கலாநிதி ஜெகான் பெரேரா
ஜனாதிபதி வேட்பாளர்களை ஒரே மேடைக்குக் கொண்டுவந்து அவர்கள் தங்களது நோக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சிவில் சமூகக் கூட்டமைப்பான ' மார்ச் 12' இயக்கம் முன்னெடுத்த முயற்சி அதன் இரண்டாவது சுற்றில் வெற்றிகரமானதாக அமைந்தது.
விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆறு ஜனாதிபதி வேட்பாளர்களும் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே பங்குபற்றி தங்களது நோக்குகளையும் எதிர்காலத்துக்கான அபிலாசைகளையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களது செய்தி இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.
'ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதம் ' (Presidential Debate ) என்று நிகழ்ச்சிக்கு தலைப்பிடப்பட்ட போதிலும் , அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளதைப் போன்றதாக இது அமையவில்லை. அந்த நாட்டில் விவாதங்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான சொற்சமராக இருக்கும். ஆனால், அதன் இலங்கையின் வடிவத்தில் ஒரே மாதிரியான கேள்விகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்கப்படும்போது அவர்கள் குறிக்கப்பட்ட நேர வரையறைக்குள் அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களுக்கு இடையில் விவாதித்தில் ஈடுபடுவதை விடுத்து பொதுநலன்களுக்குரிய விவகாரங்களில் தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதே மார்ச் 12 இயக்கத்தின் நோக்கமாகும். வேட்பாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பிறகு கேள்விகளை எழுத்துமூலம் சமர்ப்பாக்குமாறு பார்வையாளர்களிடம் கேட்கப்படும். அவர்களது கேள்விகள் ஒரு குழுவினால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் பதில்களுக்காக வேட்பாளர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஆனால், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிசெய்வதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்த போதிலும், முன்னைய தினம் விவாதத்தில் பங்குபற்றுவதற்கு ஆறு வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரமே வந்திருந்தார். மூன்று பிரதான வேட்பாளர்கள் உட்பட மற்றையவர்கள் இணைந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் முன்கூட்டியே மறுத்திருந்தார்கள் அல்லது உரிய நேரத்துக்கு அரங்கிற்கு வரவில்லை. இது பார்வையாளர்களுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சிவர் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் புத்தளம் பகுதிகளில் இருந்து வந்திருந்தார்கள்.
வேட்பாளர்களுக்கு இடையிலான மும்முனைப் போட்டியின் நெருக்கமான தன்மை தங்களது செல்வாக்கில் இல்லாத பார்வையாளர்கள் கூட்டம் ஒன்றின் முன்பாக தங்களை முன்னிறுத்துவதற்கு அவர்களில் எவரும் விரும்பாத ஒரு அழுத்தமான சூழ்நிலைக்கு வழிவகுக்கின்றது போன்று தெரிகிறது. இது ஒரு எதிர்மறையான காட்சியாகும். ஏனென்றால், பொது விவகாரங்கள் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள், தந்திரோபாயங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு இடையிலான பகிரங்க மோதல் பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்கும் பொதுவான எதிர்காலம் ஒன்று பற்றிய உணர்வுடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது குறித்து புதிய சிந்தனைகளை உருவாக்குவதற்கும் பயனுடையதாக அமையும்.
வழமை போன்று இருவருக்கு இடையிலானதாக இல்லாமல் இந்த தடவை மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலானதாக அமைந்த போட்டி அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பதில் கவனத்தைச் செலுத்துகின்ற எதிர்மறைப் பிரசாரத்துக்கு வழிவகுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.
நெருக்கமான போட்டி
தனது பிரதான போட்டியாளர்களான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுடனும் ஒப்பிடும்போது ( விகிதாசார அடிப்படையில் ) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் காண்பிக்கின்றன. ஆனால், இதே கருத்துக்கணிப்புகள் தனது போட்டியாளர்களை விடவும் வி்க்கிரமசிங்க பின்னணியில் இருப்பதாகவும் காட்டுகின்றன. தங்களது போட்டியாளர்களின் குணாதிசயங்களை விமர்சிப்பதன் மூலமாக எதிர்மறையான பிரசாரங்களில் ஈடுபடுவது போன்று செயறனபாடுகளில் வேட்பாளர்கள் நாட்டம் காட்டுவது இதற்கு காரணமாக இருக்கலாம்.
அதேவேளை, நாட்டின் மிகவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான அவசியம் தொடர்பில் நேர்மறையான பிரசாரங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பரந்தளவில் உலகத்துடன் இலங்கையின் பொருளாதார உறவுகளுக்கு கதவுகளைத் திறந்துவிட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் அடிப்படைக் கட்டமைப்புக்கு இணங்கிச் செயற்படவேண்டிய தேவை தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளுக்கு இடையில் ஒரு சங்கமம் காணப்படுகிறது.
நாட்டின் இனநெருக்கடியை கையாளவேண்டிய தேவை தொடர்பிலும் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலும் சங்கமம் காணப்படுகிறது. சமத்துவம் மற்றும் நீதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் மக்களை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வழியில் அந்த நெருக்கடியை கையாளுவதற்கு அவர்கள் மூவரும் உறுதியளித்திருக்கிறார்கள். இன, மத சிறுபானமைச் சமூகங்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்கு அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடுமையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து மக்கள் மத்தியில் பிவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியலின் ஒரு அங்கமாக இனநெருக்கடி இருந்துவருவதால் அவர்கள் மூவரும் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் மிகவும் நேர்மறையானவை.
ஆனால், தேர்தல் போட்டியின் நெருக்கமான தன்மையின் விளைவாக அவர்களிடையே எதிர்மறையான பிரசாரங்களும் இடம்பெறுகின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தமிழ் வாக்காளர்களிடம் தனது வெற்றியைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும் தனக்கு வாக்களிக்கப் போகின்ற தென்பகுதி சிங்கள வாக்காளர்களுடன் சேர்ந்து வெற்றியடையும் பக்கத்தில் நிற்காதவர்களாகி விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அவரின் இந்த வேண்டுகோள் தனக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்றும் தனக்கு எதிராக வாக்களித்து வெற்றியில் பங்காளிகளாகும் சந்தர்ப்பத்தை இழக்கவேண்டாம் என்றும் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுகமான அச்சுறுத்தலாக வியாக்கியானப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அணுகுமுறை நேர்மறையானதாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நிகழ்த்திய உரைக்கு கொடுக்கப்படுகின்ற வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், எந்தவிதமான இனவாத உணர்வுடன் அநுரா குமார அந்த கருத்தை வெளியாட்டிருப்பார் என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் அவர் நாட்டில் இருந்து இனவாதத்தை ஒழிக்கவேண்டும் என்ற மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டுவருபவர் என்றும் கூறியிருக்கிறார்.
நாட்டில் தவறான ஆட்சிமுறையையும் ஊழலையும் ஒழித்துக் கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து பாடுபடப்போவதாகவும் தமிழரசு கட்சியின் பேச்சாளர் கூறியிருக்கிறார். இரு வருடங்களுக்கு முன்னர் சடுதியாக அரசாங்கத்தை மாற்றிய அறகலய பே்ராட்ட இயக்கத்தின் முக்கிய அம்சங்களான இந்த விவகாரங்களும் இன்னமும் உரிய முறையில் கையாளப்படவில்லை. சுமந்திரனின் பாராட்டத்தக்க இந்த கருத்துக்கள் இப்போது அவர் பக்கம் மாறுகிறார் என்ற வியாக்கியானங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
நல்லிணக்கப் பாங்கு
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி அண்மையில் எடுத்த தீர்மானத்திலும் சுமந்திரன் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தார். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையில் ஒரு தெரிவைச் செய்வதற்கும் எந்த வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனமும் கடந்தகால ஈடுபாடும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்ததோ அவரை தெரிவுசெய்வதற்கும் சுமந்திரன் கட்சியை வழிநடத்தியிருந்தார்.
அதேவேளை, தனது கட்சி வேறு அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் ஆதரிக்காவிட்டாலும் கூட தமிழ் மக்களின் நலன்களுக்காக அவர்களுடன் பகைமை பாராட்டாமல் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு தயாராயிருப்பதை அவர் வெளிக்காட்டியிருக்கிறார். வெறுப்பைக் காட்டுவதோ அல்லது வன்மத்தைச் சாதிப்பதோ அல்ல மற்றவர்களிடம் இருக்கும் சிறந்த அம்சங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதே நாட்டுக்கு இன்று தேவைப்படுகின்ற தலைமைத்துவ உணர்வாகும்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு இலங்கை மக்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இன்றைய தருணத்தில் தேவைப்படுவது தேசிய ஐக்கியமேயாகும். இலங்கை அரசியல் சமுதாயம் துருவமயமாதலினால் சிதறுப்படுவதோ அல்லது மேலும் துருவமயமாதலை ஊக்குவிக்கக்கூடிய வியாக்கியானங்களைச் செய்வதோ இன்று கட்டுப்படியாகாது.
இந்த கெடுதியான போக்கை உரியமுறையில் கையாளவேண்டியது அவசியமாகும். சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்துவது அவசியமாகும். மக்களின் வாக்குகள் மூன்று வழிகளில் பிளவுபடக்கூடிய ஒரு சூழ்நிலையில் துருவமயமாதல் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.
அரசாங்கங்கள் மாறினாலும் கூட அரசின் கொள்கைகள் நிலையானவையாக இருப்பதை உறுதிப்ப டுத்தக்கூடியதாக அடிப்படைப் பிரச்சினைகள் மீது தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை காணக்கூடிய அம்சங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளிக்காட்டுவதற்கு ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே அவர்களிடையே விவாதத்தை ஒழுங்கு செய்வதில் மார்ச் 12 இயக்கத்தின் நம்பிக்கையாகும். செய்தியாளர்கள் மகாநாடொன்றில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த உணர்வை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
"விபரங்களில் நாம் வேறுபட்டாலும் கூட அடிப்படை அம்சங்களில் ஆதரவாக ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய ஒருைஅரசியல் முறைமை எமக்கு தேவை " என்று அவர் கூறினார்.
தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் கூட வெற்றி பெறுகின்றவருக்கு ஆதரவை வழங்குவதில் ஈடுபாட்டைக் காட்டக்கூடியதாக நல்லெண்ணத்தை வெளிப்படுத்துதே ஜனாதிபதி வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற சவாலாகும். தேர்தல் பிரசாரங்களின்போது மக்கள் மத்தியில் உரையாற்றுவதிலும் போட்டியாளர்களை கையாளுவதிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளே எதிர்கால நல்லிணக்கத்திற்கான வாய்ப்பக்களை தீர்மானிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM