(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும்,பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (14) தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய குடியரசு முன்னணியின் பொதுச்செயலாளர் கருணாரத்ன ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சுயாதீன எதிரணியின் உறுப்பினர்கள் உட்பட ஐக்கிய குடியரசு முன்னணியினர் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டதாவது,
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.2019 ஆம் ஆண்டு மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் விரட்டியடித்தார்கள்.பாரிய போராட்டத்துக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
75 ஆண்டுகால அரசியலை ஒருதரப்பினர் விமர்சிக்கிறார்கள்.நாட்டின் இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வியால் தான் நாடு முன்னேற்றமடைந்துள்ளது. 75 ஆண்டுகால அரசியலையும் விமர்சிக்கும் தரப்பினர் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையாலும், விடுதலை புலிகள் அமைப்பின் போராட்டத்தாலும் இலங்கை 200 பில்லியன் டொலரை இழந்துள்ளது.ஆகவே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன் இந்த நாடு அவரது குடும்ப சொத்து என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்பட்டார்.குடும்பத்தாரின் ஊழல் மோசடிகளை அவர் கண்டுக் கொள்ளவில்லை.இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை நாட்டு மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவரும் இன்று அவர் பக்கம் உள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மக்களின் வலியுறுத்தலை நிறைவேற்ற முடியாது.
கொள்கை அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றிணைந்துள்ளோம்.தேசியத்துக்காக ஒன்றிணைவோம் என்று நாங்கள் வெளியிட்ட கொள்கை திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.நாட்டினதும்,நாட்டு மக்களினதும் எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM