சிவலிங்கம் சிவகுமாரன்
‘எமது குயில்வத்தை பிரதேசத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலையானது சட்டவிதிகளுக்கு உட்பட்டே அமையவுள்ளதாக எமது பிரதேச கிராம அதிகாரி கூறுகிறார். அதாவது ஐந்நூறு மீற்றர்களுக்குள் பாடசாலைகளோ, வணக்கஸ்தலங்களோ இல்லை என்றும் ஆகையால் நோர்வூட் பிரதேச செயலகம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது அவரது கூற்று. ஆனால் மதுபானசாலை திறக்கப்பட்டால் சட்டவிதிகளுக்கு அப்பால் இடம்பெறப் போகும் சம்பவங்கள், கலாசார சீரழிவுகள் குறித்தே நாம் கவலைப்படுகின்றோம். அந்த விடயம் அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாது. ஏனென்றால் அவர்கள் இந்த பிரதேசத்தில் வசிக்கவில்லை தானே’ என்கிறார் குயில்வத்தை பிரதேசத்தின் இளைஞர் கணேஷ்’
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பிரதேசத்தில் அட்டன் மார்க்க பிரதான வீதியின் ஓரத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலை பற்றி கடந்த வருட இறுதியிலிருந்தே இப்பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து தமது ஆட்சேபனைகளுடனும் நூற்றுக்கணக்கான கையொப்பங்களுடனான மனு ஒன்றும் அம்பகமுவ பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. தற்போது இப்பிரிவு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. அங்கு மேற்படி மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர் பிரதேச இளைஞர்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 01 ஆம் திகதியும் பிரதேச மக்களால் புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளுக்கு அழைக்கவில்லை
அம்பகமுவ பிரதேச செயலகத்தில் ஆட்சேபனைகளை கையளித்தும் அது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு தம்மை அழைக்காமால் வேறு யாரையோ அழைத்து பேச்சு நடத்தி அனுப்பி விட்டனர் என்கின்றனர் குயில்வத்தை பிரதேச இளைஞர்கள். அதே வேளை இவ்விடத்தில் மதுபானசாலையானது சட்டத்தின் பிரகாரமே அமையவுள்ளதாக கிராம அதிகாரி தெரிவித்தாலும் எதிர்கால ஆபத்து பற்றி எவரும் அக்கறை கொள்கிறார்கள் இல்லையென குயில்வத்தைப் பிரிவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘இந்த இடத்திலிருந்து சில மைல் தூரத்திலேயே குயில்வத்தை சிவனாலயம் அமைந்துள்ளது. நாகநாதர் சித்தர் தவமிருந்த குகைக் கோயில் அது. வரலாற்று சிறப்புமிக்கது. ஆலய திருவிழா மற்றும் உற்சவ நாட்களில் சுவாமி தேர் வலம் இடம்பெறும். தற்போது மதுபானசாலை அமையவுள்ள இடத்துக்குக்கு எதிர்புறமாகவே தேர் நிறுத்தப்படும். எங்கள் குயில்வத்தை தோட்டப்பிரிவில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் அதிகமான பேர் வாழ்ந்து வருகின்றோம். ஒவ்வொரு ஆலய நிகழ்வுகளின் போதும் இந்த இடத்திலேயே அனைவரும் பூஜை தட்டுகளை வழங்கி வழிபடுவோம். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையே உள்ளது. ஆனால் மதுபானசாலை திறக்கப்பட்டு விட்டால் இவ்விடத்தில் தேர் நிறுத்த முடியாது. எம்மால் பூஜைகளை நடத்த முடியாது. இது எமது சமய கலாசார விடயங்களை முற்றாக சிதைக்கும் செயற்பாடு’ என பிரதேசத்தின் ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் ஒருவர் கூறுகின்றார்.
மேலும் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இப்பிரதேச மாணவர்கள் மதுபானசாலையை கடந்தே செல்கின்றனர். அவர்கள் பாடசாலை முடிந்து வரும் போது இவ்விடத்தில் அசெளகரியங்களை எதிர்நோக்கலாம். மேலும் இந்த இடத்தில் நிரந்தர பஸ் தரிப்பிடம் இல்லையென்றாலும் மதுபானசாலை அமையவுள்ள இடத்துக்கு முன்பாகவே சகல பஸ்களும் நிறுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிகாட்டுகிறார்.
ஆலய நிகழ்வுகளில் கலந்து கொள்ள அச்சம்
இதே வேளை மேற்படி குயில்வத்தை சிவனாலயத்தில் இடம்பெறும் சகல உற்சவ நிகழ்வுகளிலும் இப்பிரதேசத்திலுள்ள சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொள்வதாக பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ‘சிவராத்ரி, நவராத்ரி மற்றும் பிரதோஷ காலங்களில் இரவு நேர பூஜைகளிலும் பல வருடங்களாக எந்த இன்னல்களும் இல்லாது
இம்மார்க்கத்தில் வட்டவளையிலிருந்து செனன் வரை ஏழு கிலோமீற்றர் மார்க்கத்தில் ஏற்கனவே மூன்று மதுபானசாலைகள் இருப்பதை சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள் இவ்விடத்தில் ஒரு சதொச விற்பனை நிலையத்தை அமைத்தால் கூட தமக்கு பிரயோசனமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
அரசியல்வாதிகளின் மெளனம்
இதே வேளை கடந்த வருட இறுதியிலிருந்து இப்பிரதேசத்தில் மதுபானசாலை வேண்டாம் என மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் தமது எதிர்ப்பையும் முன்னெடுத்து வந்தாலும் இது குறித்து மாவட்ட அரசியல்வாதிகள் எவரும் கண்டுகொள்வதாக இல்லை. அது குறித்து எந்த அறிவிப்பையும் அவர்கள் விடுத்திருக்கவில்லை. இதன் காரணமாக இந்த மதுபானசாலை திறக்கப்படுவதற்கு பின்னணியாக அரசியல்வாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை பிரதேச மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவ்விடத்துக்குச் சென்ற மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் பிரதேச மக்களுடன் இது குறித்து கதைத்து பிரச்சினைகளை அறிந்தார். பின்பு அவ்விடத்திலிருந்து மாவட்ட செயலாளருடன் தொடர்பினை ஏற்படுத்திய அவர், சட்டரீதியாக மதுபானசாலை அமைக்க தடைகள் இல்லாவிட்டாலும் இதற்கு பிரதேச மக்கள் தமது முழுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் மக்களின் குரலுக்கு பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் செவி சாய்க்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவ்விடத்தில் மதுபானசாலையை திறக்காமலிருக்க தான் உடன் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்ததாக வே.இராதாகிருஷ்ணன் எம்.பி மக்களிடம் கூறினார்.
அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பிரதேச இளைஞர்கள் பின்வருமாறு கேள்வியொன்றை அவரிடம் முன்வைத்தனர். ‘நீங்கள் ஆதரவு தரும் ஜனாதிபதி வேட்பாளர் எமது பிரதேசத்துக்கு வருகை தரும் போது எமது மாவட்டத்தில் மேலதிகமாக மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கக் கூடாது என்ற கோரிக்கையை நிபந்தனையாக முன்வைக்க முடியுமா’ என்று கேட்டனர். அதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பி ‘ நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கின்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். தான் ஜனாதிபதியானால் பல மதுபான அனுமதி பத்திரங்களை இரத்து செய்யவுள்ளதாக உறுதியாக கூறியுள்ளார். ஆகவே அது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை ‘ என்று தெரிவித்தார்.
இது தேர்தல் காலமாகையால் மக்களுக்கு அரசியல்வாதிகள் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறி வருகின்றனர். மக்களின் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மதுபானசாலைகள் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விடயத்திலும் அவர்கள் உளசுத்தியுடன் தான் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள் என்பதை ஆராய வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தினால் நாடெங்கினும் புதிய இருநூறு மதுபானசாலை உரித்துகள் விநியோகிக்கப்பட்டதாக பாராளுமன்றத்திலும் விமர்சிக்கப்பட்டிருந்தன. சில சந்தர்ப்பங்களில் குயில்வத்தை புதிய மதுபானசாலையும் தேர்தலுக்குப்பின்னர் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை.
எனவே புதிய மதுபானசாலைகள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும் முன்னெடுப்போர் இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM