நாட்களில் வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையிலான மே தின கூட்டத்தினை நடத்திக் காட்டுவோம்.
இலங்கையில் இடம்பெறும் பிரதான மே தினக் கூட்டமாகவும் இதுவே அமைந்திருக்கும். அதேநேரம் இந்த பணிகளை துரிதமாக முன்னெடுக்க புதிய அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளார். அந்த தீர்மானங்கள் சுதந்திர கட்சியினரின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து கட்சியை வலுப்படுத்துவதாகவும். நாட்டினை முன்னேற்றத்திற்கு துணை செய்யும் காரணிகளாவும் அமையும்.
அதேநேரம் இம்முறை கண்டியில் இடம்பெறவுள்ள மே தின கூட்டத்தில் எவரும் பங்கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சுந்திர கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.