போட்- விமர்சனம்
தயாரிப்பு : மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் - சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், எம். எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், கொலப்புளி லீலா, மதுமிதா, ஷா ரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : சிம்பு தேவன்
மதிப்பீடு : 2.5 / 5
ஃபேண்டஸி காமெடி ஜேனரிலான படைப்புகளை வழங்குவதில் தனித்துவமான அடையாளத்தை பெற்ற படைப்பாளியான சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' எனும் இரண்டாம் உலக போர் கால கட்டத்திய படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அறிமுகமற்ற வெவ்வேறு வயதினை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஓர் இடத்தில் கூடுகிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களின் உரையாடல்... அரசியல்- சினிமா- கலை- மனிதநேயம்- சுயநலம்- என பல்வேறாக நீள்கிறது. இவர்களில் ஒருவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக திகழும் தீவிரவாதி என தெரிய வந்தால்... இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிய சிறிது நேரத்தில் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாட்டவர் ஒருவரும் இவர்களுடன் இணைகிறார். அவரும் தன்னை பற்றி இவர்களிடம் விவரிக்கிறார். இவரை சக உறுப்பினர்கள் அனைவரும் அச்சத்துடனே கவனிக்கிறார்கள். ஏனெனில் அவரிடம் துப்பாக்கி எனும் ஆயுதம் இருக்கிறது. அதனால் அவரின் பேச்சுக்கும், அவரின் ஆணைக்கும் கட்டுப்பட வேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. இது அவர்களின் மன இறுக்கத்தை மேலும் அதிகமாக்குகிறது. இந்நிலையில் இவர்கள் ஒன்று கூடி இருக்கும் இடம் படகு ஒன்று என்பதும் ... அந்தப் படகு ஆறு பேர் அமர்ந்து பயணிக்க கூடிய படகு என்பதும் ...அது நடுக்கடலில் தற்போது நங்கூரமிட்டு இருக்கிறது என்பதும்... கூடுதல் எடையின் காரணமாக படகு எந்த நேரத்திலும் கவிழலாம் என்ற நெருக்கடியும் ஏற்படுகிறது என்பதும்.. இந்த தருணத்தில் அனைவரும் தங்கள் உயிர்தான் முக்கியம் என கருதுகிறார்கள். அவர்களை ஒரு வகையில் ஒன்றிணைத்த அந்தப் படகின் உரிமையாளரும், உரிமையாளரின் தாயும் யாரேனும் மூவர் கடலுக்குள் குதித்தால்தான் ஏனையவர்கள் உயிருடன் கரைக்கு திரும்ப முடியும் என்ற எதார்த்தமான உண்மையை சொல்கிறார். படகிலிருந்து மூவர் கடலில் குதித்தார்களா? இல்லையா? யார் கடலில் குதித்தார்கள்? படகில் இருந்தவர்களில் கரைக்கு எத்தனை பேர் திரும்பினர்? இதனை விவரிப்பது தான் 'போட்' படத்தின் கதை. இதற்கு 1943 ஆம் ஆண்டில் சென்னை மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீச தயாராகின்றன என்ற ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பின்னணியாக பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்திய மக்களின் உரையாடல், மக்களின் எண்ண போக்கு, சமூகவியல் போக்கு. மக்களின் நம்பிக்கை.. ஆகியவை தவறாது இடம்பெற்றிருக்கிறது.
இவ்வளவு விடயங்கள் இருந்தும்... யோகி பாபு - எம். எஸ். பாஸ்கர் போன்ற திறமையான நடிகர்கள் இருந்தும்... படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக சோதிக்கிறது. இரண்டாம் பாதியில்., திரைக்கதை உணர்வுபூர்வமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிப்பதால் ஓரளவு ரசிக்க முடிகிறது.
சர்வதேச தரத்தில் அமைய வேண்டிய பின்னணி இசை கோலிவுட் தரத்திற்கு அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவிலும் பல இடங்களில்.. கதையின் அடர்த்தியையும், வீரியத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் அமையவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமாவில் முதன் முயற்சியாக நடுக்கடலில் உண்மை சம்பவத்தை தழுவி, கற்பனை கலந்து உருவாக்கி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் மற்றும் அவரது குழுவினரை பாராட்டலாம். ஆனாலும் படத்தின் உருவாக்கத்தில் கூடுதலான உழைப்பை வழங்கியிருந்தால் 'போட்' ஒரு சர்வதேச சினிமாவாக அடையாளம் பெற்றிருக்கும்.
பின்னணி இசையில் தன் இருப்பை தவற விட்டாலும்... பாடல்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். அதிலும் குறிப்பாக சுதா ரகுநாதன் குரலில் ஒலித்த 'சோக்கா..' எனும் பாடல் ரசிகர்களின் மனதில் ரீங்காரமிடுகிறது.
கதை களம் இரண்டாம் உலக காலகட்டம் என்பதால்.. கலை இயக்குநரின் பணி கவனிக்க வைக்கிறது.
நடிகர்களில் சுப்பையா எனும் கதாபாத்திரத்தில் நடித்த எம். எஸ். பாஸ்கரின் நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. அவரது கதாபாத்திரத்திற்காக இயக்குநர் வைத்திருக்கும் டிவிஸ்ட் ரசனையானது. பார்வையாளர்கள் யூகிக்க முடியாதது.
குமரன் எனும் கதையின் நாயக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு - மீனவர் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்குரிய உடல் மொழியையோ அல்லது தண்ணீருக்குள் லாவகமாக நீந்தும் காட்சிகளோ இல்லாததால்.. நம்பகத்தன்மை குறைகிறது. திரையில் இடம்பெற்ற காட்சிப்படுத்திய காட்சி மொழியிலும் துல்லியம் இல்லை.
இரண்டாம் பாதியில் நேர்த்தியாக பணியாற்றிய படத்தொகுப்பாளர் - படத்தின் தொடக்கத்திலும், முதல் பாதியிலும் தன்னுடைய பணியில் அசிரத்தையாக இருந்தது அப்பட்டமாக தெரிகிறது.
கதை உரையாடல் மூலமாக பயணிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும்... அதில் சுவராசியம் இடம்பெறாததால்.. பார்வையாளர்களை தொய்வடைய வைக்கிறது. சிம்பு தேவனின் வசனங்களில் இயல்பாக இருக்கும் பகடித்தன்மை இதில் ஓரளவே வெற்றியை பெற்றிருக்கிறது. இருந்தாலும் கதையை 'பக்கிங்காம் வீரனும் பரதேசியின் பேரனும்..' என ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வித்தியாசமாக ரசனையுடன் தலைப்பிட்டு கதையை நகர்த்திச் சென்று இருப்பது ரசிக்க வைக்கிறது.
1943 ஆம் ஆண்டு கால கட்ட இரண்டாம் உலகப்போர்- சென்னை மீது ஜப்பான் குண்டு வீச்சு செய்தி- மக்கள் சென்னையிலிருந்து வெளியேற்றம்- மீனவர்கள் தப்பிப்பதற்காக நடுக் கடலுக்குள் சென்றது - அந்தப் படகிற்குள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஏறிய வித்தியாசமான ஆட்கள்- நடுக்கடலில் கடல் எல்லையை கடந்து காத்திருப்பது- எதிர்பாராத விருந்தாளியாக ஆங்கிலேயர் ஒருவர் படகிற்குள் பிரவேசிப்பது - புயல் வீசக்கூடும் எனும் வானிலை அறிவிப்பு- ஒருபுறம் படகிற்குள் காத்திருக்கும் மனிதர்களின் வாசனையை அறிந்து அவர்களை வேட்டையாட காத்திருக்கும் சுறா மீன்- என ஏராளமான விடயங்கள் திரைக்கதையில் இடம் பிடித்திருந்தாலும்... உச்சகட்ட காட்சியில் மீனவர்களின் தியாகத்தை தவிர ரசிகர்களின் மனதை தொடுகின்ற... கவர்கின்ற... ரசிக்கின்ற... விடயங்கள் மிஸ்ஸிங்.
போட்- வேஸ்ட் ஸ்பாட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM