அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Published By: Digital Desk 7

05 Sep, 2024 | 05:10 PM
image

(லெட்சுமன் அபிலாஷனி)

(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)

மிர்தாலயா நுண்கலைக் கல்லூரியின் இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான சர்மிளா தேவி சுந்தரின் மாணவியும் மில்ரோய் கிறிஸ்டோபர் - அல்ஜின் கிறிஸ்டோபர்  தம்பதியரின் மகளுமான அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு செப்டெம்பர் 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக (நெலும் பொக்குன) அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் தத்தா, திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பரதநாட்டிய உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.சாரல் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார ஊக்குவிப்புப் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க, அருட்தந்தை பிலிப் அன்டனி, அருட்சகோதரி சுஜானி பெர்னாண்டோ, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  யதுகுலசிங்க அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடராஜப் பெருமானின் திருப்பாதங்களில் சதங்கைகளை வைத்து பூஜை நடாத்தி பரதநாட்டிய அரங்கேற்றத்தை ஆரம்பித்துவைத்தார், கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் சிவாச்சாரியார்  ரத்னபவ குருக்கள்.

இந்த ஆடல் அரங்குக்கு அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரியின் இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான ஷர்மிளா தேவி சுந்தர் நட்டுவாங்கம் நிகழ்த்தியதோடு, குரலிசைக் கலைஞராக “கலாவித்தகர்” ஸ்ரீ அழகேசன் அமிர்தசிந்துஜன், மிருதங்கம் “நந்திவித்தகன்” ஸ்ரீ.மகேந்திரன் லோகேந்திரன், வயலின் “இசைக்கலைமணி” ஸ்ரீ சன்முகநாதன் திபாகரன், தாள தரங்கம் “விசாரத” ஸ்ரீ ரத்னம் ரத்னதுரை, புல்லாங்குழல் “சாஷ்திரபதி” ஸ்ரீ பிரியந்த தசநாயக்க மற்றும் பியானோ ஸ்ரீ. பெசில் தங்கராஜா என்போர் இசைப் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

கலைவழியில் சுபீட்சம், சௌபாக்கியம் வேண்டி வேழமுக பெருமானுக்கு முதல் வணக்கம் செலுத்துமுகமாக பகுதாரி இராகத்தில் ஆதி தாளத்தில் “இனிதான தமிழ் பாடவே....” என்ற விநாயகர் துதி பாடப்பட்டது.

நடன உருப்படிகளின் அரங்கேற்றம்

சரஸ்வதி புஷ்பாஞ்சலி

ஆங்கிகம், வாட்சிகம், ஆகார்யம், சாத்விகம் ஆகிய நால்வகை அபிநயங்களோடு பரம்பொருளை நினைத்து பரிமள புஷ்பங்களை கைகளில் ஏந்தி பாத சலனங்களை நேர்த்தியாக வடிவமைத்து, சரஸ்வதி இராகம், ஆதி தாளத்தில் அமைந்த புஷ்பாஞ்சலி ஆடப்பட்டது.

தொடர்ந்து, “தியான ஸ்லோகம்” நால்வகை அபிநயங்கள், பாவங்களுடன் அகஸ்டினாவால் செம்மையாக நிகழ்த்தப்பட்டது.

அலாரிப்பு

நிருத்த சௌந்தர்யமாக, சொற்கட்டுக்களின் ஓசை நயத்துடன் அரங்க  ஆராதனையாக விளங்கும் அலாரிப்பை அகஸ்டினா லயச் சித்திரமாகவும் சுந்தர நடனமாகவும் கம்பீரமாக, உடலும் மனமும் மலர்தலோடும், அழகிய முகபாவனைகள், உடல் அசைவுகளோடும் ஆடினார்.

ஜதீஸ்வரம்

ஆரபி ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த ஜதீஸ்வரத்துக்கு அகஸ்டினா மென்பாதங்களை லயத்துடன் பதித்து அழகிய அசைவுகளோடும் பாவங்களோடும் ஆடினார்.

கௌத்துவம்

கௌளை இராகத்திலும் ஆதி தாளத்திலும் பாடப்பட்ட இசைப்பாடலுக்கு அகஸ்டினா ஆடிய கௌத்துவ நடனமானது உலகை சுற்றி வந்து ஞானப்பழம் வேண்டி நின்ற பாலகன், சூரசம்ஹார வீரன் என முருகப்பெருமானின் பல்வேறு அற்புத நிலைகளை எடுத்துக்காட்டியது.

வர்ணம்

“கொஞ்சும் சதங்கை திகழும் உன் திருவடி தஞ்சமென்றே பணிந்தேன் பரம்பொருளே...” என்ற பாடலுக்கு அகஸ்டினா தத்ரூபமான பாவங்களையும், நடன ஆங்கிக அசைவுகளும் கொண்டு ஆடினார்.

இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யும் யாகம்

அம்மன் பதம்

“மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக...” என்ற அம்மன் பதம் இறைவனிடத்தில் கொண்ட பக்தியுணர்வை எடுத்துக்காட்டியதோடு, நடன மங்கையின் நவரச முக பாவங்களில் அம்பாளின் அவதாரங்கள் வெளிப்பட்டது.

கிருஸ்ண பதம்

ஆயர்பாடியில் அவதரித்த  கண்ணபிரானின் களிப்புரு கதாமிர்தமாக முன்வைக்கப்பட்ட கிருஸ்ண பதம் நடன ஆற்றுகையில் தாய் யசோதைக்கும் சேயான கண்ணனுக்கும் இடையிலான உன்னதமான பாசம் எடுத்துக்காட்டப்பட்டது.

கீர்த்தனம்

கிறிஸ்தவ வழிபாட்டு முறை,  கடவுள் மீதான அன்பை சித்திரிக்கின்ற சொல்லாடல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட  “உன் பாதம் சரணடைகின்றேன்...” என்ற கீர்த்தனம் பல்லியத்தின் இசையோடு ஒலிக்க, சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் மீது கொண்ட பக்தி ஆடலினூடாக காண்பிக்கப்பட்டது.    

அகஸ்டினா அபிக்கா டியானா

அரங்கிலே சிறப்பாக ஆடலினை நிகழ்த்திய அகஸ்டினா அபிக்கா டியானா மில்ரோய் கிறிஸ்டோபர் - எல்ஜின் கிறிஸ்டோபர்  தம்பதியரின் புதல்வியாவார். 11 வயதான அகஸ்டினா தனது பாடசாலைக் கல்வியை நல்லாயன் முன்னிலை பள்ளியில் ஆரம்பித்து, தற்போது புனித பிரிஜட் கன்னியர் கல்லூரியில் பயின்று வருகின்றார்.

இவர் 4 வயதில் “நிர்மலாஞ்சலி அகடமி”யில் இணைந்து, கலாநிதி நிர்மலா ஜோனிடம் பரதநாட்டியம் கற்றார். பின்னர், 2020இலிருந்து அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரியில் நடன ஆசிரியை சர்மிளா தேவி சுந்தரிடம் நாட்டியம் பயின்று வருகிறார்.

வட இலங்கை சங்கீத சபை நடத்தும் நடன தேர்வுகளில் முதலாம் தரத்தினை பூர்த்தி செய்து தொடர்ந்து கற்றுவரும் அகஸ்டினா, கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச நடன விழா உட்பட பல நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார்.

அமிர்தாலயா நடனப்பள்ளியின் இயக்குநரும் நடன ஆசிரியருமான சர்மிளா சுந்தர் 

அமிர்தாலயா நடனப்பள்ளியின் இயக்குநரும்  நடன ஆசிரியருமான சர்மிளா சுந்தர் தனது சிறு வயதிலேயே கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனிடம்  பரதநாட்டியம் கற்றுள்ளார்.

நாட்டியத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர்களாக சர்மிளா மற்றும் அவரது சகோதரியினது நாட்டிய அரங்கேற்றம் 1996 ஆம் ஆண்டு வாசுகி ஜெகதீஸ்வரானால் நெறியாள்கை செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டதுடன் நாட்டிய நிகழ்வுகளிலும் , தொலைக்காட்சி நிகழ்வுகளிலும்,கலாசார நிகழ்வுகளிலும் பங்கு பற்றிய சிறப்புக்குரியவராக காணப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தோற்றி முதல் சித்தி பெற்றதுடன் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். நட்டுவாங்கத்தில் பயிற்சி பெற்று டிப்ளோமா சான்றிதழ்  பெற்றுள்ளார்.

விருந்தினர்களின் உரை

பேராசிரியர் அங்குரன் தத்தா

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் தத்தா கூறுகையில்,

இந்த அரங்கேற்றம் மிக சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. நான் பல்வேறு பகுதிகளில்  நடன அரங்கேற்றங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால், சிறு வயதில் மிக அழகாக செல்வி அகஸ்டினா நடனமாடியுள்ளார். அவரது மிக அழகிய பாவங்கள், அபிநயங்களோடு நடனம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த குரு சர்மிளா, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவில் 8 பாரம்பரிய நடன வடிவங்கள் உள்ளன.  அவற்றுள் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி போன்ற பாரம்பரிய நடன வடிவங்கள் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவை. ஏனையவை பாரம்பரிய நடன வடிவங்கள் மேற்கிந்தியா, கிழக்கிந்தியாவை சேர்ந்தவை. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த  நான்கு பாரம்பரிய நடனங்களிடையே ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் காணப்படுகின்றன.

மேற்கிந்திய, கிழக்கிந்திய நடன வடிவங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆனால், நீங்கள் அவற்றின் முத்திரைகள், முகபாவங்கள்   உடல்மொழிகள், காலணிகள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தால், அனைத்து பாரம்பரிய நடன வடிவங்களும் பரதநாட்டியத்திலிருந்து தோற்றம் பெற்றவையே.

பரதநாட்டியம் மிகவும் பழமையான பாரம்பரிய நடன வடிவமாக காணப்படுகிறது. நாட்டிய சாஸ்திரத்தில் 36  அத்தியாயங்கள் உள்ளன, 6000 வசனங்கள், நிருத்திய அபிநயத்தின் அனைத்து விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பரதநாட்டிய சாஸ்திரத்தில் மிகவும் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

நாட்டிய சாஸ்திரத்தில் மொத்தம் எட்டு வகையான ரசங்கள் சொல்லப்படுகின்றன. பிற்பட்ட காலப்பகுதியில் சாந்தம், பக்தி ஆகிய ரசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர் காலத்தில் அகஸ்டினா  இந்திய உதவித்தொகையின் மூலம்  பரதநாட்டியத்தில்  உயர்கல்வியினை தொடர்வதற்காக    விண்ணப்பித்தால் மகிழ்ச்சியடைவேன். என்றார்.

டாக்டர் எஸ்.சாரல் 

இந்தியாவில் இயங்கிவரும் திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் பரதநாட்டிய உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.சாரல்  நடனமாடிய மாணவியையும் நடன ஆசிரியரையும் பாராட்டினார். அத்தோடு அவர்,

கலை என்பது இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய வரப்பிரசாதம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிக்கொணரும்போது இந்த உலகமே வியக்கும். அப்போது திறமையும் வெளிப்படும். அந்த வகையில் ஒரு சிறந்த மாணவியை சர்மிளா அவர்கள் உருவாக்கியுள்ளார்.

அரங்கு, தொழிநுட்பம், இசை, இசைக்கருவிகள் மற்றும் நாட்டிய உருப்படிகள்  அனைத்தும் செம்மைப்படுத்தப்பட்டு இந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது.

நான் இலங்கைக்கு வருகை தந்து பார்த்தவரையில், கலைக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்நாட்டில் அனைத்தும் பாராட்டுக்குரியவையே என்றார்.

அருட்தந்தை பிலிப் அன்டனி கூறுகையில்,

சமயங்கள் எல்லாம் ஒன்றுகூடும் இடமாக இந்த அரங்கத்தை நான் பார்க்கிறேன். சமயத்தை தாண்டி கலையும் மனிதநேயமும் வாழ்வதை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும். அழகான சந்தர்ப்பத்தை நாட்டிலுள்ள நான்கு மறை வேதங்களும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

கலைகள், சமயங்கள், கல்வி ஆகியவற்றின் மூலம் நாட்டை அழகுபடுத்த முடியும் என்பதற்கு அகஸ்டினா அபிக்கா டியானாவின் அரங்கேற்றம் உதாரணமாகும்.

இன்றைய கால சூழ்நிலையில்  தமக்கு ஒவ்வாத கலாசாரங்களை பின்பற்றுகின்றோம். பிள்ளைகளுக்கு  நல்ல விடயங்களையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். நாம் நல்ல ஆசிரியர்களின் கீழ் வளரவேண்டும், நல்ல விடயங்களை பேச வேண்டும் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும் என தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-12 17:57:01
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24
news-image

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய...

2024-09-10 11:02:28
news-image

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின்...

2024-09-10 10:42:19
news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14