சி.அ.யோதிலிங்கம்
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு விட்டனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை மூன்று தேர்தல் அறிக்கைகளும் பூச்சியம் தான். மாகாண சபை பற்றிக் கூட முழுமையாக கூறுவதற்கு அவை தயாராக இல்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி மூச்சு விடக் காணோம். ஆக்கிரமிப்பு பொறுப்புக்கூறல் விடயங்களிலும் இதே நிலை தான். இவர்களுடைய இயலாநிலை தமிழ்ப் பொது வேட்பாளரை மேலும் நியாயப்படுத்தியுள்ளது. அநுரகுமார திசாநாயக்க போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என முதல்நாள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். ஆனால் அடுத்த நாளே தமது அரசாங்கம் இது .ெதாடர்பில் யாரையும் தண்டிக்க மாட்டாது என்றார். நாமல் ராஜபக் ஷ வழக்கம் போல 13ஆவது திருத்தம் நடை முறைப்படுத்துவதையே ஏற்கமாட்டோம் எனக் கூறியிருக்கின்றார்.
சிங்கள தேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைக் கூறமுடியாத நிலை. அநுரகுமார திசாநாயக்காவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்றே செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அதிகளவில் அநுர பக்கம் நிற்பது போலவே தோற்றம் தெரிகின்றது.
மலையகத்திலும் முன்னரை விட அதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு லயன்களாக சென்று அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். சிறு சிறு கூட்டங்களையும் நடத்துகின்றனர். பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதினால் அவர்களின் முயற்சிகள் எவ்வளவு தூரம் வாக்குகளாக மாறும் என்பதை சொல்வது கடினம். படித்த நடுத்தரவர்க்கத்தினரிடையே அதன் செல்வாக்கு அதிகரிக்கலாம்.
சஜித் பிரேமதாசவின் பலம் என்பது அதன் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பலம் தான். மலையக, முஸ்லிம் கட்சிகளும் அதனுடன் இணைந்திருப்பது அதற்கு ஒரு சேமிப்புப் பலம்.எனினும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கட்சி மாறியமை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஒரு கறுப்புப் புள்ளியைக் ஏற்படுத்தியுள்ளது. வேலுகுமார் –- திகாம்பரத்தின் பகிரங்க கைகலப்பும் கறுப்புப் புள்ளியை பெரிதாக்கியுள்ளது எனலாம்.
வேலுகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு அவரது செல்வாக்கு ஒரு காரணமாக இருந்த போதிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடையாளமும் முக்கிய காரணம். முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினரும் தமது விருப்பு வாக்குகளில் ஒன்றை அவருக்கு அளித்திருந்தனர். அதுவும் வெற்றியில் பங்கு செலுத்தியிருக்கின்றது. எதிர்காலத்தில் வேலுகுமார் வெற்றியடைவது அவருக்கு பாரிய சவாலாகவே இருக்கும்.
கட்சிகள் தனித்தனியாக இருப்பது அது சார்ந்த மக்கள் கூட்டத்திற்கு பலத்தை தராது. அவை ஐக்கிய முன்னணியாக ஒன்று சேரும்போதே பலம் கிடைக்கும். வேலுகுமாரின் வெளியேற்றம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பலத்தை குறைத்துள்ளது என்றே கூற வேண்டும். ஆளும் கட்சி அரசியல் எப்போதும் கட்சிகளுக்குள் உடைவை கொண்டு வரவே பார்க்கும். மலையக, முஸ்லிம் கட்சிகளில் இதனை நன்கு பார்க்கலாம்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று முஸ்லிம் கட்சிகளோடு இல்லை. இது ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு சடங்காகவே அங்கு அரங்கேறுகின்றது. எனினும் உறுப்பினர்களை விட கட்சியின் பலம் அதிகம் என்பதால் கட்சி ஒருவாறு தப்பிப் பிழைக்கின்றது. ஆளும் கட்சி அரசியலைச் செய்து கொண்டு கொள்கை அரசியலை நகர்த்துவது கடினம் என்பதற்கு முஸ்லிம் அரசியலே மிகப் பெரும் சாட்சி.
மக்களின் அரசியல் கலாசாரமும் இங்கு முக்கியம். கொள்கைகள் வலுவாக உள்ள இடங்களில் அது மக்களின் அரசியல் கலாசாரமாகவே மாறிவிடும். இதன் பின்னர் கட்சிகளோ, தனிநபர்களோ எவ்வளவுதான் முயன்றாலும் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செல்ல முடியாது. சிங்கள தேசத்தின் அரசியலும் தமிழ்த் தேசத்தின் அரசியலும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். சிங்கள தேசத்தில் சிங்கள - பௌத்த தேசியவாதம் என்பது ஒரு அரசியல் கலாசாரமாக வேரூன்றிவிட்டது. இதனால் எந்தச் சிங்கள கட்சிகளும் சிங்கள- பௌத்த தேசிய வாதத்தைக் கைவிட்டு விட்டு நீண்ட தூரம் பயணிக்க முடியாது. அரசியல் யாப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்த முயலாமைக்கு இதுவே காரணம். அரசியல்வாதிகள் விரும்பினாலும் பயணிக்க முடியாது என்பதே யாதார்த்த நிலை.
தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்த் தேசியம் ஆழமாகவே வேரூன்றி மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கலாசாரமாக மாறிவிட்டது. இதனால் தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டு விட்டு அரசியல்வாதிகளினால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. சுமந்திரன் போன்றோர் தடுமாறுவதும் இந்தப் புள்ளியில்தான். சுமந்திரன் அடிப்படையில் தமிழ்த் தேசியவாதியல்ல. அவர் ஒரு சிங்களதேச சார்பு அரசியல்வாதி. இன்று அவர் தனது பாதையில் பயணிக்க முடியாதவராக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நிலை கவலைக்கிடம் போலவே தெரிகின்றது. எல்லாவற்றிலும் சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலைதான். கட்சிகளாக அவரது அணியில் இணைந்தவை குறைவு. நபர்களாக இணைந்தவர்கள் தான் அதிகம். சிங்கள தேசத்தில் அவரது நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன. மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் வாக்குகளை கொண்டு வந்து சேர்ப்பர் எனக் கூற முடியாது. மொட்டுக் கட்சியின் செல்வாக்கு என்பது மஹிந்தவின் கைகளில் தான் தங்கியிருக்கின்றது. அதற்கு முன்னர் கிடைத்த வெற்றி என்பது மஹிந்தவின் கவர்ச்சியினால் கிடைத்த வெற்றிகள் தான். கட்சியின் வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கைக்கூட வெளியேறியவர்கள் கொண்டு வருவர் எனக் கூற முடியாது. தவிர, மொட்டுக்கட்சியின் பெரும் பகுதி வாக்குகள் அநுரகுமார திசாநாயக்காவை நோக்கி செல்வதற்கே வாய்ப்புக்கள் உண்டு. வழமையான சிங்கள பெரும் தேசிய வாக்குகளும் அனுரகுமாரவுக்கே அதிகம் செல்லும்.
உண்மையில் ரணில் விக்கிரமசிங்க , நாமல் ராஜபக்ஒஷ வுடன்தான் போட்டிக்கு நிற்கின்றாரே தவிர சஜித்துடனோ, அநுரவுடனோ அல்ல. 3ஆவது இடம் யாருக்கு என்பதில் தான் இருவருக்கும் இடையே போட்டி இடம்பெறுகின்றது. மொட்டுக் கட்சிக்கு சொந்த கட்சியைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலை. நாமல் ராஜபக் ஷ உண்மையில் வெற்றியடைவதற்காக போட்டியிடவில்லை மாறாக கட்சியை ரணில் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகவே போட்டியிடுகின்றார்.
ரணிலுக்கு உறுதியான வாக்குகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வாக்குகள் தான். தொழிற்சங்க பலம் காங்கிரஸிடம் இருப்பதினால் குறிப்பிட்ட வாக்குகளை அதனால் திரட்டிக் கொடுக்க முடியும். ஆனாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் ரணில் கோட்டை விட்டமை கரும் புள்ளியாகவே திகழ்கின்றது. மலையக நடுத்தரவர்க்கம் சஜித், ரணில், அநுரவென மூன்றாகப் பிரிந்து நிற்கின்றது. எனவே அங்கிருந்து திரட்சியான வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும் என கூற முடியாது.
அடுத்தது வடக்கு, - கிழக்கு வாக்குகள். யாழ்ப்பாண மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கலாம். அங்கும் 'பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸுக்கு வாக்களிப்போம். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம்' என்ற நிலையும் உள்ளது. கிழக்கில் பிள்ளையான் கட்சியின் வாக்குகளும் வியாழேந்திரனின் ஆதரவு வாக்குகளும் ரணிலுக்கு கிடைக்கலாம். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தான். அம்பாறை, திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் இவர்களுக்கு செல்வாக்கு கிடையாது. மட்டக்களப்பிலும் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் ரணிலுக்கான வாக்குகள் சரியலாம். அரியநேந்திரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.
கிழக்கின் முஸ்லிம் வாக்குகள் சஜித், ரணில் என இரண்டாக பிரிவதற்கே வாய்ப்புகள் உண்டு. அங்கு கட்சி என்ற அடிப்படையில் மட்டுமல்ல தனி நபர்களுக்கும் செல்வாக்கு உண்டு. குறிப்பாக அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் செல்வாக்குள்ளவராக விளங்குகின்றார். அதேபோல ஹரீஸ் கல்முனையிலும் அதாவுல்லா அக்கரைப்பற்றிலும் செல்வாக்குள்ளவர்களாக விளங்குகின்றனர். இவர்களின் வாக்குகள் ரணிலுக்கு உதவலாம்.
தமிழ்த் தேசிய வாக்குகள் ரணிலுக்கு விழுவது கடினம். சுமந்திரன், சாணக்கியனைத் தவிர ஏனையவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவாகவே உள்ளனர். தமிழரசுக்கட்சியின் திருகோணமலை கிளை தமிழ்ப்பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்சியின் மத்திய குழுக் கூட்டம் செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற இருக்கின்ற போதிலும் அங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூற முடியாது. அங்கு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ தீர்மானம் நிறைவேற்றினாலும் சுமந்திரனுக்கு தோல்விதான். பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருப்பதால் கட்சி எதிர்த்து தீர்மானம் எடுப்பதும் கடினம். 'ஊரோடு ஒத்து வாழ வேண்டும்' என்பது தமிழ்ப் பழமொழி. இதனைப் புறக்கணித்துக் கொண்டு கட்சியினால் நீண்ட தூரம் செல்ல முடியாது.
மட்டக்களப்பில் அருண்தம்பிமுத்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அருண் தம்பிமுத்துவின் பெற்றோர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தையார் சாம் தம்பிமுத்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பேரன் ஈ.ஆர். தம்பிமுத்துவும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தாயார் கலா தம்பிமுத்து தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் முக்கிய புள்ளி. அத்துடன் செனட்டர் மாணிக்கத்தின் மகள். எனவே அருண் தம்பி முத்துவின் ஆதரவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளரைப் பலப்படுத்தும்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு தற்போது தான் தமிழ் மக்கள் மத்தியில் நொதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நொதிப்பினை கிளிநொச்சி மாவட்டத்தில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவரை பளையிலிருந்து மேள தாளத்துடன் மக்கள் அழைத்துச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கட்சி, முழங்காவில் என அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் அவர் சென்றிருக்கின்றார். தொடர்ந்து முல்லைதீவு, வவுனியா, மன்னார் சென்று பிரசாரங்களை முடித்துக் கொண்டு கிழக்கு நோக்கிப் பயணிப்பார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் திருவிழா இடம்பெற்று வருவதால் பிரசாரம் இன்னமும் சூடு பிடிக்கத் தொடங்கவில்லை. எனினும் கிராம ரீதியான பிரசாரம் ஆரம்பித்துவிட்டது. 3ஆம் திகதியுடன் நல்லூர் திருவிழா முடிந்து விடும். அதன் பின்னர் பிரசாரம் சூடு பிடிக்கலாம். தமிழ் பொது வேட்பாளர் அலை மெதுவாக ஆனால், முன்னோக்கி வளரத் தொடங்கி விட்டது . பல பொது அமைப்புக்கள் தாங்களாகவே முன்வந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளன.
தமிழ்ப்பொதுவேட்பாளரைப் பொருத்தவரை தமிழ் பிரதேசங்களில் சிங்கள வேட்பாளர்களை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றாலே வெற்றி. 2004 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றரை லட்சம் வரையான வாக்குகளையே பெற்றிருந்தது. அதுவே 2000க்கு பின்னர் பெற்ற உச்ச வாக்குகளாகும். பொது வேட்பாளர் அத்தகைய வாக்குகளைப் பெற்றால் மகா வெற்றி எனக் கூறலாம்.
வாக்கு வீத வெற்றியை விட மிகப்பெரிய வெற்றி மீண்டும் தமிழ் அரசியலை ஓர் ஒருங்கிணைந்த அரசியலுக்குள் கொண்டு வந்தது தான். தமிழ்ப் பொது வேட்பாளரின் முக்கிய இலக்குகளாக மூன்று இருந்தன. ஒன்று தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுதல், இரண்டாவது தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தொடர்ச்சியாக கூறுதல், மூன்றாவது ஆக்கிரமிப்பு அரசினை அம்பலப்படுத்துதல். இந்த மூன்று இலக்குகளையும் நோக்கி வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றது என்றே கூறலாம்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தனித்த ஓட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சுமந்திரன் கூட இன்று தனித்து ஓட முடியாத நிலையில் உள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் உள்ள கட்சிகள் இனி வருங்காலங்களில் பொதுக் கட்டமைப்பாகத்தான் நகருவது என்றும் தனித்து நகருவதில்லை என்றும் தீர்மானம் எடுத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க கட்சிகளுக்கு தனித்தனியாக அழைப்பு விடுத்திருந்த நிலைமை மாறி தற்போது தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார். தேர்தல் முடியும் வரை உரையாடச் செல்வதில்லை என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ரணிலின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப உள்ளது. தற்போது ரணிலின் தேர்தல் அறிக்கை உரையாடலுக்கான தேவையையே இல்லாமல் செய்து விட்டது.
தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் தீர்வு என்ற அடிப்படைப் பிரச்சினை, பொறுப்புக் கூறல் பிரச்சினை, ஆக்கிரமிப்பு பிரச்சினை, காணாமல் போனோர் விவகாரம் அரசியல் கைதிகள் விவகாரம், காணிப்பறிப்பு விவகாரம் உட்பட இயல்பு நிலையைக் கொண்டு வரும் பிரச்சினை தமிழ் மக்கள் தமது சொந்தக் காலில் நிற்கக்கூடிய தன்னிறைவுப் பொருளாதாரம் பற்றிய பிரச்சினை என்கின்ற விடயங்களில் சிறிய வெளிச்சங்களை கூட ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காட்டவில்லை. ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமல்ல சஜித், அநுர என்போரின் விஞ்ஞாபனங்களிலும் கூட தமிழ் மக்களுக்கான வெளிச்சங்கள் எதுவும் இல்லை.
சிங்கள தேசம் மீண்டும் மீண்டும் கூறும் செய்தி இதுதான்.
இனப்பிரச்சனைக்கு உள்நாட்டுத் தீர்வு இல்லை என்பதே அச்செய்தி.
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் தமிழ் எடுபிடிகளுக்கு இது சமர்ப்பணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM