காலித் ரிஸ்வான்
2034ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை சவூதி அரேபிய இராச்சியத்தில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் தயாராகி வருவதாகவும் அன்மைக்காலங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தமை யாவரும் அறிந்ததே.
சவூதி அரசாங்கம் தமது இலட்சிய திட்டமான விஷன் 2030 திட்டத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அந்நாட்டில் அபிவிருத்திகளை மும்முரமாக செய்துவருகிறது. இவ்வபிவிருத்திகள் சுற்றுலா, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற சகல துறைகளையும் இலக்குவைத்ததாக அமைகின்றன.
அந்த வகையில் 2034 FIFA கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளை நடாத்துவதற்கான உத்தியோகபூர்வ ஏலத்தில் சவூதி தனது ஏலப்புத்தகத்தை சமர்பித்துள்ளது. அதில் ஐந்து முக்கிய நகரங்களான ரியாத், ஜித்தா, அல்கொபார், அபா மற்றும் NEOM (இது சவூதியின் மிக முக்கியமான அதிநவீன நகர திட்டங்களில் ஒன்றாகும்) போன்ற நகரங்களில் போட்டிகளை நடாத்துவதற்காக முன்மொழிந்துள்ளது.
இந்த ஐந்து நகரங்களில் 11 புதிய மைதானங்கள் உட்பட 15 அதிநவீன மைதானங்கள் இடம்பெறும். புதிய மன்னர் சல்மான் விளையாட்டரங்கம் உட்பட 8 மைதானங்களை ரியாத் நகரில் அமையப்பெற்றுள்ளது. இதில் 92,000 பார்வையாளர்கள் வரை அமர்த்தப்படலாம். இதிலேயே தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகளை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி முகாம்களுக்கான 10 இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் FIFA நடைபெறும் காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஐந்து நகரங்களும் 230,000 அறைகள் வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 நகரங்களில் மொத்தம் 132 பயிற்சி இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளதோடு 72 மைதானங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
FIFA பார்வையிட வரும் ரசிகர்களுக்காக 10 முக்கிய பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட தளங்களும் இந்த ஏலப் புத்தகத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. மேற்சொன்ன முக்கிய ஐந்து நகரங்களிலும் ஒவ்வொரு முக்கிய தளங்கள் தேரந்தெடுக்கப்பட்டுள்ளன.
ரியாத் நகரில் உள்ள மன்னர் சல்மான் பூங்கா, ஜித்தா வாட்டர்ஃபிரண்ட், அபாவில் உள்ள அல்பிஹார் சதுக்கம், நியோமில் உள்ள மெரினா மற்றும் அல்கோபரில் உள்ள மன்னர் அப்துல்லா பூங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
FIFA உலகக் கிண்ணப் போட்டிகளின் முன்னெப்போதும் நடந்திறாத பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை தமது நாட்டில் நடத்த சவூதி அரேபியாவின் முயற்சி தொடர்பான விபரங்களை, 2034க்கான சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ ஏலப்புத்தகத்தை பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற FIFA விழாவில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து FIFA வெளியிட்டது.
‘Growing. Together’ என்ற மகுட வாசகம் தாங்கி சமர்பிக்கப்பட்ட இந்த ஏலப்புத்தகம் அந்நாட்டுத் தலைமைகளின் முழுமையான ஆதரவோடும் வழிகாட்டலோடும் தயார்செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஏலப்புத்தகம், சவூதி அரேபியாவின் இந்நிகழ்வை கோலாகளமாக நடாத்துவதற்கான உயரந்த விரிவான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வெளிச்சமிட்டு காட்டுவதோடு, சவூதியின் வரலாற்று ரீதியான பாரிய மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், 2034 FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் சவூதி அரேபியாவின் முயற்சிக்கு 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வரலாறு காணாத ஆதரவு கிடைத்துள்ளது என்று சவூதி கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் யாசர் அல்-மிசேஹால் உறுதி செய்துள்ளார். இது தரமான உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்துவதற்கான சவூதியின் மீதான சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை பிரதிபலிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த உலகளாவிய நிகழ்வை நடத்துவதற்கான எங்கள் முயற்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளது” எனவும் “2034இல் சவூதி மண்ணில் உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னில்லாதவாறான ஒரு புது வடிவிலான போட்டியையும் நடாத்துவோம்," என்றும் ரியாத் நகரில் நடைபெற்ற சவூதியின் ஏலப்புத்தக சமர்பிப்பு குறித்த அதிகாரப்பூர்வ செய்தி மாநாட்டில் அல்-மிசேஹால் கூறினார்.
மேலும், சவூதியின் விஷன் 2030 திட்டமானது குறிப்பிடத்தக்க பாரிய வளர்ச்சியை அந்நாட்டுக்கு அளித்துள்ளது எனவும், சவூதி அரேபியாவை உலகம் பார்க்கும் வகையில் கதவுகள் திறக்கப்பட்ட ஒரு நாடாகவும் ஆக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு FIFAஇனை சவூதியில் நடாத்துவது அந்நாட்டு மக்களின் ஒரு பெரிய கனவாகும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM