ராஜபக்சாக்கள் ரணிலுக்கு செய்த வஞ்சனை திரும்பிவந்து பொதுஜன பெரமுனவை தாக்குகிறது

05 Aug, 2024 | 11:11 AM
image

டி.பி.எஸ். ஜெயராஜ்

னாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்தவார  முற்பகுதியில் ராஜபக்சாக்களினால் கொடுமையான முறையில் ஏமாற்றப்பட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மெதமுலான குடும்பம் தலைமையிலான' தாமரை மொட்டு ' கட்சி  விக்கிரமசிங்கவுக்கு பின்னால் உறுதியாக நிற்கும் என்று அவருக்கு பொய்யான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.நாமல் ராஜபக்சவினால் தெரிவிக்கப்பட்ட மாறுபாடான கருத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. ராஜபக்சாக்கள் அவரின் முதுகில் குத்திவிட்டார்கள். விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா இல்லையா என்று தீர்மானிப்பது பொதுஜன பெரமுனவைப் பொறுத்தது. அது கட்சியின் தெரிவுக்குரியது.  இந்த விவகாரத்தில் ராஜபக்சாக்கள் (நாமலைத் தவிர) நடந்துகொண்ட முறை மிகவும் அருவருக்கத்தக்கதாகும். தன்னை ராஜபக்சாக்கள்  ஆதரிப்பார்கள் என்று ரணிலை நம்பவைத்து ஏமாற்றி  தங்களின்  ஆதரவை முறைப்படி நாடச் செய்தார்கள். அதற்குப் பிறகு  அவரை நிராகரித்ததன் மூலம் அவமதிப்புக்குள்ளாக்கிவிட்டார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு அளிக்கவேண்டும் என்று விக்கிரமசிங்க முறைப்படி  கேட்கவேண்டும் என்றும் அதற்கு பிறகு கட்சி அந்த வேண்டுகோளை ஏற்று அங்கீகரிக்கும் என்ற செய்தியே அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அவ்வாறு செய்தார். ஆனால், இறுதியில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

முன்னதாக நடந்தது என்னவென்று பார்ப்போம். 2024 ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளை ரணில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடவேண்டும் என்று அந்த கட்சியின் தாபகரும் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச விரும்பினார். ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த ரணில் எந்த கட்சியையும் சாராத சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாகக் கூறினார். தன்னை ஆதரிப்பதற்கு பரந்த ஒரு கூட்டணி அமைக்கப்படும் என்றும் அதில் ஒரு அங்கமாக பொதுஜன பெரமுன இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பசில் அதற்கு ஒத்துழைப்பதற்கு தயாராக இருந்தார் போன்று தோன்றியது. ஆனால், உத்தேச கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் நிமால் லான்சா மற்றும் அநுரா பிரியதர்சன யாப்பா தலைமையில் பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துவந்த குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆத்திரமடைந்த பசில் பொதுஜன பெரமுனவை ஒரு தடவை நிராகரித்தால் நாம் கூட்டணியை ஒரு 100 தடவைகள் நிராகரிப்போம் என்று கூறி விலகிக்கொண்டார்.

ரணிலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்த வேறபாடுகள் சரிப்படுத்தப்பட்டன. விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பொதுஜன பெரமுன அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அவரையே ஆதரிக்க வேண்டும் என்று தலைமைத்துவத்துக்கு நெருக்குதல் கொடுத்தனர். மகிந்த ராஜபக்சவுடனும் பசிலுடனும் ரணில் பல சுற்றுப்  பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ரணில் அறிவித்த பிறகு அவர்  முறைப்படி பொதுஜன பெரமுனவின் ஆதரவைக் கோரவேண்டும் என்றும் அதற்கு பிறகு அந்த வேண்டுகோளை பரிசீலித்து பொதுஜன பெரமுனவும் முறைப்படி அங்கீகாரத்தை வழங்கும் என்பதே அந்த உடன்பாடு.

நாமல் ராஜபக்ஷ 

நாட்கள் செல்ல புதியதொரு பிரச்சினை கிளம்பியது. மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் அவரின் அரசியல் வாரிசுவுமான நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதை எதிர்க்கத் தொடங்கினார். தனது சிறியதந்தை பசிலுக்கு பதிலாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நாமல்  ஒரு  சுயேச்சை வேட்பாளராக விக்கிரமசிங்கவை தங்கள் கட்சி ஆதரித்தால் அது மேலும் பலவீனமடைந்து அரசியல் ரீதியில் முக்கியத்துவம் குறைந்த கட்சியாகிவிடும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அதன் சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நாமல் வலியுறுத்தினார். தாமரை மொட்டு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ரணில் விரும்பவில்லையானால்  கசீனோ உரிமையாளரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேராவைப் போன்ற வேறு எவராவது  வேட்பாளராக இருக்க முடியும்.  தம்மிக்க இணங்கவில்லையானால் தானே போட்டியிட முன்வருவதாக நாமல் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ரணில் மறுத்தார். அதையடுத்து நாமல் தம்மிக்க பெரேராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். பொதுஜன பெரமுனவின் மேடைகளில் மேற்கத்தைய உடுப்பில் பெரேரா காணப்பட்டார். அதேவேளை, பொதுஜன பெரமுன ரணிலை வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கட்சி உறுப்பினர்களுக்கு நாமலும் பொதுச் செயலாளர் சாகர காரியவாசமும் அறிவுறுத்தினர். விக்கிரமசிங்கவைப் பற்றி பாதகமான கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கிய நாமலும் சாகரவும் அவர் தோல்விகளைச் சந்திக்கின்ற ஒருவர் என்று கூறினார். ஆனால்,   அவர்களை அலட்சியம் செய்த ஜனாதிபதி இந்த விவகாரம் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு கூறினார்.

அதேவேளை, விக்கிரமசிங்கவும்கு ஆதரவான பொதுஜன பெரமுன அமைச்சர்களும்  இராஜாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யத்தொடங்கினர். நாமலின் அறிவுறுத்தலின்படி செயற்பட்ட சாகர காரியவாசம் அவர்களை தடுக்கத் தொடங்கினார். ஜூலை 21 கடவத்தையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தை தடுத்துநிறுத்த தனிப்பட்ட முறையில் சாகர தலையைிட்டபோது பிரச்சினை ஒரு உச்சத்துக்கு வந்தது.  பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் மாகாணசபை , மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களையும  தொடர்புகொண்ட சாகர பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பிரசன்ன ரணதுங்க

கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் கட்சி கட்டமைப்பின் தலைவரான அமைச்சரவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் கௌரவத்துக்கு  சாகர காரியவாசத்தின் நடவடிக்கைகள் ஒரு நேரடிச் சவாலை தோற்றுவித்தன. கடவத்தை கம்பஹா மாவட்டத்திற்குள் வருகிறது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் விதானவின் உதவியுடன் கடவத்தை கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு பிரசன்ன ரணதுங்க கடுமையாக பாடுபட்டிருந்தார். பதினைந்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அதில் கலந்துகொண்டனர். 28 பாராளுமன்ற உறுப்பினர்களும்  280  முன்னாள் உள்ளூராட்சி கவுன்சிலர்களும் பிரசன்னமாகியிருந்தனர். ரணிலை ஜனாதிபதி தேர்தலில்  ஆதரிக்கப்போகிறீர்களா இல்லையா என்று கேட்டு ரணதுங்க  மக்கள் கூட்டத்துக்கு கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான கைகள் ஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்ந்தன. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால்,  நாமலுக்கு கவலை. பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதாக ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்டி அவதூறு பரப்பும் செயற்பாடுகளை நாமல் தொடங்கினார். கடக்கக்கூடாத எல்லையை நாமல் கடந்துவிட்டதாகவும் ஜனாதிபதிக்கும் தாமரை மொட்டு கட்சிக்கும் இடையில் அரசியல் இணக்கப்பாட்டுக்கு வாய்ப்பு இருக்கமுடியாது என்றும் பல சுயாதீன அவதானிகள் உணர்ந்தனர். ஆனால்,  நாமலின் கருத்துக்களை சகித்துக்கொண்ட ரணில் முரண்பாடுகளை திருப்திகரமான முறையில் சீர்செய்து கொள்வதற்கு முயற்சித்தார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விரும்பாத அதேவேளை, தனக்கு அந்த கட்சியின் ஆதரவைப் பெறுவதில் விக்கிரமசிங்கவுக்கு தயக்கமிருக்கவில்லை. அவரின் வெற்றிக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு அவசியம் என்று உணர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்கள் தாமரை மொட்டு கட்சியின் தலைமைத்துவத்துடன் விட்டுக்கொடுப்பைச் செய்து இணக்கப்பாட்டுக்கு வருமாறு அவரை வலியுறுத்தினர்.

இதை ரணிலின் பலவீனமான இடம் என்று கருதிய ராஜபக்சாக்கள் அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்கள். ரணில் மகிந்தவையும் பசிலையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சந்தித்ததாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறின. நாமலையும் கூட ஒரு தடவை அவர் சந்தித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின.

இரு வேண்டுகோள்கள் 

ராஜபக்சாக்களினால் இரு " வேண்டுகோள்கள் "  விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  பிரதமராக தினேஷ் குணவர்தனவுக்கு பதிலாக நாமலை நியமிக்கவேண்டும் என்பது முதலாவது வேண்டுகோள். ரணிலின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப்பதவிகளில்  மிகவும் பெரிய பங்கைத் தரவேண்டும் என்பது அடுத்த வேண்டுகோள்.

தினேஷுக்கு பதிலாக நாமலை நியமிப்பதற்கு ரணில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தற்போதைய அரசாங்கத்திலும் எதிர்கால  காபந்து அரசாங்கம் ஒன்றிலும்  தினேஷ் குணவர்தன பிரதமராகத் தொடருவார் என்று ஜனாதிபதி கூறினார். புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதியதொரு அரசாங்கம் அமைக்கப்படும்போது கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமராக வருவார். அதே போன்றே புதிய அரசாங்கத்தில் அமைச்சர்  பொறுப்புக்களும் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்றத்தில் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையின் பிரகாரம் அமைச்சர் பதவிகளின் பங்கு அமையும்.

ரணில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றபோதிலும், ராஜபக்சாக்கள் அவரை நிராகரிக்கவில்லை. ரணிலுக்கு எந்தளவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவைப்படுகிறதோ அதேயளவுக்கு தங்களுக்கும் ரணில் தேவைப்படுவதாக ராஜபக்சாக்கள் விளங்கிக்கொண்டார்கள். பொதுஜன பெரமுனவின் ஆதரவைக் கோரும் முறைப்படியான கடிதத்துடன் ஜூலை 27 ஆம் திகதி பசில் ராஜபக்சவை சந்திக்கவருமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாமல் ராஜபக்சவின் எதிர்மறையான கருத்துக்களைப் பற்றி அக்கறைப்படவேண்டாம் என்றும் அரசியல் குழுவின் கூட்டத்துக்கு பிறகு ஒரு சுயேச்சை வேட்பாளராக அவரை பொதுஜன பெரமுன ஆதராக்கும் என்றும் அவருக்கும் அவருக்கு உறுதி கூறப்பட்டது. அரசியல் குழுவின் அங்கீகாரம் வெறுமனே  ஒரு சம்பிரதாயம் தான் என்றும் சொல்லப்பட்டது.

