'இங்கிலாந்தில் ஓர் அரிய வாய்ப்புக்காக இலங்கை தாகத்துடன் இருக்கிறது'

Published By: Vishnu

20 Aug, 2024 | 08:08 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தில் ஓர் அரிய வாய்ப்பை பற்றிப் பிடித்துக்கொள்ள இலங்கை மிகுந்த தாகத்துடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநர் சனத் ஜயசூரய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 தொடர் நாளை புதன்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள நிலையில் சனத் ஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.

எட்டு வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை அணியில் பல அனுபவசாலிகள் இடம்பெறும் நிலையில், தனது வீரர்கள் மிகச் சரியான மனோநிலையுடன் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என விரும்புவதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

இந்தத் தொடர் முக்கியம் வாய்ந்தது என வலியுறுத்திய சனத் ஜயசூரிய, 'வீரர்கள் மத்தியில் தாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

'இது போன்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு  இலகுவில்  கிடைக்காது' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

'எனவே எம்மால் இயன்றபோது அதனை பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும். இங்கு ஓட்டங்கள் குவிப்பது சவாலானது. ஆடுகளம் தட்டையாக இருந்தாலும் பந்து சுவிங் அல்லது சீமிங் ஆகக்கூடும். அதற்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும்' என்றார் சனத் ஜயசூரிய.

இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபசாலியான சனத் ஜயசூரிய 42.1 என்ற சராசரியுடன் 421 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 1998இல் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை ஈட்டிய வெற்றியில் சனத் ஜயசூரயவின் பங்களிப்பு 213 ஓட்டங்களாகும்.

2014இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றியை இலங்கைக்கு ஈட்டிக்கொடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகிய அனுபவசாலிகள் இலங்கை அணியில் இடம்பெறுவது அணிக்கு பலம்சேர்க்கிறது என  சனத் ஜயசூரிய நம்புகிறார்.

சவால் மிக்க சூழ்நிலைகளில் சரியான அணுகுமுறைகளை வீரர்கள் கையாளவேண்டும் எனவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

'எம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் கடுமையாக போராடவேண்டும். 6 அல்லது 7 துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இடம்பெறும்போது இருவர் அல்லது மூவரே சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்கள் சிறப்பாக ஆரம்பிததால் கணிசமான ஓட்டங்களைப் பெறுவது அவசியம்.

'சவால் மிக்க ஆடுகளங்களில் தங்களுக்கான பொறுப்பை அவர்கள் அறிவர். ஒவ்வொருவரும் இயல்பாக விளையாடவேண்டும். சரியான ஆரம்பத்தை இட்ட பின்னர் நிலைமைக்கு ஏற்ப ஓட்டங்களை விரைவாக பெறவேண்டும் அல்லது வேகத்தைக் குறைக்க வேண்டும். பந்து பழையதான பின்னரும் இங்குள்ள ஆடுகளங்களில் பந்து சீமாகக் கூடும். டியூக் பந்தின் சிறப்பு அதுதான்' என்றார் அவர்.

இங்கிலாந்தில்  கோடைக்காலத்தின் பிற்பகுதியில் இந்தத் தொடர் விளையாடப்படுவதால் முன்னைய சுற்றுப் பயணங்களைவிட தற்போதைய கிரிக்கெட் சுற்றுப் பயணம் இலங்கைக்கு சாதகத்தன்மையைக் கொடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில் சனத் ஜயசூரியவின் மைல் கல் சாதனையைக் கடப்பதற்கு திமுத் கருணாரட்னவுக்கு 75 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. அதனை திமுத் கருணாரட்ன சாதிப்பார் என ஜயசூரிய பெருவாரியாக எதிர்பார்க்கிறார்.

'அவர் உறுதியான மனோபலம் கொண்டவர். அவருக்கு பலம், பலவீனங்கள் எவை என்பது தெரியும். இவ்விடயங்களில் அவர் நிறைய பயிற்சிபெற்றுள்ளார். இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் அவர் ஏதேனும் பெரிதாக செய்யக்கூடியவர்' என்றார் சனத்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை 50 சதவீத புள்ளகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்துடனான தொடரில் வெற்றிபெற்று அணிகள் நிலையில் நியூஸிலாந்தை பின்தள்ளி 3ஆம் இடத்திற்கு முன்னேற இலங்கை முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் பங்குபற்றும் 9 அணிகளில் 7ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து, தனது சொந்த மண்ணில் வெற்றிகளை ஈட்டி அணிகள் நிலையில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 36 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 17 - 8 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 11 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே இலங்கை  வெற்றிபெற்றுள்ளது.

1998இல் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

2006இல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் முத்தையா முரளிதரன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை 134 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியிருந்தது.

2014இல் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை 100 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதல் தடவையாக இங்கிலாந்தில் தொடர் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது. 

இலங்கை அணி

திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க,  குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்),  கமிந்து மெண்டிஸ், கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, ப்ரபாத் ஜயசூரிய.

இங்கிலாந்து அணி

டான் லோரன்ஸ், பென் டக்கெட், ஒலி போப் (தலைவர்),  ஜோ ரூட், ஹெரி புறூக், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மெத்யூ பொட்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஷொயெப் பஷிர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி....

2024-10-03 10:51:18
news-image

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில்...

2024-10-01 13:04:04
news-image

தினுர, விஷ்மி அதிசிறந்த பாடசாலைகள் கிரிக்கெட்...

2024-09-30 20:42:17
news-image

நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக்...

2024-09-29 18:13:23
news-image

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஓர்...

2024-09-29 13:33:58
news-image

பங்களாதேஷுடனான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்...

2024-09-29 12:46:01
news-image

சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை...

2024-09-29 12:21:55
news-image

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் சீரற்ற காலநிலையால்...

2024-09-28 19:00:47
news-image

இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான...

2024-09-28 13:46:19
news-image

இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின்...

2024-09-28 11:54:56
news-image

எதிரணிகளுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் கமிந்து மெண்டிஸ்...

2024-09-27 20:50:09
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய சாதனை நிலைநாட்டிய...

2024-09-27 14:56:44