எம்.எம்.மின்ஹாஜ்

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன.

கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிரான்பாஸ், மட்டக்குளி, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மருதானை, பொரளை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, வத்தளை, ஹெந்தல, ஜம்பட்டாதெரு உள்ளிட்ட பல பாகங்களிலும் குப்பை அகற்றப்படாமல் உள்ளன.

மேலும் இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளரிடமும், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வீரகேசரி இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்ட போது பதிலளிப்பதற்கு மறுத்தனர். மீதொட்டமுல்ல பிரச்சினையினால் ஒன்றும் கூறமுடியாது என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.