மன வளர்ச்சி குன்றிய அங்கவீனமுற்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பத்திற்குள்ளாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை  விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நவகத்தேகம மஹமெத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய யுவதியே இவ்வாறு மூன்று மாதக் கர்ப்பிணி எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பதற்கு முடியாத மந்த புத்தியுடைய குறித்த யுவதி அவரது வீட்டில் வைத்தே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த யுவதியின் தாய் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதோடு தந்தை யுவதி சிறு வயதாக இருக்கும் போதே அவர்களை விட்டுப் பிரிந்து சென்றுள்ளதாகவும், குறித்த யுவதி தனது பாட்டியின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வந்துள்ளதாகவும் பாட்டி வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் அங்கு சென்றே இவ்வாறு யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

கடந்த சில தினங்களாக குறித்த யுவதியின் நடவடிக்கையிலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து யுவதியின் பாட்டி அவளை நவகத்தேகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த போதே யுவதி கர்ப்பம் தரித்துள்ளமை தெரியவந்துள்ளது. 

பின்னர் பொலிஸார் குறித்த யுவதியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 45 வயதுடைய சந்தேக நபர் தன்னை பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.