(நா.தனுஜா)
நாட்டின் சகல பிராந்தியங்களுக்குமான சம அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தல், அதிகளவில் மனித உரிமைகள் மீறப்பட்ட மலையகத் தமிழ் சமூகத்துக்கான நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மதத்தலைவர்களும், சிவில் சமூகப்பிரதிநிதிகளும், புத்திஜீவிகளும் கூட்டாக இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வண. கலாநிதி மாதம்பாகம அஸாஜி மகாநாயக்க தேரர், வண. களுபஹக பியரத்ன தேரர், அருட்தந்தை சி.ஜி.ஜெயகுமார், மெதடிஸ்த திருச்சபை ஆயர் ஆரி பெரேரா, ஏ.டபிள்யூ.ஹில்மி அஹமட், கலாநிதி வின்யா ஆரியரத்ன, பேராசிரியர் ஃபஸீஹா அஸ்மி, விசாகா தர்மதாஸ, எஸ்.சி.சி.இளங்கோவன், பேராசிரியர் ரி.ஜயசிங்கம், கலாநிதி எஸ்.ஜீவசுதன், வி.கமலதாஸ், நிரஞ்சன், கலாநிதி தயானி பனாகொட, கலாநிதி ஜெஹான் பெரேரா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் காலிங்க டியுடர் சில்வா, பேராசிரியர் எஸ்.எஸ்.சிவகுமார், கலாநிதி ஷண்முகராஜா ஸ்ரீகாந்தன், கலாநிதி ஜோ வில்லியம் உள்ளிட்ட மதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள், ஆலோசனைக்கூட்டங்களை நடாத்தினர். அதனை அடிப்படையாகக்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்மொழிவுகளை உள்ளடக்கியதாக அப்பிரதிநிதிகளால் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணம் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடம் கையளிக்கப்படவிருப்பதுடன், அதிலுள்ள விடயங்களை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குமாறும் வலியுறுத்தப்படவுள்ளது.
அதுமாத்திரமன்றி தேர்தல் முடிவு எத்தகையதாக இருப்பினும் இவ்விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற உத்தரவாதமும் பெறப்படவுள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்ட ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
பிராந்தியங்களுக்கான சம அதிகாரப்பகிர்வையும், மத்தியிலிருந்து அதிகார பரவலாக்கத்தையும் உறுதிசெய்தல், நாட்டிலுள்ள சகல சிறுபான்மையின மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல், இன, மத சமூகங்களுக்கு இடையிலான வலுவான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நிர்வாக மாவட்டங்களை ஒருங்கிணைத்தல், காணி ஆணைக்குழுவின் ஊடாக தேசிய காணிக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களின் பகிர்வை அமுல்படுத்தல், மாகாணசபைத்தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை மேலும் தாமதமின்றி உடனடியாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் அந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், கைதிகள், இழப்பீடு, மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பன உள்ளடங்கலாக யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு நிலைமாறுகால நீதிக்குரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் தீர்வுகாணல், வட, கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை ஏனைய மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கைக்குச் சமாந்தரமான மட்டத்தில் பேணல், நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியில் குடியுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழ் சமூகத்துக்கான நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல் என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM