கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை, கொடூர கொலை: ‘இயர்போன்' மூலம் கொலையாளி கண்டுபிடிப்பு

12 Aug, 2024 | 01:56 PM
image

கொல்கத்தா: கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். ‘இயர்போன்' மூலம் கொலையாளியை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. மருத்துவமனை வளாகத்தின் இதர பகுதி சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவர், ‘இயர்போனை' காதில் மாட்டியிருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறி சென்றுள்ளார். அப்போது அவரது காதில் ‘இயர்போன்' இல்லை. பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்' கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும்போது அவர் கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. அவருக்கு 4 முறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமையின்போது சஞ்சய் ராயிடம் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர் தீவிரமாக போராடி உள்ளார். குத்து சண்டை வீரரான சஞ்சய், பெண் மருத்துவரை மிக பலமாக தாக்கி இருக்கிறார். அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு: பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் ஆளும் திரிணமூல் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பெண் மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில்...

2024-09-08 10:06:25
news-image

லக்னோ கட்டிட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை...

2024-09-08 09:54:32
news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57