கொலன்னாவ, மீட்டொத்தமுல்லை பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியுள்ள மீத்தொட்டமுல்ல மக்களுக்கு ஏற்படும் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது. 

ஆகவே அப்பிரதேசத்திற்கு மின் பிறப்பாக்கிகள் மூலம் மின் விநியோகிக்கப்படுவதாக குறித்த அமைச்சு அறிவித்துள்ளது

இன்று பிற்பகல் மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் அப்பிரதேசத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை காயமடைந்த 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு குழந்தை பலியாகியுள்ளது.

மேலும் பல வீடுகள் குப்பை மேட்டுக்குள் புதைந்துள்ள நிலையில் முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.