வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :
வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்யப்பட்டதாக, பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டுள்ளார்.
அந்தத் தொலைபேசி அழைப்பில் பேசியவர்கள், வங்கிக்கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிலிட வேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதி, அடையாள அட்டைப் பிரதி உட்பட பல ஆவணங்களை குறிப்பிட்ட கொழும்பு விலாசமொன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்கு மீதி விபரங்களை புகைப்பட வடிவில் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது.
சில நாட்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக்கணக்கிலிருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேக நபர்களால் பெறப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மை பெற்றுள்ளார். அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
தாம் சேகரித்த ஆவணங்கள், தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேக நபர்களில் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக்கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மற்றவரின் வங்கிக்கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM