தயாரிப்பு : ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு மற்றும் பலர்.
இயக்கம் : வெங்கட் பிரபு
மதிப்பீடு : 2.5 / 5
இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களின் நலன்களுக்காக புதிய மாநில அளவிலான அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டிருக்கும் தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் - நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இந்தத் திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டும் கவர்ந்ததா? அல்லது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தீவிரவாத தடுப்பு பிரிவிற்கான சிறப்பு குழுவில் எம்.எஸ்.காந்தி (விஜய்) சுனில் (பிரசாந்த்) கல்யாண் (பிரபுதேவா) அஜய் (அஜ்மல்)ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு உயர் அதிகாரியாக நசீர் ( ஜெயராம்) இருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தீவிரவாதி ஓமர் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கடத்துகிறார். இதனை கைப்பற்றுவதற்காக தீவிரவாத தடுப்பு பிரிவிற்கான சிறப்பு குழு களம் இறங்குகிறது. இதில் எதிர்பாரவிதமாக தீவிரவாதிகளுடன் ராஜீவ் மேனன் (மோகன்) என்பவரும் குடும்பத்தினருடன் பலியாகிறார். காந்தி மீண்டும் தாயகம் திரும்பி தன் குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்கிறார் காந்தி. அங்கு காந்தியின் மூத்த மகன் ஜீவன் எதிர்பாராமல் நடைபெறும் விபத்தில் இறக்கிறார். இதனால் காந்திக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிகிறார்கள். இந்நிலையில் காந்தி, 'தன் மகனை காப்பாற்ற தவறி விட்டோமே..!' என்ற குற்ற உணர்ச்சியால் மனைவியின் பேச்சைக் கேட்டு, தீவிரவாத தடுப்பு பிரிவிலிருந்து விலகி, சாதாரணமான அதிகாரியாக விமான நிலையத்தில் பணியாற்றுகிறார். இந்தத் தருணத்தில் மாஸ்கோவில் இந்திய இந்தியாவிற்கான ஸ்தானிகராலயம் அமைப்பதில் அங்கு சிக்கல் நிலவுகிறது. இதனை பேச்சுவார்த்தை மூலம் சீராக்குவதற்காக காந்தி, மாஸ்கோ செல்கிறார். ஆனால் அங்கு 17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதிக் கொண்டிருக்கும் அவருடைய வாரிசான ஜீவன் உயிருடன் இருக்கிறார். இதனை கண்டு ஆனந்தம் அடையும் காந்தி- அவனை இந்தியாவுக்கு அழைத்து வருகிறார். அதன் பிறகு இந்தியாவில் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கான சிறப்பு குழுவில் பணியாற்றிய உயரதிகாரி நசீர் கொல்லப்படுகிறார். அவரைத் தொடர்ந்து சுனிலின் மகள் கொல்லப்படுகிறாள். இதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதை தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய காந்தி கண்டுபிடிக்கிறார். அது யார்? என்று தெரிந்த பிறகு.. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் உச்சக்கட்ட காட்சி..!
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மொத்த வலிமையும் விஜய் தான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இளைய தளபதிக்கும்... மாஸாக இருக்கும் தளபதிக்கும் இடையேயான மோதல் குறிப்பாக அல்லது வழக்கமாக சொல்ல வேண்டும் என்றால்... தந்தை - மகன் இடையேயான மோதல். இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் விஜயை இளமையாக காட்டியிருப்பதுடன் வில்லத்தனமாகவும் நடிக்க வைத்து ரசிகர்களை கவர்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
முதல் பாதி சென்டிமென்ட் + எக்சன்+ காதல்+ குடும்பம் +கலாட்டா +என கொமர்ஷலாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் அதிரடி எக்சன் + எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் என பக்கா கொமர்ஷலாக இருப்பதால் ரசிகர்கள் சோர்வடையாமல் இருக்கையில் அமர்ந்து ரசிக்க முடிகிறது. ஆனால் பாடல் காட்சிகள் வந்தால்.. ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. பாடல் + அதை படமாக்கப்பட்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா தன்னை 'கிங்' என நிரூபிக்கிறார்.
படம் முழுவதும் விஜய்... விஜய்... விஜய்.. விஜய்... என்று இருந்தாலும், இந்த விஜயை காப்பாற்ற மறைந்த விஜயகாந்த், சிவகார்த்திகேயன், எம் எஸ் தோனி, திரிஷா.. என ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் திரையில் தோன்றி உதவி செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையிலும் கில்லி திரைப்பட பாடல் - அப்படி போடு பாடல்- கண்மணி அன்போடு பாடல் - படையப்பா தீம் மியூசிக் - என ஏராளமான வெற்றி பெற்ற படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்தி தான் காட்சிகளை சுவராசியப்படுத்தி இருக்கிறார்கள்.
விஜய் நடித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் திரையில் தோன்றும் யோகி பாபு ரசிகர்களை தன்னுடைய ஒன் லைன் பஞ்ச் மூலம் சிரிக்க வைக்கிறார்.
வி எஃப் எக்ஸ் காட்சிகள்- படத்தின் கதைக்கும், கதை நகர்த்தலுக்கும், திரைக்கதையின் பிரம்மாண்டத்திற்கும் பயன்படுத்திய காலத்தைக் கடந்து... தற்போது வி எஃப் எக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மூலம் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி... அதை வில்லன் ஆக்கி .... திரையில் தோன்ற வைத்து ரசிகர்களை நம்ப வைப்பதற்கும், மகிழ்ச்சி படுத்துவதற்கும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் நேர்த்தியாக அமைந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் எழுகிறது.
உச்சகட்ட காட்சி ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் இருப்பதால் சுமாரான படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
படத்தில் லாஜிக் கிலோ என்ன விலை? என கேட்கிறார்கள். குறிப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் காந்தி.. அவருடைய உயரதிகாரியாக இருக்கும் நஸீர் கொல்லப்படும் போது அதற்கான பின்னணி குறித்து ஆராயாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் அவருடைய திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்க... அவருடைய படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்ற நிலையில் மட்டுமே இந்தப் படம் இருக்கிறது. எனவே விஜய் நடித்திருக்கும் 'தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம்' எனும் திரைப்படம் - விஜயின் ரசிகர்களுக்கானது. விஜயின் ரசிகர்களுக்கு மட்டுமேயானது.
தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம் - வேஸ்ட் ஒஃப் டைம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM