ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய மக்கள் சக்தி உடனடியாக செய்யப்போவது என்ன? - ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் விளக்கம்

29 Aug, 2024 | 11:39 AM
image

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால்,  பாராளுமன்ற தேர்தல் வரை  அமைச்சரவை ஒன்று இல்லாமலேயே நாட்டை நிருவகிப்பார். புதிதாக பெயரிடப்படும் 25 அமைச்சுகளுக்கு அவற்றின் செயலாளர்களே தலைமை வகிப்பர்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும். அமைச்சரவையும் கூட கலைக்கப்பட்டுவிடும்.

புதிய 25 அமைச்சுக்கள் பெயரிடப்படும். அவற்றுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சகல அமைச்சுக்களும் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் இடைக்காலத்துக்கு ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.  

இரு மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும். புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டதும் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பதவியேற்றதும் உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கிக் கூறினார்.

 தற்போதைய அமைச்சு செயலாளர்கள் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும். இலங்கை நி்ர்வாக சேவையில் இருந்து சில புதிய செயலாளர்கள் நியமிக்கப்படுவர். பொறியியல்துறையை போன்ற விசேட துறைகளில் இருந்தும் பொருத்தமானவர்கள் அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்படுவர். 

குறுகிய காலத்திட்டம்

எமது குறுகியகால கொள்கைத் திட்டம் சுமார்  80 நாட்களுக்கானது. பாராளுமன்ற தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தேவையான இரு மாதங்களும் அடங்கும்.

வரிக்குறைப்பு குறித்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் உடனடியாகச் செய்யமுடியும். தற்போதைய பட்ஜட்டையே பின்பற்றுவோம். பிறகு அடுத்த மார்ச் மாதம் வரைக்குமான நிதிச் செலவினங்களுக்காக கணக்கு வாக்கெடுப்பு ஒன்று சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து புதிய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் அதற்கென்று நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டிய தேவை ஏற்படும். அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் திரட்டுநிதியில் இருந்து அதற்கான நிதியை ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யமுடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உறவு 

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்னெடுக்கும். கட்சியின் பட்ஜெட் யோசனைகளை இறுதிசெய்வதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசனை நடத்தப்படும்.  எமது பட்ஜெட்டின் பிரதான யோசனைகள் குறித்து அவர்களுக்கு அறிவிப்போம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயன்முறையை தடைபடுவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு தடைப்பட்டால் பொருளாதார மறுசீரமைப்பு செயன்முறையை அது பாதிக்கும். அதை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளைச் சந்தித்தபோது நாம் இதை  அவர்களுக்கு விளக்கிக் கூறினோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு தேசிய ஐக்கியத்தைக் கொண்டுவரக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றை நாம் இயற்றுவோம். அதற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வஜன  வாக்கெடுப்பு ஒன்றுக்கும் நாம் செல்வோம்.  சாத்தியமானளவு குறுகிய காலத்திற்குள் அதை நாம் செய்வோம். 

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் நாம் செல்லவிருக்கும் பாதை குறித்தும் விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளுக்கான எமது கொள்கைகளை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறோம். 

தனியார்துறைக்கு முக்கியத்துவம் 

எமது நிருவாகத்தின் கீழ்  குறைந்தபட்ச அரச தலையீட்டுடன் தனியார்துறையே பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும். தனியார்துறை எமக்கு அஞ்சவேண்டிய தேவை எதுவும் இல்லை. நாம் வர்த்தகத்து றயை சீர்குலைப்போம் என்று எமது எதிரிகள் அச்சமூட்டும் பிரசாரங்களைச் செய்கிறார்கள். அது உண்மையல்ல. 

எமது அரசாங்கத்தின் கீழ் தனியார்துறை அரசியல் தலையீடுகள் இல்லாமல் கூடுதலான அளவுக்கு பயனுறுதியுடைய முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும். அவர்களது வர்த்தகத்துறை நன்றாக செயற்பட்டால் மாத்திரமே அரசாங்கத்தை எம்மால் நன்றாக நடத்தமுடியும். முன்னரை விடவும் தற்போது வர்த்தக சமூகம்  எம்மை நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு இருந்த பல அச்சங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

எமது ஆட்சியின் கீழ் பொருளாதார ஜனநாயகம் இருக்கும்.  எமக்கு அஞ்சவேண்டாம். அதிகாரத்துக்கு வந்த பின்னர் மாத்திரமே எம்மை நிரூபிக்கமுடியும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களமே பொருளாதாரத்தின் இதயம். வரி மூலமான வருமானத்தை  குறைந்தது 30 சதவீதத்தினால் அதிகரிக்கும் இலக்கை தேசிய  மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டிருக்கிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குள் ஊழல் முறைகேடுகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அந்த திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நாம் பேசியிருக்கிறோம். அவர்களுடைய ஆதரவுடனும் பங்கேறனபுடனும் எளிமையான வரிக்கட்டமைப்பு ஒன்றை நாம் நடைமுறைப்படுத்துவோம். 

தேர்தல் உண்மையில் இரு முனைப்போட்டி 

செப்டெம்பர் 21 தேர்தலில் எமது வேட்பாளர் வெற்றிபெறுவார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததை விடவும் கூடுலான மக்கள் எமது தேர்தல் கூட்டங்களுக்கு வருகிறார்கள். இந்த தடவை சமூகத்தின் சகல பிரிவினரிடம் இருந்தும் எமக்கு ஆதரவு கிடைக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் மும்முனைப் போட்டியாக தோன்றினாலும் கூட  உண்மையில் அது இரு முனைகளிலான போட்டியே.  ஏனென்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஊழல்காரர்களை பாதுகாக்கும் ஒரே பக்கததிலேயே நிற்கிறார்கள். நாம் மாத்திரமே ஊழலுக்கு எதிரானவர்களாகவும் கள்வர்களைப் பாதுகாக்கும் முறைமைக்கு எதிராக போராடுவதில் உறுதிப்பாட்டைக் கொண்டவர்களாகவும் விளங்குகிறோம்.

விருப்பு வாக்கு வேண்டாம் 

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு வாக்களிப்பவர்கள் வேறு எந்த வேட்பாளருக்கும் அடுத்த விருப்பு வாக்கைப் பதிவு செய்யக்கூடாது. விருப்புவாக்கை எவரும் பதிவுசெய்வதை நாம் விரும்பவில்லை. ஏனென்றால் வேறு எந்த வேட்பாளர் மீதும் நாம் விருப்பைக் கொண்டிருக்கவில்லை. 50 சதவீதத்தும் அதிகமான வாக்குகளை எம்மால் பெறமுடியும். அதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம்.

கோட்டாபய ராஜபக்சவின் தோல்வி முறைமை மாற்றம் ஒன்று அவசரமாகத் தேவை என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் கொள்கைகள் பொதுமக்களின் தலையிலும் வயிற்றிலும் அடித்திருக்கின்றன. 2019, 2020 தேர்தல்களில் மூன்று சதவீதமான வாக்குகளையே எம்மால் பெறக்கூடியதாக இருந்தது என்பதால் நாம் நிலைகுலைந்து  எமது மனத்தைரியத்தை இழந்துவிடவில்லை. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் பொதுமக்கள் மீது நாம் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறோம். எமது வழியில் வந்த வாய்ப்பை நாம் இறுகப் பற்றிக்கொண்டோம்.

கூட்டுத் தீர்மானம்

தேர்தல் தொடர்பான சகல தீர்மானங்களும் தேசிய மக்கள் சக்தியினாலேயே எடுக்கப்படுகின்றன. ஜே.வி.பி.யையும் பல்வேறு துறைசார் அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய ஒரு விசாலமான கூட்டமைப்பே தேசிய மக்கள் சக்தியாகும். அதேவேளை ஜே. வி.பி. தனியான கட்சியாகவும் இருக்கிறது. ஆனால் எமது அரசாங்கத்தின் தீர்மானங்கள் தேசிய மக்கள் சக்தியினாலேயே எடுக்கப்படும். இரு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு எதுவும் கிடையாது. அவை இரண்டு தான் ஆனால் ஒன்று.

ஜே.வி.பியின் செயற்பாடுகளில் இரகசியம் எதுவும் கிடையாது. ஆனால் கட்சி கட்டுப்பாடு மிக்கது. தேசிய மக்கள் சக்தியிலும் அதே கட்டுப்பாடு இருக்கிறது. நாம் ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது அதை அடக்கமாக வைத்திருக்கிறோம். வெளியில் சென்று முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதில்லை. மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

ஜே.வி.பி.யிலும் தேசிய மக்கள் சக்தியிலும் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. மற்றைய கட்சிகளில் தலைவர் ஒரு முடிவை எடுத்தால் அதுவே இறுதி வார்த்தை. ஆனால் எமது கட்சிகளில் கலந்தாலோசனைகளை நாம் செய்கிறோம். பிரச்சினைகள் தொடர்பில் இணக்கப்பாடின்மை காணப்பட்டால் பிறகு நாம் கூட்டாக ஒரு முடிவை எடுக்கிறோம். அவ்வாறு ஒரு முடிவை நாம் எடுத்த பிறகு ஏன் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் சகல உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

அதிகாரத்துக்கு வந்த பிறகு குடும்ப உறுப்பினர்களை பொதுவெளிக்கு கொண்டுவராமல் இருக்கும் தற்போதைய நடைமுறையை நாம் கைவிட்டுவிடப் போவதில்லை. எமது வாழ்க்கைத் துணைகளையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ நாம் உத்தியோகபூர்வப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை. எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை  உறுதியாகப் பேணுவோம். அது ஒரு விதியல்ல, ஆனால் ஒரு வழக்கம். இவ்வாறு ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38