அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.

அதன்படி, நேற்று நடைபெற்ற நிகழ்வில், இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டது. இதில், வடகொரியாவின் இராணுவ பலத்தை இராணுவ வீரர்கள் உணர்ச்சிபூர்வமான பாடல் மூலம் வெளிப்படுத்தினர். இதையொட்டி, பிரமாண்டத் திரையொன்றில், அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணைத் தாக்குதலை நடத்துவது போன்ற ‘அனிமேஷன்’ காணொளியொன்றும் வெளியிடப்பட்டது.

அதில், வடகொரியா ஏவும் ஏவுகணையொன்று பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க நகர் ஒன்றின் மீது விழுந்து வெடிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஏவுகணை வெடிக்கும்போது, அணுகுண்டு வெடிப்பதற்கொப்பான எதிர்விளைவுகள் ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்கக் கொடியில் உள்ள நட்சத்திரங்கள் கல்லறை மீது சொரிவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்கா மீது வடகொரியா அணுவாயுதத் தாக்குதலையே நடத்துவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமது நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்றே நம்பப்படுகிறது.