தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட உத்தேசம் : 14 ஆம் திகதி மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருக்கவும் தீர்மானம்!

Published By: Vishnu

10 Sep, 2024 | 08:57 PM
image

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்திருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை (10)  வவுனியாவில் கூடிய ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான கட்சியின் விசேட குழு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

 நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக கடந்த மாத இறுதியில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாதம் முதலாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார்.

 அதேவேளை மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று லண்டனில் இருந்த சிறிதரன், சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கிய உத்தரவாதம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதற்குத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

 இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடியது.

தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். அத்தோடு எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிதரன், அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவே முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் அது அவருடைய விருப்பம் எனும்போதிலும், கட்சி அதற்கு அனுமதி அளிக்காது எனத் தாம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10