எமது நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காலப்பகுதியிலும் சிறந்த முறையில் இயங்கி வந்த காலப்பகுதியிலும் அதிகளவிலான அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. அவற்றின் பலாபலன்களும் அவர்களையே சென்றடைந்தன. மலையகப் பிரதேசங்களில் தேயிலையைப் பெற்று நாட்டின் கடன்கள் அடைக்கப்பட்டன. அதில் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த சம்பளமும் மறுக்கப்பட்டது. தற்பொழுது பொருளாதார ரீதியில் நாடு ஓரளவிற்கு மீண்டும் தலைதூக்கி நிற்கின்ற காலப்பகுதியிலும் கூட நாட்டின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளை வைத்து சுரண்டிப் பிழைக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
மிக முக்கியமாக நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதியில் கோடிக் கணக்கில் விற்பனையாகும் மாணிக்கக்கற்கள் அகழப்படுகின்றன. இதனால் குறித்த பிரதேச மக்களுக்கு எந்த வித நன்மைகளும் இல்லையென்றாலும் இப்பகுதிகள் பாரிய சூழல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இதில் பல அரசியல்வாதிகளும் பங்குதாரர்களாக இருப்பதால் அவர்கள் இது குறித்து வாய்திறப்பதில்லை. மாறாக அதிகாரிகளை தொலைபேசிகளில் மிரட்டுவதும் அவர்களை இடமாற்றம் செய்து விடுவோம் என அச்சுறுத்துவதுமே அவர்களின் வேலையாக இருக்கின்றது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் இயங்கிவரும் பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய கல்லூரியில் மழைக் காலங்களில் வெள்ள நீரினால் பாதிக்கபடுகின்ற சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை காரணங் காட்டி பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயா ஆற்றுப்படுக்கைகளை அகலப்படுத்தினால் இப்பிரச்சினை தீரும் என தீர்வு முன்வைக்கப்பட்டது. அதன் படி பொகவந்தலாவ பிரதேசத்தின் டியன்சின் தொடக்கம் கிலானி வரை குறித்த ஆற்றை சுத்தப்படுத்தும் வேளைத்திட்டமானது நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
ஆற்றை அகலப்படுத்தும் திட்டத்துக்கு நோர்வூட் பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அதில் அள்ளப்படும் மண்ணை எடுத்துச்சென்று மாணிக்கக்கற்களை பெறுவதற்கான அனுமதியும் தேசிய இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையால் அனுமதி பெறப்பட்டது.
மாணிக்கக்கற்கள் பெற்றுக்கொள்ளவே இந்த ஆற்றை அகலப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதென அச்சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். ஏனென்றால் சென்மேரிஸ் கல்லூரி வளாகத்தில் மழை காலங்களில் வெள்ள நீர் புகுவது நீண்ட கால பிரச்சினையாக இருந்து வந்தது. அதை அப்போது செய்யாமல் திடீரென இந்த பிரதிநிதிகளுக்கு என்ன அக்கறை வந்தது என்ற கேள்விகள் எழுந்திருந்தன.
ஆனால் இதை நிரூபிக்கும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றன. குறித்த ஆற்றிலிருந்து அகழப்படும் மண்ணிலிருந்து பல கோடி பெறுமதியான மாணிக்கக்கற்கள் பெறப்பட்டன. அவை பொகவந்தலாவை நகரில் ஏலத்தில் விற்கப்பட்ட போது மலையகத்தின் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அங்கு கூடியிருந்தமை மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தில் மாணிக்கக்கற்களை அகழ்வதற்கான ஏலத்தில் இவர்களும் ஒரு தொகை பணத்தை வழங்கியுள்ளமை தெரிய வந்தது.
பாடசாலையில் நுழையும் ஆற்று நீரை தடுக்கவென ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது தற்போது நோர்வூட் பிரதேச சபையினால் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிவடைந்துள்ளதாக பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் பாரிய இயந்திரங்களால் மண்ணை அகழும் பணியை முன்னெடுத்தனர். இதையடுத்து நோர்வூட் பிரதேச சபை செயலாளர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததால் உடன் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று செயற்பாடுகளை இடைநிறுத்தியதுடன் குறித்த நபர்களை எச்சரித்துள்ளனர். இவ்வாறு மூன்று தடவைகள் பிரதேச சபை செயலாளரின் உத்தரவையும் மீறி மண் அகழப்பட்டமை முக்கிய விடயம். இதன் காரணமாக பொலிஸார் அவ்விடத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களையும் மீட்டு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக நோர்வூட் பிரதேச சபை செயலாளருக்கு சில அரசியல்வாதிகள் தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் உரிய தரப்பிடம் அறிவித்துள்ளதாகத் தெரிகின்றது. 14 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் அரைவாசியுடன் தற்போது கைவிடப்பட்டுள்ளது. டியன்சினிலிருந்து கிலானி வரை ஐந்து கிலோ மீற்றர்கள் வரை மேற்கொள்ளப்படவிருந்த திட்டம் இரண்டு கிலோ மீற்றர்கள் கூட முன்னெடுக்கப்படவில்லை.
ஆற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில் பாரிய இயந்திரங்களை கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தமையினால் பொகவந்தலாவ, டியன்சின் மற்றும் மோரா ஆகிய பகுதிகளுக்கு இன்று இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மீண்டும் குறித்த திட்டத்திற்கு அமைச்சின் ஊடாக மேலும் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பொகவந்தலாவ பிரதேச மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடுகளும் எழுந்ததால் இந்த திட்டத்தை தற்போதைக்கு ஆரம்பிக்க முடியாது என நோர்வூட் பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் மேற்படி பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயாவில் பெறப்பட்ட மாணிக்கக்கற்கள் இரண்டு தடவைகள் ஏலத்தில் விடப்பட்டதில் பத்துகோடி ரூபாய்க்கு மேல் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் இன்னும் கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு மாணிக்கக்கற்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கை ரீதியாக தனித்தனியாக இயங்கும் மலையக அரசியல்வாதிகள் தமக்கு வருமானம் ஈட்டும் எந்த திட்டங்களிலும் இணைந்து ஒற்றுமையாக செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லையென பொகவந்தலாவை பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாடசாலை சமூகத்துக்கு இந்த திட்டங்களினால் எந்த வித பிரயோசனங்களும் ஏற்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ள மக்கள், பாடசாலை பெயரை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தினால் அரசியல்வாதிகளும் மாணிக்கக்கல் வியாபாரிகளுமே பயன் பெற்றுள்ளனர் என சுட்டிக்காட்டுகின்றனர்.
(சதீஸ் – பொகவந்தலாவை)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM