(எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மன்னார் வைத்தியசாலையில் மதியராஜன் சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களிடம் பேசியபோது விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விசாரணை ஆட்களை மாற்றும் விசாரணையாக இருக்க கூடாது. நீதியான விசாரணையின் ஊடாக சம்பந்தப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. இதேவேளை 9 வைத்தியர்கள் எங்களின் வைத்தியசாலைக்கு வரவுள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வைத்தியசாலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்.இதேவேளை இந்திய டோலர் படகுகளின் வருகைகளால் எமது மீனவர்கள் கடந்த பல தசாப்தங்களாக துன்பங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான ரோலர் படகுகள் வருவதால் எமது மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நியாயமான முறையில் எமது மீனவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்.மீனவர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எமது மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அரசு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு அவர்கள் உரிய ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசும் அவர்களின் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடி துறையில் ஊக்கப்படுத்தி எமது மீனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்கும் நாடாக இந்தியாவை நாங்கள் கருதுகின்றோம். இதனால் எமது நம்பிக்கையின் படி மீனவர் விடயத்தில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் சீனா எமது மீனவர்களை தம்வசப்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்துடன் சீன இராணுவம் எமது தேசத்துக்கு வரவுள்ளதாக செய்திகளும் வருகின்றன. ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இராணுவத்தினரால் பட்ட அனுபவங்கள் உள்ளன. அத்துடன் துப்பாக்கி சத்தங்கள் இல்லாவிட்டாலும் போர் சூழலில் இருப்பதை போன்றே மக்கள் இருக்கின்றனர். எமது வரலாற்றை சிதைக்க வேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுப்பதை போன்று தெரிகிறது.
அரசின் முப்படையினரின் ஆக்கிரமிப்புடன் உள்ள வடக்கு, கிழக்கில் புதிதாக சீன இராணுவம் வருவது எதற்கு? இதனை அரசாங்கம் அனுமதிக்கின்றதா? இந்த விடயத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இதனை ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம். எமது மீனவர்களை சீனா தன்வசப்படுத்தும் முயற்சிகளையும் ஏற்க முடியாது.
இதேவேளை வன்னி மாவட்டத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டம் படுகொலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றமடைந்துள்ளது. அண்மையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார். பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் என்ன செய்கின்றனர். வன்னி மாவட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கை முறையாக இல்லை.
சிவில் பிரஜை ஒருவர் முறையிட்டால் அதனை தட்டிக்கழிக்கும் நிலைமை உள்ளது. இங்கு நடக்கும் அநீதிகளை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் மன்னாரில் எல்.ஆர்.சி காணிகள் வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட மக்களுக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM