மருத்துவ ஒழுக்கம் : பகுதி - 01
(மா.உஷாநந்தினி)
படம் - எஸ்.எம்.சுரேந்திரன்
“மன்னாரில் குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் குருதிப்போக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை உட்பட மருத்துவத்துறை சார்ந்து இடம்பெறும் விபரீதமான சம்பவங்கள் நிர்வாக சிக்கல்களினாலும் மருத்துவ மாஃபியா கூட்டத்தினராலும் மருத்துவர்கள் உட்பட துறை சார்ந்த ஊழியர்களது கவனக்குறைவினாலும் ஏற்படுபவை” என கல்வியியலாளர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கல்விக் குழு செயலாளர் த.இராஜரட்ணம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்துடன் "வைத்தியர் நோயாளியை ஒரு பண்டமாக, பரிசோதனைப் பொருளாக பார்க்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அவ்வாறன்றி, வைத்தியர் தன்னைப் போலவே எல்லா உணர்வுகளையும் கொண்ட சக மனிதனாக நோயாளியை பார்க்க வேண்டும்” என மருத்துவ ஒழுக்கவியலோடு தொடர்புடைய ஒரு கூற்றினையும் அவர் எடுத்துக்காட்டி வலியுறுத்தினார்.
அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “அறிவோர் ஒன்றுகூடல்” நிகழ்வில் “மருத்துவ ஒழுக்கம்” என்கிற பேசுபொருளில் உரையாற்றியபோது அவர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு சென்ற சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டமை, மருத்துவத்துறையினரின் அறம் மீறப்படுவது தொடர்பான சர்ச்சைகளை கிளப்பும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரங்கள், மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் தாயின் பரிதாபகரமான மரணம், சில நாட்களின் பின்னர், உயிரிழந்த இளம் தாயின் கணவரும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டமை, வவுனியா வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் பிரசவத்துக்காக சென்ற பெண்ணின் சிசு உயிரிழந்தமை... போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நம்மை கதிகலங்க வைத்திருக்கின்றன.
அது மட்டுமன்றி, இந்தியாவின் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடல் கடந்து, இலங்கை மக்களிலும் பெரும் சோகத்தை, பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவ சேவையில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நாளுக்கு நாள் குன்றிவரும் சூழ்நிலையில், மருத்துவத்துறையில் நிலவும் குறைபாடுகள், மருத்துவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கக் கோட்பாடுகள், மருத்துவர்களதும் நோயாளர்களதும் நலன்கள் என பல்வேறு விடயங்கள் இந்த அறிவோர் ஒன்றுகூடல் வேளையில் பேசப்பட்டன.
ஒரு நல்ல மருத்துவர் யார்?
“மன்னாரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இரவு முழுவதும் கவனிப்பின்றி அவதிப்பட்டுள்ளார். தாதிமார், வைத்தியர்கள், வைத்திய நிபுணர் என இத்தனை பேர் வார்ட்டில் இருந்தும் அந்த பெண் கவனிப்பாரற்று இறந்துபோனதற்கு மிக முக்கிய காரணம், கவனயீனமே...." என கூறிய த. இராஜரட்ணம், ஒரு நல்ல மருத்துவர் எனப்படுபவர் யாரென விளக்கமளிக்கையில், “தொழிலில் உயர்ந்த தேர்ச்சியும் சமூகம் எதிர்பார்க்கிற ஒழுக்கப் பெறுமானங்களும் ஒன்றிணைந்த ஒருவரே நல்ல வைத்தியராவார். வைத்தியர்கள் அதிகபட்ச கவனத்துடனும் நீதியுடனும் மனித நேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது..." என்றார்.
மேலும், மருத்துவ ஒழுக்கவியல் தொடர்பாக இவர் ஆற்றிய உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், கோட்பாடுகளை பற்றி பார்ப்போம்....
மருத்துவத்துறை ஒரு சேவைத்துறை
நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மை கருதி ஆசிரிய சேவை, மருத்துவ சேவை, பாதுகாப்புப் படையினர் சேவை, போக்குவரத்து சேவை என பல்வேறு சேவைத்துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் உன்னத நோக்கத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயலாற்றவேண்டிய துறையாக மருத்துவத்துறை விளங்குகிறது.
மனிதர்களை அருகாமையில் வைத்து, தொட்டு, உணர்ந்தறிந்து நோய்களை குணமாக்குவதும் உயிர்களிடையே ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதுமான வைத்திய சேவையில் வைத்தியர்கள், நோயாளர்கள், தாதியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், சுகாதார பணியாளர்கள் என்போர் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருமே தனித்தனி கடமைகள், பொறுப்புகள், ஒழுக்க நெறிமுறைகளை கொண்டிருக்க வேண்டியவர்கள் ஆவர். எனவே, இவர்கள் அத்தனை பேரையும் உள்ளடக்கிய மருத்துவத்துறைக்கென போதிக்கப்படும் அறம் சார்ந்த பல்வேறு விடயங்களை கொண்ட பெரும் பரப்பை “மருத்துவ ஒழுக்கவியல்” என்கிறோம்.
வைத்திய ஒழுக்கவியல் என்பது...
வைத்திய ஒழுக்கவியலானது பிரயோக ஒழுக்கவியலில் (Applied Ethics) அடங்கும் ஒன்றாகும். மருத்துவத்துடன் தொடர்பான ஒழுக்கப் பெறுமானங்களையும் தீர்ப்புகளையும் இது ஆராய்கிறது.
வைத்திய ஒழுக்கவியல் தொழில்சார் பிரயோக ஒழுக்கவியல் என்ற குறுகிய எல்லைக்கு உட்பட்டதல்ல. இது விஞ்ஞான மெய்யியல், உயிரியல், தொழில்நுட்பவியல், மனித நடத்தையியல், சமூகவியல் என பல ஆழமான விடயங்களை உள்ளடக்குகிறது.
மருத்துவ ஒழுக்கம் என்பது வெறுமனே துறை சார்ந்த புத்திஜீவிகள் விதித்த ஒழுக்க கோட்பாடுகள், நியதிகள் பற்றிய பெரிய விடயங்களையும் அவற்றில் ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளையும் பற்றி மட்டுமே பேசுகின்ற ஒன்றல்ல. இது, நாளாந்தம் வைத்திய நடைமுறைகளில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைளை பற்றியும் ஆழமாக கவனம் செலுத்துகிறது.
பெரும்பாலும் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்வது மட்டுமே பிரதான நோக்கம் என கருதி சிகிச்சை மேற்கொள்வதோடு தங்கள் கடமைகளை நிறுத்திக்கொண்டு, தங்கள் சேவையை மட்டுப்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் தமது வைத்தியத் துறையையும் வைத்தியத் தொழிலையும் மையப்படுத்தியதாக வளர்ந்துவரும் ஒழுக்கவியல் மற்றும் மெய்யியல் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களாக உள்ளனர். ஆனால், இந்த விடயத்தில் அக்கறையுள்ள ஒரு வைத்தியரால் மட்டுமே ஒழுக்கப் பெறுமானங்கள் வைத்தியத்தின் மைய இடத்திலிருப்பதை அறிய முடியும்.
மருத்துவத்துறையானது சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. உலகெங்கும் நிகழும் தவறுகளால் மருத்துவத்துறை அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
மேற்குலகிலும் கீழைத்தேசத்திலும் வைத்தியத்துறையின் சமகால நெருக்கடிகள், அது எதிர்கொள்ளும் புதிய சவால்கள் என்பன தொடர்பான மெய்யியல் அடிப்படைகளை கொண்டு மறுவிசாரணை செய்யும் போக்கு பரவலாக ஆரம்பமாகிவிட்டது.
வைத்திய ஒழுக்கம் தொடர்பான நூல்கள்
மருத்துவ ஒழுக்கவியல் தொடர்பாக ஆங்கில மொழியில் சில நூல்கள் வெளியாகின. அவற்றுள் சில...
விஞ்ஞான முறைமைகள் தொடர்பான விமர்சனம், வைத்தியத்துறையின் சமகாலப் போக்குகள் தொடர்பான விமர்சனம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட போல் பெயாரோபன் எழுதிய 'Against method', 'Science in free society', 'Fare well to reason', 'Philisophical Papers'போன்ற நூல்களும், அய்வின் இலிங் எழுதிய 'Desholing Society' (1971), 'Medica Nemesis' (1976) ஆகிய நூல்களும் தலைசிறந்த நூல்களாகும்.
அத்தோடு, வைத்திய ஒழுக்கவியலின் முறைகேடான போக்குகள், குறைபாடுகளை சுட்டிக்காட்டக்கூடிய நூலாக தோமஸ் ஏ. மப்பஸ், டசிட் செக்ராசியா ஆகிய இருவரும் இணைந்து எழுதிய 'Bio Medica Ethics' என்கிற ஆங்கில நூல் பெரும் வரவேற்பு பெறுகிறது.
இலங்கையில் வைத்திய ஒழுக்கம் தொடர்பாக சிங்கள நூலொன்றில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் குணபால தர்மசிறி எழுதிய 'வைத்திய சாஸ்திரயே ஸ்வபாவய' என்கிற இந்த நூலில் சுமார் 25க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் உள்ளன.
என்னதான் வைத்திய ஒழுக்கம் பற்றி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நூல்கள் உருவானபோதும் வைத்திய ஒழுக்கம் பற்றிய ஆய்வு நூல்கள் தமிழ் மொழியில் மிக மிகக் குறைவு. இது தமிழ்ச் சமூகத்துக்கே எழுந்துள்ள பெரும் குறைபாடாகிறது.
அதிலும், இலங்கையை பொறுத்தவரையில் மருத்துவ ஒழுக்கத்தையும் சிகிச்சையையும் மீறுகின்ற வைத்தியர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படுவது என்பதும், ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவது என்பதும் கேள்விக்குறியதாகவே இருக்கிறது.
அடுத்து, மருத்துவத்துறையினர் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கம் சார்ந்து விதிக்கப்பட்ட சத்தியப் பிரமாணங்கள், ஒழுக்கக் கோவைகள் பற்றி பார்ப்போம்.
(தொடரும்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM