சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால் கம்போடியாவை வெற்றிகொண்ட இலங்கை அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது 

Published By: Vishnu

11 Sep, 2024 | 12:58 AM
image

(நெவில் அன்தனி)

கம்போடியா, நொம் பென்ஹ் தேசிய விளையாட்டுத் தொகுதி விளையாட்டரங்கில் செவ்வாய்கிழமை (10) இரவு நடைபெற்ற இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் தீர்மானம் மிக்க இரண்டு பெனல்டிகளை அணித் தலைவர் கோல்காப்பாளர் சுஜான் பெரேரா தடுத்ததன் பலனாக இலங்கை 4 - 2 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சரிசமமாக மோதிக்கொள்ளப்பட்ட இந்தப் போட்டி முழு நேரத்தைத் (90 நிமிடங்கள்) தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

கொழும்பில் நடைபெற்ற முதலாம் கட்ட தகுதிகாண் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இரண்டு கட்டப் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்தன.

இதன் காரணமாக வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு மத்தியஸ்தரால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது.

கம்போடிய வீரர் டோயங் நிக்கலஸ் டெய்லர் வலப்புறமாக உதைத்த பெனல்டியை நோக்கி சரியான திக்கில் தாவிய சுஜான் பெரேரா அதனை முஷ்டியால் தடுத்து நிறுத்தினார்.

கம்போடியாவின் இரண்டாவது பெனல்டியை ஓன் சன்போலின் உதைக்க, பந்து சுஜான் பெரேராவின் வலது கையை உராய்ந்தவாறு வெளியே சென்றது.

இதனிடையே முதல் இரண்டு பெனல்டிகளை ஜெக் டேவிட் ஹிங்கேர்ட், சமுவெல் டுரன்ட் ஆகிய இருவரும் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கம்போடியாவும் இலங்கையும் மாறிமாறி தலா 2 பெனல்டிகளை புகுத்தின.

இலங்கை சார்பாக ஒலிவர் ஜேம்ஸ் கெலாட், லியோன் பெரேரா ஆகியோரும் கம்போடியா சார்பாக லிம் பிசோத், சோயி விசால் ஆகியோரும் பெனல்டிகளைப் புகுத்தினர்.

இதற்கு அமைய 4 - 2 என்ற பெனல்டி முறையில் இலங்கை வெற்றிபெற்றது.

வெற்றிக்காக போராடிய அணிகள்

கொழும்பில் நடைபெற்ற முதலாம் கட்டப் போட்டி வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடிவடைந்ததால் கம்போடியா தேசிய விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கையும் கம்போடியாவும் இரண்டாம் கட்டப் போட்டியை எதிர்கொண்டன.

சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட முதலாவது பகுதியில் இரண்டு அணியினரும் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 38ஆவது நிமிடத்தில் ஆதவன் ராஜமோகன் தனி ஒருவராக பந்தை நகர்த்திச் சென்று கோல் போட எத்தணித்தபோது கம்போடியாவின் பெனல்டி எல்லைக்குள் தடுக்கி விழுந்தார்.

அதே நேரம் பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த ஒலிவர் ஜேம்ஸ் கெலாட் பந்தை ஓங்கி உதைத்து கோலினுள் புகுத்த, இலங்கை 1 - 0 என முன்னிலை அடைந்தது.

42ஆவது நிமிடத்தில் கம்போடிய வீரர் நியோன் சொசிடான் கோல் போட எடுத்த முயற்சியை இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா வலப்புறமாகத் தாவி தடுத்து நிறுத்தினார்.

இடைவேளையின் பின்னர் போட்டியின் 51ஆவது நிமிடத்தில் நியோன் சொசிடான் 22 யார் தூரத்திலிருந்து அருமையான கோல் ஒன்றைப் போட்டு கம்போடியா சார்பாக கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கம்போடியா பந்தை தன்னகத்தே வைத்துக் கொண்டு சிறந்த பரிமாற்றங்களில் ஈடுபட்டு இலங்கை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் கம்போடிய அணித் தலைவர் யுதாய் ஒகாவா இரண்டாவது மஞ்சுள் அட்டையிலிருந்து தப்பித்துக்கொண்டார். எற்கனவே 57ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டைக்கு இலக்காகியிருந்த யுதாய் ஒகாவாவுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டிருந்தால் கம்போடியா 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டிருக்கும்.

இதனைத் தொடர்ந்து போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தின் 99ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோர்ணர் கிக்கின் போது இலங்கை கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி மோ கான்  தனது குதிக்காலால் பந்தை பின்நோக்கி நகர்த்தினார்.

அப் பந்தைப் பெற்றுக்கொண்ட மாற்று வீரர் சொஸ் சுஹானா மிக  இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி கம்போடியாவை 2 - 1 என முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த இலங்கை கடுமையாக முயற்சித்தது.

மேலதிக நேரம் 120 நிமிடங் களைக்    கடந்து உபாதை ஈடு நேரத்திற்குள் போட்டி பிரவேசித்தது. 122ஆவது நிமிடத்தில் இடது மத்திய களத்திலிருந்து மொஹமத் அமான் உயர்வாக பரிமாறிய பந்தை குளோடியோ மத்தாயஸ் தனது தலையால் கோலை நோக்கி பின்னால் முட்டினார்.

ஆனால், பந்து கோலின் குறுக்கு கம்பத்தில் பட்டு மீண்டும் முன்னோக்கி வந்தது. உடனடியாக செயற்பட்ட மத்தாயஸ் பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை 2 - 2 என இலங்கை சார்பாக சமப்படுத்தினார்.

தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து பெனல்டி முறையை மத்தியஸ்தர் அமுல்படுத்தினார். 

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் நேபாளத்தை 2015இல் வெற்றிகொண்ட பின்னர் அந்நிய மண்ணில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

எவ்வாறியம் சிநேகபூர்வ சர்வதேச போட்டி ஒன்றில் பங்களாதேஷை டாக்காவில் 2019இல் இலங்கை வெற்றிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66...

2024-10-08 23:48:29
news-image

20இன் கீழ் மத்திய  ஆசிய சங்க...

2024-10-08 23:21:20
news-image

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை...

2024-10-08 16:28:06
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024:...

2024-10-08 15:00:26
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண பி...

2024-10-08 02:40:08
news-image

அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் ...

2024-10-08 02:03:36
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர்...

2024-10-07 13:52:12
news-image

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப்...

2024-10-07 13:14:10
news-image

தேசிய லீக் ஒருநாள் கிரிக்கெட்: யாழ்ப்பாணத்தை...

2024-10-07 13:36:48
news-image

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக்...

2024-10-06 23:29:24
news-image

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6...

2024-10-06 20:50:19
news-image

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

2024-10-05 23:31:16