(நா.தனுஜா)
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் கடந்த 15 வருடங்களில் எந்தவொரு அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத பின்னணியில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் இருவருடங்களுக்குப் புதுப்பிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளன.
அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்குத் தவறுவதானது உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் பேரவையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கின்ற துரோகமாகவே அமையும் எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரவையின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது.
இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.
அதனையடுத்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், அதன் பின்னர் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றன. இலங்கை நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய பேரவை
மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய பேரவை, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமைகள் பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் உரையாற்றிய அஹமட் அடம், 'இலங்கையில் உள்நாட்டுப்போரின்போது இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கும், தற்போது முக்கிய உயர் பதவிகளை வகிப்போர் உள்ளடங்கலாக அக்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என சந்தேகிக்கப்படுவோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அரசியல் ரீதியான தன்முனைப்புடன்கூடிய முழுமையான மாற்றமொன்று அவசியமாகும்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரின் நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிசெய்வதும், அப்பகுதிகளில் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளைத் தாமதமின்றி உரிமையாளர்களிடம் கையளிப்பதும் இன்றியமையாததாகும்.
இருப்பினும் கடந்த 15 வருடகாலமாக எந்தவொரு அரசாங்கத்தினாலும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில், மனித உரிமைகள் பேரவையானது அரசியல்சார் சிந்தனைகளுக்கு அப்பால் மனித உரிமைகளைசார் சிந்தனையின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளப்புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அன்றேல் அது உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் பேரவையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கின்ற துரோகமாகவே அமையும்' என்று குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 'இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணிப்பதற்கும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றைப் பாதுகாப்பதற்குமான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நெருக்கடிநிலை குறித்து தொடர் அவதானிப்பை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும், எதிர்கால மீறல்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாகும். எனவே இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை மேலும் இரு வருடங்களுக்குப் புதுப்பிக்குமாறு பேரவையை வலியுறுத்துகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு
இலங்கை தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 'இலங்கையில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான அடக்குமுறைகள், கண்காணிப்புக்கள் என்பன தொடர்கின்றன.
கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய சிலருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களினால் சட்டவாட்சியின் அடிப்படைக்கோட்பாடுகள் புறந்தள்ளப்பட்டுள்ளன.
மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் பயன்பாட்டில் இருப்பதுடன், அது குறிப்பாக தமிழர்களை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்படுகின்றது. கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலின்மை மற்றும் மேலோங்கியுள்ள தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பன இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியில் அதன் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்குத் தயார்நிலையில் இல்லை என்பதையே காண்பிக்கின்றன. ஆகவே இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்குமாறு பேரவையிடம் கேட்டுக்கொள்கின்றோம்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல்
'இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தவறியிருக்கின்றது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் நிலவும் பின்னடைவு குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கும் தீர்மானத்தை மேலும் இருவருடங்களுக்குப் புதுப்பிக்குமாறு பேரவையை வலியுறுத்துகின்றோம்' என பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு
உலக சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் அறிக்கையில், 'இலங்கையில் மத சிறுபான்மையினர் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். குறிப்பாக நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அரச கட்டமைப்புக்களால் மத சிறுபான்மையினரின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு பல்வேறு விதங்களில் இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.
அதேபோன்று அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இலங்கை நிலைவரங்களை சர்வதேச சமூகம் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM