1945 ஆகஸ்ட் 06... ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்காவால் வீசப்பட்ட முதலாவது உலக அணுகுண்டு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் அந்நகர மக்கள் விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் ஒரு துயரமான சம்பவம் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஏற்படுமென அவர்கள் கனவிலும் எண்ணியிருந்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் சிறிதும் எதிர்பாராத வேளையில், அதே ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி பி- 29 என்ற அமெரிக்காவின் "பொக் ஸ்டார்" விமானமானது கொமாண்டர் ‘மேஜர் சார்ள்ஸ் சுவீனே’ என்பவரால் "ரினியன்" விமான தளத்திலிருந்து "Fat Man" (குண்டு மனிதன்) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஜப்பானில் உள்ள "நாகசாகி" நகரை நோக்கி புறப்பட்டது.
சரியாக ஜப்பான் நேரப்படி காலை 11:02 மணிக்கு (இலங்கை நேரம் காலை 07:32 மணிக்கு) உலகின் இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா நாகசாகியில் பாரசூட் ஒன்றின் மூலம் வீசியது.
இந்த குண்டு 3.5 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் விட்டமும் 4500 கிலோ எடையும் ஒரு கிலோ புளூட்டோனியத்தையும் கொண்டிருந்தது.
இந்த குண்டு வீசப்பட்ட ஒரு சில நொடிகளில் சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர். 1950 அடி உயரத்தில் அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டு விழுந்தது. 22.7 வீதமான கட்டடங்கள் நெருப்பில் அழிந்தன. பெருமளவான வைத்தியர்களும் தாதிகளும் கொல்லப்பட்டனர். இதனால், அனேகமான வைத்தியசாலைகள் இயங்க முடியாமல் காணப்பட்டன.
இந்த குண்டுவீச்சு நடந்து ஆறாவது நாளில் 1945 ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது.
இந்த அணுகுண்டு வீச்சு தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்தது.
இன்றும் அங்குள்ளவர்களுக்கு தைரொய்ட், மார்பு, சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் என்பன ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு நடந்த அணுகுண்டின் விபரீதத்தை உலகுக்கு விளக்கும் முகமாக நாகசாகி நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
ஜப்பானில் அணுகுண்டு தாக்கங்களினால் பலியானவர்களின் நினைவிடத்தில் "இனி எப்போதும் இப்படி ஒரு கொடூர விடயத்தை நடக்க விடமாட்டோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி தமது உரையின்போது "மீண்டும் அணுவாயுத யுத்தம் ஒன்றுக்கான அடித்தளம் இடப்படுவதனால் நாங்கள் மேலதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என கூறினார்.
இவரது இந்த கூற்றானது எதிர்காலத்தில் உலகில் நடக்கவிருக்கின்ற அபாயத்தினை முன்கூட்டியே தெளிவுபடுத்துகிறது.
அணுசக்தி பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன. ஹிரோஷிமா - நாகசாகியில் பிரயோகிக்கப்பட்ட அணு ஆயுதங்களை விட, இன்று அணுசக்தியினை வைத்திருக்கும் நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் பல மடங்கு அழிவாற்றல் மிக்கவை.
உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் கொரிய தீபகற்பம் ஆகியவை பேரழிவுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பதையும் நோக்கலாம்.
இத்தனை கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுத உற்பத்தி இன்னும் உலகுக்குத் தேவையா என மக்களும் அரசாங்கங்களும் சிந்திக்கவேண்டும்.
இவ்வாறான பேராபத்து கொண்ட அணு ஆயுதங்களிலிருந்து உலகை காப்பதற்கான ஒரே மார்க்கம் அவற்றை முற்றாக ஒழிப்பது தான்!
2017 ஜூலை 7ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் அணுவாயுதத்தை முழுமையாக அழித்திட வேண்டும் என்ற முகப்புரையுடன் "அணு ஆயுதத் தடை ஒப்பந்தம்" நிறைவேற்றப்பட்டது.
122 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஆதரித்து வாக்களித்தன. அதன்படி, அனைத்து அணு ஆயுதங்களும் சட்டத்துக்குப் புறம்பானவை. அவற்றை ஒழித்திட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அணு ஆயுத நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
அணு ஆயுத உற்பத்தியை உலக நாடுகள் கைவிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை தாமதமின்றி அங்கீகரிக்கும்படி உலக மக்கள் தத்தமது அரசுகளை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்கின்ற பட்சத்தில் அணு ஆயுத ஆபத்திலிருந்து உலக மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
உலக ரீதியாக நாடுகளுக்கிடையே ஏற்படுகின்ற போட்டி மனப்பான்மை கூட அணுகுண்டு தயாரிப்புக்குக் காரணமாக இருக்கக்கூடும் எனலாம்.
இன்று உலகில் ஒன்பது நாடுகள் சுமார் 9585 அணு ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் தன்னகத்தே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் ஒன்பது அணு ஆயுத நாடுகள், அணு ஆயுத உற்பத்திக்காக 91.3 பில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளன.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வறுமையாலும் வேலையின்மையாலும் மருத்துவ வசதிகள் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். கல்வி, மருத்துவ வசதிகளுக்கான நிதியின் பெரும்பகுதி அணு ஆயுதங்களுக்காகவும் இராணுவத்துக்காகவும் செலவு செய்யப்படுகின்றது.
கோடிக்கணக்கான தொகையை அணு ஆயுத உற்பத்திக்காக வாரி இறைக்கும் அமெரிக்கா, தனது குடிமக்களுக்கு மருத்துவ சிகிச்சையைக் கூட இலவசமாக வழங்கவில்லை என்பதே யதார்த்தம். இதற்காக பயன்படுத்தப்படும் பணம் மனித குலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அவை மனித குலத்தை மேம்பாடடையச் செய்யும்.
21ஆம் நூற்றாண்டில் புவிசார் அரசியலை வழிநடத்தும்போது ராஜதந்திரம் மாத்திரமே இவற்றுக்கான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
அணு ஆயுதங்கள் உலக சமாதானத்தை எதிர்க்கும் சக்திகள்!
மனித குலத்தின் மாண்பினை, அமைதியான வாழ்வை நாசமாக்கும் நாசகாரிகள்!
போர் காலங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் மண்ணோடு மண்ணாகப் போய்விடும்.
இதனை உணர்ந்து செயல்படுவது நாடுகளின், நாட்டு மக்களின் கடமைப்பாடாகும்.
இந்திய தத்துவஞானியான ஜே .கிருஷ்ணமூர்த்தி, "போர் அற்ற உலகை உருவாக்க, போட்டிகள் அற்ற உலகை உருவாக்க வேண்டும்" என்று கூறியதில் எத்தனை உண்மைகள் இருக்கின்றன!
உலக சமாதானம் வேண்டி அனைவரும் பிரார்த்திப்போம்!
- பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் (முன்னாள் ராஜதந்திரி/ தூதுவர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM