(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையும் மற்றும் மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தை மேற்கொண்ட இந்திய நிறுவனத்தின் வேலை தாமதத்துக்காக 9 இலட்சத்து 20 ஆயிரம் டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டி இருக்கிறது. என்றாலும் அந்த நஷ்ட ஈட்டை வேறு டீல் ஊடாக தமது பைக்குள் போட்டுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கும் மற்றும் மஹோவில் இருந்து அநுராதபுரம் வரையிலும் போடப்படும் ரயில் பாதை திட்டத்தில் 91 மில்லியன் டொலர் செலவாகிறது. அதாவது 28ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகிறது.
இதில் உள்ள நிபந்தனை என்னவென்றால் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் இந்த வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யாவிட்டால் 10 ஆயிரம் டொலர் நாளொன்றுக்காக தண்டப்பணமாக ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும். அது தொடர்பான உடன்படிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டம் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் பாதை அமைப்பு பணி ஜுன் 7ஆம் திகதிக்கு நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஜுலை 13ஆம் திகதியே அது நிறைவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி 36 நாட்கள் அதனை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனம் 3 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும். இதன் இலங்கை பெறுமதி 160 மில்லியன் ரூபாவாகும்.
அத்துடன் மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை அமைப்பு பணி ஜுலை 6ஆம் திகதி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது நிறைவடையவில்லை. ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவு செய்யவுள்ளதாக பொறியியலாளர்கள் கூறியுள்ளனர். அப்படி நிறைவு செய்தால் 56 நாட்களாவது தாமதமாகலாம். இதற்காக 5 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை தண்டப்பணமாக செலுத்த வேண்டும். இதன்படி இரண்டு திட்டங்களுக்கும் 9 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் முழுமையாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த திட்டத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் அசோக முனசிங்கவை நீக்கியுள்ளனர். அவரை அமைச்சின் செயலாளரே நீக்கியுள்ளார். அந்த செயலாளர் பாரியளவிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரியாவார். சில வருடங்களுக்கு முன்னர் வெள்ளைப்பூண்டு மோசடியின் போது இப்போதுள்ள போக்குவரத்து அமைச்சரே வர்த்தக அமைச்சராக இருந்தார்.
அதன்போது சதோச நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்தவர் தற்போதைய அமைச்சின் செயலாளராகும். அத்துடன் உழுந்து கொள்கலன்கள் காணாமல் போன சம்பவத்துடனும் இவருக்கு தொடர்பு உள்ளது. அவரையே இப்போது பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளனர்.
ஏன் இவர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் அசோக முனசிங்கவை நீக்க வேண்டும். இந்திய நிறுவனம் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குறித்த திட்டத்தின் தாமதத்தால் செலுத்த வேண்டிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிகாரியே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதி அறியவில்லையா என்று கேட்கிறோம். டீல் ஒன்றின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு அந்த நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டாம் என்று கூற முயற்சிக்கின்றனர். வேறு டீல் ஊடாக அந்த பணத்தை தமது பைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM