(இராஜதுரை ஹஷான்)
- பட்டினியை ஒழிக்கும் செயற்திட்டம்
- சமுர்த்தி நிவாரணம் மீண்டும்.
- மொத்த தேசிய உற்பத்தி இலக்கு
- வரி சுமை தளர்த்தல்
பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கையின் ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்ஷ பாதுகாத்தார். இருப்பினும் இன்றும் பிரிவினைவாத அரசியல் செயற்பாடுகள் பல்வேறு வடிவங்களில் நாட்டுக்கு சவால் விடுகின்றன. அந்த சவால்களை தோற்கடித்து நாட்டின் ஒற்றையாட்சியை பேணி பாதுகாப்பது எமது பிரதான கொள்கையாகும். அதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செயற்படுத்தல், பிளவுப்படாத வெளிவிவகார கொள்கை என்ற அம்சங்களுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் உள்ள ரட்னதீப நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
காலை 10.30 மணிக்கு சர்வமத வழிபாடுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது கொள்கை திட்டத்தை சர்வமத தலைவர்களுக்கு கையளித்தார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான விடயங்கள் வருமாறு,
நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் பிரதானமாக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை சிறந்த மற்றும் நிலையான தீர்வல்ல, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட நிர்வாகம் சிறந்ததாக காணப்பட்டாலும் அதிக வரிச்சுமையினால் சாதாரன மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பலமான அரசாங்கத்தின் கீழ் நிலையான பொருளாதார திட்டமிடலுடன் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிச் சுமைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட இலக்கை வெற்றிக் கொள்வதுடன், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவோம்.
பட்டினியை ஒழிக்கும் செயற்திட்டம்
சகல மனிதர்களுக்கும் உணவு அத்தியாவசியமானது. அனைத்து அபிவிருத்திகளுக்கும் முன்னர் இந்த அத்தியாவசிய தேவையை முழுமைப்படுத்துவது எமது பிரதான இலக்கு. இந்த பூமியில் எவரும் பட்டினியில் இருக்க கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் மூன்று வேளையும் உணவை பெற்றுக்கொள்வதற்கான பொருளாதார நிவாரணம் வழங்குவது எமது பிரதான கருத்திட்டமாகும்.
வரி சுமை தளர்த்தல்
அனைத்து மக்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள சேர்பெறுமதி வரி மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி முறையாக திருத்தம் செய்யப்படும். அதனால் இழக்கப்படும் அரச வருமானத்தை திரட்டிக் கொள்வதற்காக சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய பிரிவுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு.
பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை திருத்தம் செய்து அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்படும்.வரி திருத்தம் ஊடாக மக்களுக்கு கிடைக்கப் பெறும் மேலதிக வருமானத்தை பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சமுர்த்தி நிவாரணம் மீண்டும்.
நிலையான வருமானமில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மூன்று வேளைகளும் உணவு பெற்றுக் கொள்வதற்கு போதுமான வகையில் நிவாணை நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.நீர் மற்றும் மின்கட்டணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட வகையில் நிவாரணம்.
உர நிவாரணம்
மஹிந்த சிந்தனை கொள்கைக்கமைய மரகறி மற்றும் பழ உற்பத்திக்காக விவசாயிகளுக்கு நிலையான உர நிவாரண முறைமை அமுல்படுத்தப்படும்.அத்துடன் தேயிலை உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு மானிய அடிப்படையில் உரம வழங்கப்படும்.அத்துடன் முதல் இரண்டு போகங்களுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்.
புதிய தொழில்வாய்ப்புக்கள்
சுகாதாரம், கல்வி, கட்டுமாணத்துறை, மென்பொருள் பொறியியலாளர், தரவு ஆய்வாளர், சைபர் பாதுகாப்பு, இலத்திரணியல் வணிகம், நிர்மாணிப்பு உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புதிய தொழிற்றுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு
வெளிநாட்டு கையிறுப்பினை அதிகளவில் திரட்டிக் கொள்வதற்காக வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.அதற்கமைய 250,000 மில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளை கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு விசேட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
சுற்றுலாத்துறை விருத்தி
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.இதற்கு விசேட சுற்றுலா ஊக்குவிப்பு கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் குறைந்த வருமான விமான சேவைக்காக கட்டுநாயக்க மற்றும் மத்தளை ஆகிய விமான நிலையங்களில் புதிய வசதிகள் அமுல்படுத்தப்படும்.
தேசிய அடையாளம்
இலங்கை சுதந்திரமான சுயாதீணமிக்க நாடு. இலங்கையில் ஆட்புல எல்லை மற்றும் அதனுள் உள்ள அனைத்து வளங்களும் நாட்டு மக்களுக்கு சொந்தமானது.
அனைத்து இன மக்களுக்கும் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள உரிமை மற்றும் நிர்வாகம் வேறுபாடின்றி கிடைக்கப் பெற வேண்டும்.
ஒற்றையாட்சி இராச்சியத்தின் பாதுகாப்பு உறுதி
பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கையின் ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்ஷ பாதுகாத்தார். இருப்பினும் இன்றும் பிரிவினைவாத அரசியல் செயற்பாடுகள் பல்வேறு வடிவங்களில் நாட்டுக்கு சவால் விடுக்கின்றன. அந்த சவால்களை தோற்கடித்து நாட்டின் ஒற்றையாட்சியை பேணி பாதுகாப்பது எமது பிரதான கொள்கையாகும். அதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செயற்படுத்துவோம்.
பிளவுபடாத வெளிவிவகார கொள்கை
பொருளாதாரம், சமூக உறவு உள்ளிட்ட சகல துறைகளிலும் பிளவுப்படாத வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்துவோம். நாட்டின் உள்ளக விவகாரங்களில் பிற நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தலையிடுவதை தடுப்பதற்கு பலமான வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்துவோம்.
பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை பாதுகாப்பு
பிரதிநித்துவ ஜனநாயக முறைமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். தூமதப்படுத்தப்பட்டுள்ள சகல தேர்தல்களையும் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் நடத்துவோம்.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி விலக்க 2022 ஆம் ஆண்டு திட்டமிட்ட வகையில் ஒரு தரப்பினரால் அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் தோற்றம் பெறாமலிருக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்ந்த பட்ச நட்டஈடு வழங்க நடவடிக்கை.
மொத்த தேசிய உற்பத்தி இலக்கு
எதிர்வரும் 10 ஆண்டுகளில் 180 பில்லியன் டொலர் மொத்த தேசிய உற்பத்தியை அடைவது எமது பிரதான இலக்கு. இதற்கமைய 2035 ஆம் ஆண்டு தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி 8000 டொலரை அண்மிக்கும்.
கடன் செலுத்தும் பொருளாதாரம்
இயலுமான வகையில் சகல அரசமுறை கடன்களையும் செலுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பல், அரச கடன் அளவு மொத்த தேசிய உற்பத்தியில் 80 சதவீதமாக குறைத்துக் கொள்ளல் கொள்கையின் பிரதான இலக்காகும்.
அத்துடன் வலுவான வெளிநாட்டு கையிறுப்பு, அரச வருமானம் உயர்வு – செலவு கட்டுப்பாடு, தேசிய அனர்த்த மையம், தொழிலின்மைக்கு நிலையான தீர்வு, பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் ஒற்றை இலக்கத்தில், சமூக அபிவிருத்தி உலகில் 50 நாடுகளுக்குள்,கல்வி மறுசீரமைப்பு, உள்ளிட்ட பல துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM