ஏ.எல்.நிப்றாஸ்
ஜனாதிபதித் தேர்தல் களம் மாறிக்கொண்டே இருக்கின்றது. எந்த அபூர்வங்களும் எந்த நேரத்திலும் நடக்கலாம். ஏனெனில், சுமார் 10இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்கலாக மொத்தமாக வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள 01 கோடியே 71 இலட்சம் மக்களின் மனநிலையையும் அதில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற உள்ளார்ந்த மாற்றங்களையும் அச்சொட்டாக கண்டறியும் வல்லமை எந்தக்கருத்துக்கணிப்புக்களும் இல்லை என்பதே நிதர்சனமாகும்
இத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் இரு பிரதான வேட்பாளர்களை ஆதரிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவை தவிர அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கின்ற முஸ்லிம் மக்களும் உள்ளனர். ‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்திருக்கக் கூடாது’ என்று கூறுவார்கள். அந்த வகையில் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இது நல்லதொரு நகர்வாக கருத வேண்டியிருக்கின்றது.
இந்த விடயங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் !
முஸ்லிம் கட்சிகள் ஏதோவொரு உடன்பாட்டின் அடிப்படையில் அல்லது ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவி;த்திருக்கின்றன. அதற்காக மேடைகளில் உயிரைக் கொடுத்துப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் சில முஸ்லிம் எம்.பிக்கள் மதில்மேல் கடுவன் பூனையாக பதுங்கிக் கொண்டிருப்பதையும் கூர்ந்து நோக்குவோரால் அவதானிக்க முடிகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றது. இதற்கான கூட்டு ஒப்பந்தத்திலும் ரவூப் ஹக்கீம் ஒப்பமிட்டார். மக்கள் காங்கிரஸ் சில கோரிக்கைகளை முன்வைத்து சஜித்துடன் ஒப்பந்தம் செய்வதாக அறிவித்தது. மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியும் சில கோரிக்கைகளை மையமாக வைத்தே ஆதரவளிப்பதாக கூறுகின்றது.
பெருந்தேசிய தலைவர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விகள் இருந்தாலும் கூட, எந்த முன் நிபந்தனையும் இன்றி ஆதரவளிக்காமல் அல்லது பணத்திற்காக சோரம் போகாமல் உண்மையிலேயே ஏதாவது ஒரு எழுத்துமூல ஆவணத்தின் ஊடாக முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளன என்றால், அது வரவேற்கத்தக்க அணுகுமுறையே.
ஆனால், ஒரு விடயத்தை இங்கு நன்றாக கவனிக்க வேண்டியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தேசிய ரீதியிலான பல நல்ல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. பல முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் கூறப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையமாகக் கொண்ட முன்மொழிவுகள் என்று எதனையும் வெளிப்படையாகக் காண முடியவில்லை. அது நடைமுறைச்சாத்தியமற்றதும் கூட.
தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரி நிற்கின்ற இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு பற்றிய நேரடி முன்மொழிவுகள் இல்லை. அது சிங்கள மக்களின் வாக்குகளை குறைத்துவிடலாம். அத்துடன் இலங்கைச் சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்படியான அபூர்வ தீர்வுகள் வழங்கப்பட வாய்ப்புமில்லை.
ஆயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குதல் பற்றி இரு பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்திலும் குறித்துரைக்கப்பட்டுள்ளமை கவனிப்பிற்குரியது. 13ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் என்று சஜித் பிரேதாசவின் விஞ்ஞாபனம் கூறுகின்றது. இதேவேளை, அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்படும் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம், பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் புதிய பாராளுமன்றத்திற்கு பாரப்படுத்தப்படும் என்று ஒரு பொறியை வைத்துள்ளது.
உண்மையில், ஒரு நாட்டின் அரசியலமைப்பில் இருக்கின்ற ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் அவசியமற்றவை. அது இயல்பாகவே நடக்க வேண்டும். ஆயினும், 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது இதுவரை காலமும அரசாங்கங்களை எப்போதும் அச்சத்திற்குள்ளாக்கி வந்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமன்றி ஏனைய மாகாணங்களுக்கும் சில அதிகாரங்கள் பகிரப்படுவது, ஆபத்தாக வந்து முடியும் என்பதுதான் ஆட்சியாளர்களின் மனோநிலையாகும்.
இந்த 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முஸ்லிம்கள் குறுக்கே நிற்க முடியாது என்றாலும் கூட, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து முஸ்லிம் சமூகம் கடுமையான கரிசனையைக் கொண்டுள்ளது என்பதை மறுதலிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதை குறிப்பாக, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்க்கி;;ன்றனர். அதேபோல் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதை வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் விரும்பவில்லை அல்லது அச்சத்தோடு நோக்குகின்றனர் என்பதையும் அடிக்கோடிட்ட வார்த்தைகளால் கூற வேண்டியுள்ளது.
பொலிஸ் அதிகாரம் பகிரப்பட்டால் தமக்கு அது ஆபத்தாக வந்து முடியுமோ, காணி அதிகாரம் பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுமோ என்பது உட்பட பல ஐயப்பாடுகள் முஸ்லிம்களுக்கு உள்ளன.
அதிகாரப் பகிர்வை வழங்கப் போவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியும், சில முஸ்லிம் எம்பிக்களும், அதேபோல், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனவா?
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனால் முஸ்லிம் சமூகமும் பல நன்மைகளை அனுபவித்துள்ளது.
ஆனால், 13 இன் கீழ் வரும் காணி, பொலிஸ் போன்ற குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மிகவும் சர்ச்சைக்குரியவையாகவும் முஸ்லிம்களின் கரிசனைக்கு உட்பட்டதாகவும் இருந்து வருகின்ற நிலையில் இதனை அமுல்படுத்தப் போவதாக கூறுகின்ற வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அரசியல் அணிகள் ஆதரவளிக்கின்றன என்றால் அது எந்த அடிப்படையிலானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதுபற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதாவுல்லா, முசாரப், அலிசாஹிர் போன்றவர்கள் கலந்துரையாடினார்களா இது எந்த எல்லை வரை அமுலாக்கப்படும் என்று உறுதி பெற்றார்களா? அல்லது 13 இனை அல்லது 13 பிளஸை முழுமையாக அமுல்படுத்த வாhக்குறுதி அளித்துள்ள சஜித் பிரேமதாசவிடம் றவூப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும் இது குறித்து பேசி விளக்கம் கேட்டார்களா? என்பதுதான் இங்குள்ள கேள்வி.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த்தரப்பு கோரி வருகின்றது. இதுதான் தமிழ் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனத்தின் சாரம்சமும் ஆகும். தமிழரசுக் கட்;சி வெளிப்படையாக ஒப்பந்தமொன்றை செய்யாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு கனதியான வாக்குறுதியை பெற்றுக்கொண்டே சஜித்திற்கான ஆதரவை அளித்துள்ளதாக அனுமானிக்க முடிகின்றது.
ஏனெனில் தமிழரசு கட்சியின் இந்த முடிவுக்குப் பின்னால் இந்தியா இருந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரின் விஜயம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதை முஸ்லிம்கள் நினைவிற் கொள்ள வேண்டும். அத்துடன் “சஜித் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று சுமந்திரன் எம்பி. அறிவித்துள்ளதையும் கவனிப்பிற்குரியது.
ஆகவே, இதற்கு முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் கூறும் விளக்கம் என்ன? “அப்படி ஒன்றும் நடக்கமாட்டாது, தமிழ் மக்களை கவர்வதற்காப சும்மா அப்படியான ஒரு வாக்குறுதியை தேர்தல் விஞ்ஞாபகத்தில் உள்ளடக்கியுள்ளார்கள்” என்று கூற வருகின்றார்களா?
அரசியலமைப்பில் உள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்ப்பது தார்மீகமல்ல. என்றாலும், முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் நாட்டு நிலைமைகளின் அடிப்படையில் இது கரிசனைக்குரிய விடயம் என்பதை மறுக்க முடியாது. அத்துடன், யார் என்ன நினைத்தாலும் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
‘நாங்கள் ரணிலுடன், சஜித்துடன் பேசியிருக்கின்றோம், உடன்பட்டிருக்கின்றோம். இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை பாதுகாப்பார்கள்’ என கூறும் முஸ்லிம் தலைவர்களான ஹக்கீம், ரிஷாத், அதாவுல்லா மற்றும் இதர அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு, 13 இன் அமுலாக்கம் எவ்வாறு அமையும்? அதில் முஸ்லிம்களின் கரிசனை உறுதிப்படுத்தப்படுமா? என்பதை தொளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை முஸ்லிம் தலைவர்கள், எம்பிக்களுக்கு இவ்விடயத்தில் தெளிவில்லை என்றால், குறிப்பிட்ட வேட்பாளர்களிடம் இதற்காள விளக்கத்தைப் பெற்று, தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு பொது வெளியில் கூற வேண்டும். வேறெந்த பொல்லாப்புமில்லை !
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM