எம்முடைய இளைய தலைமுறையினர் தற்போது அலுவலகமோ அல்லது வீடோ வேலை செய்யும் போது நீண்ட நேரம் அமர்ந்தபடியே பணியாற்றுகிறார்கள் அல்லது நீண்ட நேரம் நின்ற படியே வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக ஒரு சிலருக்கு கால்களில் கறுப்பு புள்ளிகள் அல்லது கால் நரம்புகளில் முடிச்சுகள் தோன்றுகின்றன. மாதவிடாய் நின்றுவிடும் காலகட்டங்களில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் சீராக நடைபெறாததே இதற்கு காரணம். கால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்படுவதற்கு ஒரு சிலருக்கு மரபியல் காரணங்களாலும் வரக்கூடும். பலரும் நினைப்பது போல, இது உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் உரிய முறையில் சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால் .1 சதவீதத்தினருக்கு இவை புற்றுநோயாக மாறக்கூடும். 

ஒரு சிலருக்கு காலில் கறுப்பு கறுப்பாக புள்ளிகள் தோன்றலாம் அல்லது இரத்தக் கசிவு ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் கால்களை தரையில் படாமல், உயர தூக்கி வைத்திருந்தால் இரத்தக் கசிவு நின்றுவிடும். 

இந்நிலையில் இத்தகைய வெரிகோஸிஸ் வெயின் பிரச்சினை, காரணமே இல்லாமலும், காரணங்களுடன் என இருவகைகளிலும் வரக்கூடும். இதற்குரிய சோதனைகள் மேற்கொள்வதன் மூலம் உரிய சிகிச்சையையோ, பராமரிப்புடன் கூடிய நிவாரணத்தையோ மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஒரு சிலருக்கு இதன் காரணமாக காலில் கறுப்பு புள்ளிகள் அதிகம் இருந்து, அதனால் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் மட்டுமே மருத்துவர்கள் சத்திர சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைப்பார்கள். தற்போது இது போன்றவர்களுக்காகவே விசேடமான காலுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளை அணிந்து கொண்டும், மருத்துவர்களின் அறிவுரையையும் கேட்டால் இதிலிருந்து குணமடையலாம்.

Dr.S M பிரபு.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்