கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணி மாயஜாலம் நிகழ்த்துமா..?

Published By: Digital Desk 2

09 Sep, 2024 | 04:13 PM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி -அரவிந்த்சாமி இணைந்து நடித்திருக்கும் 'மெய்யழகன்' இம்மாதம் 27 ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகிறது. 

படத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் கிளர்வோட்டம் ஒன்றினை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சி. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' மெய்யழகன் ' எனும் திரைப்படத்தில் கார்த்தி -அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.‌

உறவுகளை மையப்படுத்தி உணர்வு ரீதியிலான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நட்சத்திர தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கிளர்வோட்டம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் குறு முன்னோட்டத்தில், கொச்சையான வட்டார வழக்குகளை இயல்பாக பேசி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். உறவுகளில் நேர்மையையும், நாகரீகத்தையும் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். 

மேலும், இந்த திரைப்படம் காவிரி நதி பாயும் டெல்டா பகுதி மக்களின் வாழ்வியலை இயல்பாக பேசுவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே '96' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா ஆகியோரின் நடிப்பில் அவர்களுக்கு இடையேயான  காதல் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தி மாயஜாலம் செய்து வெற்றியைப் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் மீண்டும் அதே போன்று ஒரு வெற்றியை கார்த்தி- அரவிந்த்சாமி கூட்டணியில் மாயஜாலம் செய்து நிகழ்த்துவாரா! என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்