'கூலி' திரைப்படத்தில் 'தேவா'வாக தோன்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Published By: Digital Desk 2

03 Sep, 2024 | 01:33 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் தோற்ற புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், மகேந்திரன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகின்ற திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

 எக்சன் என்டர்டேய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் படக் குழு இதுவரை சௌபின் சாஹிர்- ஸ்ருதிஹாசன் -நாகார்ஜுனா- சத்யராஜ்- உபேந்திரா- ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரமும், அவர்களது தோற்றத்தையும் புகைப்படங்களாக வெளியிட்டது. 

தற்போது கதையின் நாயகனாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் தேவா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவரது கதாபாத்திரத் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் அவர் '1421' என் கொண்ட அடையாளச் சின்னத்தை கையில் வைத்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 கருப்பு வெள்ளை வண்ண பின்னணியில் தங்க நிறத்தில் ஏதேனும் ஒரு விடயத்தை அனைத்து கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படத்துடன் இணைத்து வெளியிடப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்