எதிர்க்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அனைவரும் அங்கீகரித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் அரசியல் செய்வதற்கு நல்ல பொருளாதாரம் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சப்பாத்துகளை வழங்குவதால் மட்டும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரளவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
''இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர். ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். இந்த அமைச்சர்கள், எம்.பிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
இப்போது எமக்கு வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது. இதற்கிடையில், மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினோம். அத்துடன் நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் 'உறுமய' வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 250,000 பேருக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்கவும் மலையக கிராமங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு பல கல்விப் புலமைப்பரிசில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடு வங்குரோத்தான போது முடியாததை, வங்குரோத்தடைந்த நாடாக இருந்தபோது செய்தோம். நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டது தான் அதற்குக் காரணம். அரசாங்கத்தை பாதுகாத்தோம். அரசாங்கத்தை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது. 2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை மீறினால், அந்த சலுகைகளை இழக்க நேரிடும். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் இப்போது பேசுகின்றன. அவர்கள் சொல்வதைச் செய்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.
மேலும் இந்த நாட்டை இளைஞர்களுக்காக கட்டியெழுப்ப வேண்டும். இறக்குமதிக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி போதுமானதாக இல்லாதிருப்பது தான் எமக்குள்ள பிரதான பிரச்சினையாகும். அதனால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இந்த நிலை தொடர்ந்தால், 15 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
எனவே, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைத் தொடங்கி இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
இலவச சப்பாத்துகள் வழங்கினால்தான் இந்நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்றாலும், சப்பாத்துகளை வழங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசியல் செய்வதற்கும் நாட்டில் பொருளாதாரம் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் பொதுஜன பெரமுனையிலும் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் மற்ற வீட்டில் இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருந்தாலும் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்காவிட்டால் என்ன பயன். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்திய வேறு நாடு உலகில் இருக்க முடியுமா? எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த சவாலை ஏற்று நாட்டை அபிவிருத்தி செய்தோம். மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
04 வருடங்களாக இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை. எனவே, இந்த மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் புதிய திட்டங்களை இப்போது ஆரம்பிக்கிறோம். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியை வலுசக்தி மையமாக மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்க சுமார் ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாய் பிரதேசத்தில் புதிய பயிற்செய்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கிழக்கு மாகாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். தற்போது பசு வளர்ப்பு , மீன்பிடித் தொழில் நவீனமயமாக்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரிக்க திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அறுகம்பே தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பல்வேறு இடங்களில் சுற்றுலா வலயங்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் அழகான கடற்கரை உள்ளது. அதை பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
ஹிங்குரக்கொட விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு வந்து கூச்சல் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் பாடுபட வேண்டும். அதை நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலில் இருந்து கற்றுக்கொண்டோம். 30 வருடங்கள் செல்லும் என்று கூறப்பட்ட மகாவலித் திட்டம் 10 வருடங்களில் நிறைவு செய்யப்பட்டது.
பின்னர் இரண்டு வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் முன்பை விட பல பணிகளை செய்ய முடியும். நாம் புதிய முறையில் முன்னேற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்ததும் சுயாதீனமானதும் புதிய விடயமாகும்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள:
நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டவர்கள். எனவே இது எங்களுக்கு புதிய அனுபவம். அப்போது கட்சி ரீதியில் பணியாற்றிய நாங்கள் இப்போது ஒரே முகாமிற்குள் வந்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. மீண்டும் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.எமது அரசியல் செயற்பாட்டாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்களை அழித்து அபிவிருத்தி செய்யும் முறை என்ன என்று வினவ விரும்புகிறேன்.
இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவளித்தோம். இன்று அவரால் எமக்கு மீண்டும் அரசியல் செய்ய முடிந்துள்ளது.
அவரது சரியான அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று இந்நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு கட்சிக்காக நடத்தப்படவில்லை. இந்த நாட்டுக்கு மேலும் தலைவர்கள் தேவையில்லை. அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். மக்களுக்கு வீதியில் இறங்க நேரிடும். இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிக்க நாம் அனைவரும் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி:
''நாடு நெருக்கடி நிலையை அடைந்த போது மக்களைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை. மக்களைக் காப்பாற்ற ரணில் விக்ரமசிங்க நிபந்தனையின்றி முன் வந்தார்.
இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்துள்ளது. இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் சூழலை நாட்டில் உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது. அவருடைய பொருளாதாரப் பார்வை நாட்டுக்கு தொடர்ந்தும் அவசியம்.
பொருளாதார வேலைத் திட்டத்தை தொடர முடியாத பட்சத்தில் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர் நவரத்ன ராஜா, திருகோணமலை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மன்றத்தின் செயலாளர் சாலிய ரத்நாயக்க, முன்னாள் செயலாளர் சந்துன் ரத்நாயக்க,முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர் கந்தசாமி கோனேஷ்வரன், திருகோணமலை மாவட்ட ஐ.தே.கட்சி தொகுதி அமைப்பாளர் ஏ.பி. அமீன், முன்னாள் உள்ளுராட்சி சபை மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM