தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த வருடாந்த பொதுக்கூட்டத்துடன், 25வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது

13 Sep, 2024 | 12:14 PM
image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (Tea Exporters Association - TEA) தனது 25வது வருடாந்த பொதுக்கூட்டத்தை (Annual General Meeting - AGM) கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலின் Grand Marqueeஇல் நடாத்தியுள்ளது. தேயிலைத் தொழில்துறையின் நாட்காட்டியில் மிகவும் முக்கியமான ஒரு  நிகழ்வாகக் கருதப்படுகின்ற  இந்நிகழ்வில், தொழிற்துறையுடன் தொடர்புபட்ட 500க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதிப்புக்குரிய விருந்தினர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். 

TEAஇன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதுடன் இணைந்ததாக இச்சங்கம் இலங்கையின் தேயிலை தொழில்துறை மீது கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற சர்வதேச சவால்களுக்கு மத்தியில் எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுத்து, அதிலிருந்து வெளிவருவதில் அதன் தொடர்ச்சியான ஆற்றல் குறித்து காண்பிப்பதற்கான வாய்ப்பாக இந்த AGM அமையப்பெற்றது.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளரான திரு. கெவோர்க் சர்க்சியன் அவர்கள் பிரதம அதிதியாக AGM நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளார். 

“Steeping Sustainably - Growing Tea Exports Responsibly” (நிலைக்குத்தான நிலைபேற்றியல் - தேயிலை ஏற்றுமதியை பொறுப்புணர்வுடன் வளர்ச்சி பெறச் செய்தல்) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு இடம்பெற்றதுடன், தொழில்துறையினுள் நிலைபேணத்தக்க நடைமுறைகளை ஊக்குவிப்பதில் சங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளை எதிரொலிக்கும் வகையில் இது அமையப்பெற்றது.

1999ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கமானது நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதியின் அளவிலும், பெறுமானத்திலும் சுமார் 80%இனை பிரதிநிதித்துவம் செய்தவாறு, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் முன்னணி குரலாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தொழில்துறையில் கொள்கைகளை வடிவமைப்பதில் இச்சங்கம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இலங்கை (சிலோன்) தேயிலையை சர்வதேச மட்டத்தில் மிளிரச் செய்வதை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக உழைத்து வந்துள்ள இச்சங்கம், தொழிற்துறை குறித்த பல்வேறு முயற்சிகளை முன்னின்று மேற்கொண்டுள்ளது.

AGM நிகழ்வின் போது, தொழிற்துறைக்கு ஆற்றியுள்ள விலைமதிப்பற்ற பங்களிப்புக்களுக்காக சங்கத்தின் முன்னாள் தலைவர்களைப் போற்றும் வகையில் நினைவுச்சின்னங்களை வழங்கி, சங்கம் அவர்களைக் கௌரவித்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக திரு. ஹஸிஃபா அக்பரலி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விடைபெற்றுச் செல்லும் தலைவர் திரு. கணேஷ் தெய்வநாயகம் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றுகையில், “நான் எனது பதவியிலிருந்து விடைபெறும் இத்தருணத்தில், ஒரு தொழிற்துறையாகவும், ஒரு அமைப்பாகவும் நாம் சாதித்துள்ளவற்றையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்.

எனினும், இன்னமும் பல சவால்கள் காணப்படுகின்றன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் 263 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்திருந்த இலங்கை, 598 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியிருந்தது.

தற்போது முன்னரை விட 20 மில்லியன் கிலோ குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கின்றமைக்கு மத்தியிலும், எமது வருமானத்தை இரட்டிப்பாக்கி, 1.3 பில்லியன் டொலர் தொகையை ஈட்டி வருகின்றோம். இது சிலோன் தேயிலையின் உலகளாவிய மதிப்பு மற்றும் மவுசை காண்பிப்பது மாத்திரமன்றி, நாம் இன்னமும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாத வளர்ச்சி வாய்ப்புக்களையும் காண்பிக்கின்றது. நாம் ஏற்றுமதி செய்யும் அளவுகளை எம்மால் தொடர்ந்தும் பேண முடியுமாயின், இது மூன்று பில்லியன் டொலர் வருமானமீட்டும் தொழிற்துறையாக மாறும்.

எனினும், ஏற்றுமதியாளர்கள் என்ற ரீதியில், எமது துறை குறித்த பிற்போக்கான கண்ணோட்டத்தால் எமது நிதிப்பாய்ச்சலுக்கு சுமையாகவுள்ள வரிவிதிப்பு மூலமாக நாம் கணிசமான முட்டுக்கட்டைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனினும், புள்ளிவிபரங்கள் உண்மையை நிரூபிக்கின்றன. நாம் மிகச் சிறந்த பணியை ஆற்றியுள்ளதுடன், சரியான ஆதரவு கிடைக்கப்பெறும் பட்சத்தில், எமது நெகிழ்திறன் எம்மை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்லும்,” என்று குறிப்பிட்டார்.

அண்மைக்காலங்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பாதித்துள்ள சவால்கள் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தியவாறு, தேயிலை தொழிற்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கான மேடையாகவும் இந்த AGM நிகழ்வு அமையப்பெற்றது.

2023 ஆம் ஆண்டில் 256,039 மெட்ரிக் தொன் அளவை இலங்கையின் தேயிலை உற்பத்தி எட்டியுள்ளதுடன், காலநிலை மாற்றத்தின் தாக்கம், போதுமான மீள்வளர்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 2019 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சிப் போக்குக்கு முகங்கொடுத்துள்ளது.

இயற்கையாகவே இது ஏற்றுமதிகளையும் பாதித்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டில் 292,000 மெட்ரிக் தொன்னாக காணப்பட்ட ஏற்றுமதி, 2023 ஆம் ஆண்டில் 241,912 மெட்ரிக் தொன்னாக வீழ்ச்சி கண்டுள்ளமை இத்தொழில்துறையை நிலைபெறச் செய்வதில் மூலோபாயரீதியான தலையீடுகளின் அவசர தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எனினும், நாட்டின் தேயிலை ஏற்றுமதிகளைப் பொறுத்தவரையில், வீழ்ச்சி கண்டுள்ள அளவுகளுக்கு மத்தியிலும், ஆண்டுதோறும் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை தொடர்ந்தும் ஈட்டித்தந்துள்ளதுடன், தேசிய பொருளாதாரத்திற்கான முக்கியமான பங்களிப்பாளராக தொடர்ந்தும் காணப்பட்டு, சர்வதேச சந்தையில் சிலோன் தேயிலையின் ஒப்பற்ற தரம் மற்றும் பிரபலத்தை காண்பிக்கின்றது.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த திரு. சர்க்சியன் அவர்கள் சவால்கள் மற்றும் தலைப்படும் வாய்ப்புக்களை சுட்டிக்காட்டி கருத்து வெளியிடுகையில், “சிலோன் தேயிலை சுவைத்து வளர்ந்த ஒருவர் என்ற அடிப்படையில், இத்தொழிற்துறை மீது எனக்கு எப்போதுமே ஆழ்ந்த பிணைப்பு உள்ளது. இலங்கை தேயிலைத் தொழில்துறையானது முக்கியமான பொருளாதார தூணாகவும், தேசத்தின் பெருமையாகவும், தனித்துவமான அடையாளமாகவும் மாறியுள்ள நிலையில், அண்மைக்காலங்களில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது.

காலநிலை மாற்றம், சீரற்ற கொள்கைகள் மற்றும் சர்வதேச சந்தைப் போட்டி ஆகியவற்றால் இத்தொழிற்துறை தொடர்ச்சியாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில், உச்சமாக தேயிலை வளரும் பிரதேசங்களில் 2070 ஆம் ஆண்டளவில் 30 சதவீத்தால் குறைவடையும் என சமீபத்தைய ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. இலங்கையின் தேயிலைத் தொழிற்துறையை நிலைபெறச் செய்வது பன்முகப்பட்ட சவாலாக காணப்படுகின்ற போதிலும், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். பொருளாதார மீட்சியை நோக்கி இலங்கை பயணித்து வருகின்ற இத்தருணத்தில், தேயிலை தொழிற்துறைக்கு புத்துயிரளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு படியாகும். ஷ

தனித்துவமான இந்த வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் நிலைபேற்றியலை உறுதி செய்வதற்கு, அரச மற்றும் தனியார் துறையினர் என, தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் தமது முயற்சிகளை ஒன்றாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒட்டுமொத்த கட்டமைப்பின் மத்தியிலும் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நிலைபேற்றியல் கொண்ட மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதற்கு அத்தகைய முயற்சிகள் உதவுகின்றன,” என்று குறிப்பிட்டார்.

2025 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் வகையில் SVAT திட்டத்தை கைவிடும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்தும் இந்த AGM நிகழ்வில் முக்கியமாக பேசப்பட்டது. காகித ஆவண நடைமுறைகளற்ற SVAT திட்டமானது, ஏற்றுமதியாளர்கள் தமது பணப்பாய்ச்சல் தேவைப்பாடுகளிலுள்ள முட்டுக்கட்டைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு கணிசமான மட்டத்தில் உதவுகின்றது. முன்னைய முறைமையின் கீழ், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து VAT மீளளிப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட நீண்ட காலதாமதங்கள் காரணமாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கு உதவும் வகையில் 2011 ஏப்ரலில் SVAT அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

SVAT வசதியை இரத்துச் செய்வது குறித்து, பல்வேறு காரணங்களை முன்னிட்டு தேயிலை ஏற்றுமதியாளர்கள் அக்கறை கொண்டுள்ளனர். தேயிலை ஏற்றுமதியாளர்களின் நிதி கணிசமான காலப்பகுதிக்கு முடக்கப்படும் நிலை எழுவதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்கனவே பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், SVAT திட்டத்தை இரத்துச் செய்வதால் அவர்களுக்கு நிதியின் திரவத்தன்மை குறித்த பிரச்சனைகள் எழுகின்றன.

அந்த வகையில், இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்த விடயங்கள் AGM நிகழ்வின் கலந்துரையாடல்களின் போது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டதுடன், குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்களின் கொடுப்பனவு நடைமுறைகளை சிக்கல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ரஷ்ய வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள நிதித்தடைகள் குறித்து ஆராயப்பட்டது. மாற்றம் கண்டு வருகின்ற சந்தைப் போக்குகளுக்கேற்ப, நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய முக்கிய தேவை குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக, பாரம்பரியமான தேயிலை கலவைகளை விட, மூலிகை மற்றும் பழச்சுவை உள்ளீடுகளைக் கொண்ட தேயிலை வகைகளுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் மவுசு அதிகரித்து வருவதால், அது குறித்து மேலெழுகின்ற வாய்ப்புக்களை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

- தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தலைவர் காமராஜரின் 49ஆவது நினைவு தினம்

2024-10-03 18:21:30
news-image

கொழும்பு ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு...

2024-10-03 16:23:25
news-image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “கனலி” மாணவர் சஞ்சிகை...

2024-10-02 18:29:40
news-image

யாழ். பல்கலையில் ஊடகக் கற்கைகள் மாணவர்களின்...

2024-10-02 18:21:48
news-image

மகாத்மா காந்தி நினைவுப் பேருரை 

2024-10-02 16:27:28
news-image

நாத பரதம் - 2024 

2024-10-02 13:49:45
news-image

கனலி மாணவர் சஞ்சிகையின் ஐந்தாவது இதழ்...

2024-10-02 15:00:00
news-image

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு...

2024-10-01 17:20:07
news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது...

2024-10-01 17:02:28
news-image

நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் வழங்கும்...

2024-10-01 09:34:10
news-image

குவியம் விருது வழங்கல் விழா!

2024-09-30 17:12:44
news-image

கேகாலை சாந்த மரியாள் தேவாலயத்தின் 172...

2024-09-30 16:33:47