ராஜபக்சாக்களுடன் முன்னர் நெருக்கமாக இருந்து பிறகு ரணிலை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பசிலை நம்பவேண்டாம் என்றும் அவர் முதுகில் குத்தக்கூடும் என்றும் ரணிலுக்கு ஆலோசனை கூறினார்கள். ராஜபக்சாக்களை முற்றாகத் துண்டித்துக் கொண்டு தாமரை மொட்டு கட்சியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுமாறு அவர்கள் ரணிலை வலியுறுத்திக் கேட்டுக்.கொண்டனர்.

மகிந்த ராஜபக்ஷ

ஆனால், ரணில் அதைக் கேட்காமல் தனது ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பிரதானி சாகல இரத்நாயக்க சகிதம் பசிலைச் சந்தித்தார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எழுதப்பட்ட கடிதமும் கையளிக்கப்பட்டது.

"2024 ஜனாதிபதி தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்திருக்கும் அதேவேளை, அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவற்றின் ஆதரவையும் நாடிநிற்கிறேன். எனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை  எதிர்பார்க்கும் அதேவேளை உங்களது கட்சியிடமிருந்து முன்கூட்டியே பதிலையும் எதிர்பார்க்கிறேன்" என்பதே ஜனாதிபதி சிங்களத்தில்  எழுதிய கடிதத்தின் சாராம்சம்.

ஜூலை 28ஆம் திகதி ரணிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்த கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். மகிந்தவின் மனைவி சிராந்தியும் மகன்கள் யோசித்த, ரோஹித்த ஆகியோரும் கூட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொலைபேசியில் தொடர்பகொண்டு " எல்லாம் சரி " என்று கூறியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்தன.

அரசியல் குழுவின் கூட்டம்

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு ஜூலை 29 ஆம் திகதி கூடியது. அதன் 82 உறுப்பினர்களில் 79 பேர் அதில் கலந்துகொண்டனர். நாமல் தேசிய அமைப்பாளராக வந்த பிறகு இரு மாதங்களுக்கு முன்னர் அரசியல் குழு மீளமைக்கப்பட்டிருந்தது. அதில் நாமலின் விசுவாசிகளே பெரும்பான்மையானவர்களாக இருந்தனர். 

கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் தொடங்கியதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு தீய்மானிப்பது குறித்து ஆராயவிருப்பதாக பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் அறிவித்தார். ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஆதரவைக் கோரி தலைவர் மகிந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார். அந்த கட்டத்தில் இடைமறித்த பசில் அவ்வாறு கடிதத்தை எழுதுமாறு ரணிலை தானே கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

இந்த விவகாரம் ஆலோசனைக்கு எடுக்கப்பட்டபோது கட்சி ஜனாதிபதியை ஆதரிக்கவேண்டும் என்று   சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க பிரேரித்தார். அதை ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ கடுமையாக எதிர்த்தார். அதையடுத்து பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர மற்றும் ஒரு சிலர் தலையிட்டனர்.  மகிந்தானந்தவுக்கும் ஜோன்ஸ்ரனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது.

ரணிலுக்கு ஆதரவானவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக அவர் சார்பில் வாதிட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருந்த அதேவேளை, தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் சிலர் ரணிலுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர். விக்கிரமசிங்க செயற்படுகின்ற பாணியின் சில அம்சங்கள் பற்றி பசில் ராஜபக்ச தெரிவித்த சில கடுமையான கருத்துக்கள் ஜனாதிபதிக்கு எதிரான உணர்வுகளுக்கு வலுச்சேர்த்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கூறியது.

சிறிது நேரத்தில் வாங்குவாதங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்ச விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, பொதுஜன பெரமுன சார்பில் ஒரு  வேட்பாளரை நிறுத்தவேண்டுமா இல்லையா  என்பதே இங்குள்ள கேள்வி என்று கூறினார்.  இதை தீர்மானிப்பதற்கு வாக்கெடுப்பொன்றை நடத்தலாம் என்றும் அவர் யோசனையை முன்வைத்தார்.

கட்சி சொந்தத்தில் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற யோசனையை ஆதரிக்கிறீர்களா என்று கூட்டத்தில் இருந்தவர்களை சாகர காரியவாசம் கேட்டபோது எவரும் பதிலளிக்கவில்லை. கட்சி வேட்பாளரை நிறுத்துவதை எவரும் எதிர்க்கிறீர்களா என்று அவர் கேட்டபோது பதினொரு பேர் எதிராக வாக்களித்தனர். பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திசாநாயக்க, கோகில குணவர்தன,   கனக ஹேரத், பிரதீப் உதுன்கொட, சஹான் பிரதீப், மொஹான் பிரியதர்ஷன ஆகியோரே அவ்வாறு எதிராக வாக்களித்தவர்கள்.

சமால் ராஜபக்சவும் எஸ்.பி. திசாநாயக்கவும் தாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பாக கூறினர். அதையடுத்து கூட்டத்தில் பிரசன்னமாக இருந்தவர்களில் 66 பேர் பொதுஜன பெரமுன தனியாக வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்ற யோசனைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த கட்டத்தில் ஜனக்க பண்டார தென்னக்கோன் தானும் கட்சி வேட்பாளரை நிறுத்துவதை எதிர்ப்பதாக அறிவித்தார். வாக்களிப்பு முடிந்துவிட்டது என்று சாகர காரியவாசம் பதிலளித்தார். விரைவில் கட்சியின் வேட்பாளர் யார் என்று இறுதி   செய்யப்படும் என்று அங்கு அறிவிக்கப்பட்டது.பொதுஜன பெரமுன விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதில்லை.

அரசியல் நாடகம் 

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு விக்கிரமசிங்கவுக்கு எதிராக தீர்மானத்தை எடுத்திருந்தாலும், அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. பொதுஜன பெரமுன அதன் நடவடிக்கை மூலம் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயமாக ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதே நடவடிக்கை கட்சிக்கும் உடனடியாகவே விளைவுகளை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சமமானதும் எதிரானதுமான பதில் தாக்கம் இருக்கும் நியூட்டனின் மூன்றாவது விதி இங்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய அரசியல் நாடகமே அரங்கேறியது.

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி விக்கிரமசிங்கவை தாங்கள் ஆதரிப்பதாக அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட  பொதுஜன பெரமுனவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்கள். சிலர் செய்தியாளர்கள் மாகாநாடுகளை நடத்தினார்கள். வேறு சிலர் இலத்திரனியல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்கள்.  இன்னும் சிலர் 'எக்ஸ் ' ( முன்னைய ருவிற்றர் )  வலைத்தளத்திலா பதிவுகளைச் செய்தார்கள். பொதுஜன பெரமுனவின் தலைைமைத்துவம் செய்த அரசியல் துரோகம்  கட்சிமீது எதிர் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது என்று இப்போது தெரிந்தது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் கூட்டம் முடிவடைந்து ந்ன்கு மணித்தியாலங்கள் கடந்ததுதான் தாமதம் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் சுயாதீன அரசியல் அலுவலகத்தில் இன்னொரு கூட்டம் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கூடி ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினார்கள். இவர்களில் பெருமளவானவர்கள் பொதுஜன பெரமுனவையும் அதில் இருந்து முன்னர் பிரிந்து சுயாதீனமாக இயங்கிய குழுக்களையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஏழு அமைச்சரவை அமைச்சர்களும் 24 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை உச்சபட்சத்துக்கு ஆதரிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் பிரதமரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன.

வெளிப்படையாக உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிக் காட்டிக்கொள்ளும் சுபாவத்தை கொண்டிராதவர் என்றபோதிலும் விக்கிரமசிங்க அன்றையதினம் பெருமிதமடைந்தவராகக் காணப்பட்டார். அங்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறினார். நடந்தவைகளை சுருக்கமாக விளக்கிக்கூறிய விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள்  பிரதிநிதிகளும் தன்னை ஆதரிக்கவேண்டும் என்றுஅவர்  அழைப்பு விடுத்தார்.

அடுத்த சில நாட்களில் ரணிலுக்கு ஆதரவு அதிகரிப்பதை காணக்கூடியதாக இருந்தது. வெளிப்படையாக அவரை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்தது. நூற்றுக்கணக்கான முன்னாள் மாகாணசபை, மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ரணிலுக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் தாமரை மொட்டு கட்சியின் செல்வாக்குமிக்க பல உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்துநிற்பது தெரிந்தது.

இத்தகைய பின்புலத்தில்,   கட்சியின் தீர்மானங்களை மதிக்காதவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்  என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் விடுத்த அச்சுறுத்தல் யதார்த்தநிலையை ஏளனம் செய்வது போன்று தோன்றியது. இது தொடர்பில்  காரியவாசத்தினால் எடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் மீளமுடியாத சட்டத்தகராறுக்குள் கட்சியை அழிழ்த்தி விடக்கூடும். அது ஏற்கெனவே நம்பிக்கையற்ற முறையில் பிளவடைந்திருக்கும் பொதஜன பெரமுனவை மேலும் சிதறடித்துவிடவும் கூடும். சாகர காரியவாசம் பொதுச் செயலாளராக செயற்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவைக் கோரி  மனுத்தாக்கல் செய்யப்படக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாது.

விக்கிரமசிங்கவை ஏமாற்றி வஞ்சிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் உயர்மட்டம்  அவசரப்பட்டு எடுத்த தீர்மானம் அந்த கட்சிக்குள் அவருக்கான பெரும் ஆதரவு அலையை  தோற்றுவித்திருப்பதாக தெரிகிறது. இதற்கு பிரதான காரணம் சவால்மிக்க காலப்பகுதியில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும்  விக்கிரமசிங்கவின் சிறப்பான செயற்பாடுகளேயாகும். அவருக்கு ராஜபக்சாக்கள் செய்த வஞ்சனை திரும்பிவந்து பொதுஜன பெரமுனவை தாக்குகிறது.

ரணிலின் சாதனைகள் இரு தடங்களிலானவை. முதலில் அவர் நாட்டில் சட்டம், ஒழுங்கை மீளநிலைநிறுத்தி பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சகல மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அடுத்து அவர் அந்நிய செலாவணி இல்லாததன் விளைவாக தோன்றிய ' நீண்ட வரிசை ' காலகட்டத்தையும்  மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாட்டையும் ஒழித்துக்கட்டினார். ஓரளவுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை மீள ஏறபடுத்திய பிறகு சுபிட்சமான ஒரு பொருளாதார எதிர்காலத்துக்கான அத்திபாரங்களை அமைப்பதற்கான கூட்டு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதில் ஈடுபடத்தொடங்கினார்.

மக்கள் அபிப்பிராயம்

விக்கிரமசிங்கவைப் பற்றி தங்களது வாக்காளர்கள் அல்லது ஆதரவாளர்கள் கொணடிருக்கும் அபிப்பிராயமே அவர்ா மீதான இந்த பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின்  மனோபாவத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்பது முக்கியமான கவனிக்கவேண்டிய ஒரு அம்சமாகும். பெரும்பாலான பொதுஜன பெரமுன தலைவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது இடதுசாரிக் கட்சிகளில் தஙாகளது அடிமூலத்தைக் கொண்டவய்கள் எனபதை மறந்துவிடலாகாது. அவர்கள் பொதுவில் ஐக்கிய தேசிய கட்சி மீதான வெறுப்பையும்  அச்சத்தையும்  குறிப்பாக ரணிலுக்கு எதிரான அரசியலையும் தீனியாகக் கொண்டு போசித்து வளர்க்கப்பட்டவர்கள். இந்த வரலாற்றுக்கும் மனோபாவத்துக்கும் மத்தியிலும் கூட அவர்கள் இப்போது ராஜபக்சாக்களை அலட்சியம் செய்கின்ற அளவுக்கு ரணிலை உறுதியாக ஆதரிக்கிற்ர்கள். ஏன்?

முதலாவதாக,  ரணிலுடனான தனிப்பட்ட ஊடாட்டத்தின் விளைவாக அவர்கள் அவரின் அபிமானிகளாக மாறிவிட்டாரக்கள். அத்துடன் கடந்த இரு வருடங்களில் மனதிற்பதியத்தக்க அவரது சாதனைகளினால் அவர்கள் கவரப்பட்டு விட்டார்கள். இரண்டாவதாக, மிகவும் முக்கியமாக தங்களது ஆதரவாளர்கள் ரணிலைப் பற்றி என்ன    நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் எடுக்கிறார்கள்.

ஊடகங்களில் சில பிரிவுகளும் கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் இருந்துகொண்டு அரசியல் அரட்டை அடிப்பவர்கள் உட்பட அறிவுஜீவுகள் என்று கூறப்படுபவர்களும் விக்கிரமசிங்கவை கயமைத்தனமாக  விமர்சனம் செய்து தாக்கினாலும், சாதாரண மக்கள் குறிப்பாக கிராமப்புறஙகளைச் சேர்ந்தவர்கள் அவரின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைபவர்களாகவும் ஏன் பாராட்டுபவர்களாகவும் கூட காணப்படுகிறார்கள். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிப்பிராயத்துக்கு மதிப்பளிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எஸ்.எம். சந்திரசேன

அண்மைய உதாரணம் ஒன்று இதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன அண்மைய கடந்த காலத்தில் விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்துவந்தவர். சில மாதங்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்கள் மகாநாடொன்றைக் கூட்டி ஜனாதிபதியை படுமோசமாக தாக்கிப் பேசினார். பசில் ராஜபக்ச இடையறாது முயற்சித்தபோதிலும் சந்திரசேனவை அமைச்சராக நியமிப்பதற்கு விக்கிரமசிங்க இணங்க மறுத்தது அதற்கு ஒரு காரணம். அத்தகைய சூழ்நிலைகளில், ரணிலுக்கு ஏற்படக்கூடிய வீழ்ச்சி குறித்து கொண்டாடக்கூடியவர்கள் மத்தியில் இருவராகத்தான் சந்திரனே இருப்பார் என்று எதிர்பார்த்திருப்பர்.

ஆனால் நடந்திருப்பதோ எதிர்மாறானது. கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க  பாராளுமன்ற குழக் கூட்டத்தில் எதிர்பாராத வகையில் ஆனால் மிகவும் வரவேற்கக்கூடிய முறையில் சந்திரசேனவின் பிரசன்னம் இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதாக அவர் உறுதியளித்தது மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட அரசியல் குழுவும் ஆதரவு வழங்குவதை உறுதிப்படுத்தினார். அந்த மாவட்டத்தின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாகவும் சந்திரசேன கூறினார்.

மனமாற்றத்தைப் பற்றி சந்திரசேனவிடம் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவியபோது  அநுராதபுரம் மக்கள் ரணிலை ஆதரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று காரணம் கூறினார். " மக்கள் ரணிலை ஆதரிக்கும்போது  நான் எவ்வாறு அதை அலட்சியம் செய்யமுடியும்" என்று அவர் திருப்பிக்கேட்டதாக கூறப்படுகிறது. ரணிலுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று மாவட்ட அரசியல் குழு ஏகமனதாக தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

ஆதரவை வாக்குகளாக மாற்றுதல் 

அதிகரித்துவரும் இந்த ஆதரவு குறித்து ரணில் விக்கிரமசிங்கவும் அவரது தேர்தல் குழுவினரும் மகிழ்ச்சியடையவேண்டும் என்கிற அதேவேளை  எந்தெந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் மிகவும் கவனமாகச் செயற்படவேண்டும். முக்கியமானது  தனியே மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவு அல்ல, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்  மக்களின் ஆதரவாகும். பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் தங்களது தனிப்பட்ட ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கான வாக்குகளாக மாற்றக்கூடியதாக இருக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right