(நா.தனுஜா)
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதாகவும், எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கும், அதனைத்தொடர்ந்து தெளிவான ஊடக அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் உத்தேசித்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.
ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாதம் முதலாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார்.
இருப்பினும் யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப்பேரணிகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் பின்னர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்துக்குச் சென்று அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெல்லும் பட்சத்தில், தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன்கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனும் பொருள்பட மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை அல்லவா? என எழுப்பிய கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என நேரடியாகப் பதிலளிக்காத மாவை சேனாதிராஜா, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் சுகயீனம் காரணமாகத் தான் கலந்துகொள்ளவில்லை எனவும், அத்தீர்மானம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடவிருப்பதாகவும், அதில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு, சர்ச்சைகளின்றி சரியான சொற்பதங்களுடன் கூடிய ஊடக அறிக்கையொன்று வெளியிடப்படும் எனவும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தாம் எவ்வாறு செயற்படப்போகிறோம் என்பது பற்றித் தீர்மானிக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM