ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளர்கள் தமது கொள்கைகளை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு வருகின்றனர். நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் பொறுப்புக்கூறல் விடயம் குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமது நிலைப்பாடுகளை பிரதான வேட்பாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ஜே.வி.பி.யை பிரதான கட்சியாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது.
இந்த விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜே.வி.பி. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான மாகாணசபை முறைமையை கடுமையாக அன்று எதிர்த்திருந்தது. அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டது. ஆனால் 2005ஆம் ஆண்டு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி. வழக்கு தொடுத்ததையடுத்து வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இவ்வாறு மாகாணசபை முறைமைக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி. தற்போது அந்த முறைமையினை அமுல்படுத்த தயார் என்று அறிவித்திருக்கின்றது. அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக முன்னெடுத்த செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்போம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் சமத்துவம், மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டுக்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலும் உள்ளூராட்சி, மாவட்ட, மாகாணங்களுக்கிடையில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்கான்மையை உறுதி செய்கின்ற வகையிலுமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதனைவிட வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கப்படும் என்றும் காணாமல்போனோர், ஆட்கடத்தல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டிருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விடயங்கள் ஜே.வி.பி.யானது முன்னேற்றகரமான சிந்தனையை நோக்கி நகர்கின்றது என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.
ஆனாலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அசோசியேட்டட் பிரஸ் செய்தி தளத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது.
இந்த நேர்காணலில் நாட்டில் 26 வருடகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு உள்ளான எவரையும் எமது நிர்வாகம் தண்டிக்க முயலாது என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் பொறுப்புக்கூறல் உண்மையை கண்டறியும் விதத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. பொறுப்புக்கூறல் உண்மையை கண்டறியும் விதத்தில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். எவரையும் பழிவாங்கும் வகையில் அல்லது எவரையும் குற்றம்சாட்டும் விதத்தில் இருக்கக்கூடாது என்றும் அநுரகுமார திசாநாயக்க கூறியிருக்கின்றார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணாமல்போனோர், ஆட்கடத்தல் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும் வட,
கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். அநுரகுமார திசாநாயக்க பொறுப்புக்கூறல் விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது ஒன்றுக்கொன்று முரணான செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். இதனைவிடுத்து அரசியல் தீர்வு தொடர்பிலும் பொறுப்புக்கூறல் விடயம் குறித்தும் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.
அன்று மாகாணசபை முறைமையை அடியோடு எதிர்த்த ஜே.வி.பி. இன்று புதிய அரசியலமைப்பு மாற்றப்படும் வரை மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவோம் என்று தெரிவித்தமை வரவேற்கத்தக்கது.
அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்து தீர்வினை காண்போம் என்றும் தெரிவித்துள்ளமையும் நல்லதொரு விடயமாகும்.
ஏனெனில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அந்தக்குழுவில் உள்ளடக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு பிரிக்க முடியாத இலங்கைக்குள் மாகாணங்களுக்கு மீளப்பெறப்பட முடியாத அதிகாரத்தை வழங்கும் வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா. சம்பந்தன் இந்த அரசியல் தீர்வுக்கான முயற்சியில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனைகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுமிருந்தது. ஆனாலும் அன்றைய அரசியல் முரண்பாடான நிலைமை காரணமாக அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது.
தற்போது தேசிய மக்கள் சக்தியானது அந்த முறைமையை நிறைவுக்கு கொண்டு வந்து அரசியலமைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றது.
ஆனாலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி தடுமாறுகின்றது. வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமானால் உரிய வகையில் பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதேபோன்றே படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் , சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராயவேண்டும்.
அதேபோன்றே யுத்தக் குற்றம் இழைத்தவர்கள் தொடர்பிலும் ஆராயப்படவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீள நிகழ்வதை தடுக்கவேண்டுமானால் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் ஜே.வி.பி.யானது இந்த விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது. ஒரு பக்கம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உறுதி கூறும் ஜே.வி.பி. மறுபக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் எண்ணமில்லை என்று கூறுவதானது அந்தக்கட்சியின் தளம்பல்போக்கை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜே.வி.பி.யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் முன்னேற்றகரமானதாக தென்படுகின்றது. ஆனாலும் பெரும்பான்மையின மக்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் விதத்தில் பொறுப்புக்கூறும் விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை ஜே.வி.பி. கொண்டிருப்பதானது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.
இதேபோன்றே ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் சிறுபான்மையின மக்களின் விடயம் தொடர்பில் தளம்பல் போக்கற்ற விதத்தில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கவேண்டும். கடந்தவாரம் முதல் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக் ஷவும் சிறுபான்மை மக்களின் விவகாரம் தொடர்பில் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் முரண்பட்ட வகையிலேயே அமைந்திருக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகா ரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்றும் இராணுவத்தினரை பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கருத்து கூறி வருகின்றார். பொறுப்புக்கூறல் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதாகவே அவரது கருத்து அமைந்திருக்கின்றது. இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியும் இத்தகைய நிலைப்பாட்டையே முன்னிலைப்படுத்தியிருக்கின்றது.
எனவே சிறுபான்மை மக்களின் பிரச்சினை விடயத்திலும் பொறுப்புக்கூறல் விவகாரத்திலும் பிரதான வேட்பாளர்கள் தளம்பலற்ற நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM