ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளொட் மீது விமானப் பணிப்பெண்கள் சிலர் தொடுத்த வழக்கை மொஸ்கோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது.

சர்வதேச விமான சேவைகளை வழங்கும் ஏரோஃப்ளொட், கடந்த ஆண்டு மத்தியில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்தது. அதில், குறிப்பிட்ட உயரம் மற்றும் உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் மட்டுமே சர்வதேச விமான சேவைகளில் பணியாற்றத் தகுதிபெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தகுதிகள் இல்லாத பெண்கள் குறைந்த சம்பளத்துடன் உள்ளூர் விமான சேவைகளில் மட்டுமே பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த முடிவை எதிர்த்து ஏரோஃப்ளொட்டின் விமானப் பணிப்பெண்கள் சிலர் தொடுத்த வழக்கு மொஸ்கோ நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேசிய நிறுவனம் ஒன்று இவ்வாறு பாகுபாடு காட்டுவது பொருத்தமற்றது என்றும், தமது பாலுறுப்புகளைக் குறிப்பிட்டு கொச்சையாகப் பேசியதாகவும் பணி நிலை குறைக்கப்பட்ட விமானப் பணிப்பெண்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த ஏரோஃப்ளொட் தரப்பினர், பணிகளுக்குப் பொருத்தமான விதிகளை உடனடியாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தலாம் என ரஷ்யாவின் தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர். மேலும், சர்வதேச விமான சேவைகளில் அதிகப்படியான பணிப்பெண்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் இதனால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தனர். இதனாலேயே புதிய விதிகளை தாம் அமுல்படுத்தியதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன், கட்டுடல் கொண்ட பணிப்பெண்களையே தமது பயணிகள் விரும்புகிறார்கள் என்றும், கவர்ச்சியான பெண்கள் தமது விமான சேவைகளுக்கு விளம்பரமாகவும் பயன்படுகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மேற்படி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.