பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் பெரும்பான்மையானவை மார்பக புற்றுநோயும், கர்ப்பபை வாய் புற்றுநோயும் என்று தான் எண்ணியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தைரொய்ட் புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள். இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இவ்வகையினதான புற்றுநோய், புற்று நோயிற்கான பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

ஒரு சிலருக்கு தீடிரென்று கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஒரு சிலர் இது ஏதோ சிறிய பாதிப்பு தான் என்று எண்ணி பொது மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சைப்பெறுகிறார்கள். ஆனால் கழுத்துப் பகுதியில் தீடிரென்று வீக்கம் காணப்பட்டால் உடனடியாக புற்றுநோய் மருத்துவ நிபுணரை சந்தித்து முறையாக பரிசோதனை செய்து என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இத்தகைய தைரொய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்ஜேரி செய்து தான் சிகிச்சையளிப்பார்கள். அதற்கு முன்னர் இத்தகைய புற்றுநோயை பரப்பும் செல்கள் இரண்டு வகையாக இருக்கும். அதில் என்ன வகை என்பதை திசு பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ற வகையிலான சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஒரு சிலருக்கு பாதிப்பின் தன்மை வேறிடங்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக தைரொய்ட் சுரப்பியை சத்திர சிகிச்சை செய்து அகற்றிவிடுவார்கள். இதற்கு பின்னரான உடலின் இயக்கத்திற்குதேவையான தைரொய்ட் சுரப்பியினை வெளியிலிருந்து மருந்துகள் மூலம் ஆயுள் முழுவதும் எடுக்கவேண்டியதிருக்கும். ஆனால் இது நோய் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்தேயமையும்.

இத்தகைய புற்றுநோய் பாதித்து அவர்கள் சத்திர சிகிச்சை மூலம் தைரொய்ட் சுரப்பியினை அகற்றியிருந்தால், 6 மாதத்திற்கொரு முறை மருத்துவர்களை சந்தித்து தங்களின் தைரொக்சின் சுரப்பின் அளவை கண்காணித்து கொண்டு உரிய சிகிச்சைகளையும், உரிய உணவு வகைகளையும், உரிய மருந்துகளையும் சாப்பிட்டு வரவேண்டும்.

இதயத்தை சீராக வைப்பதற்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை உருவாக்குவதற்கும். உடல் வளர்ச்சிக்கும் பணியாற்றும் தைரொய்ட் சுரப்பியை அகற்றியதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Dr.எஸ் சந்திரசேகரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்