விழாவில் ஆஷா புத்திலி பேசியது, நான் இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளேன். இந்திய திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்திய படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். டாக்டர். ஆலன் மேத்யூஸ் மூலம் எனக்கு இயக்குநர் அணில் குமார் அறிமுகமானார். எனக்கு இதற்கு முன்னரே இயக்குநர் அணில் குமாரை நன்றாக தெரியும். 

அவருக்கு இயக்குநர் என்ற அறிமுகமே தேவை இல்லை. அணில் குமார் என்றாலே இயக்குநர் என்று கூறும் அளவுக்கு அவருக்கு நன்கு அறிமுகம் உள்ளது. அவர் எனக்கு கதை சொல்லும் போது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். சில இடங்களில் எனக்கு அழுகையே வந்துவிட்டது. இயக்குநர் அணில் என்னிடம் ஏன் அழுகிறீர்கள்?? கதை நன்றாக தானே நகர்கிறது என்று கேட்டார், நான் அதற்கு, கதை நன்றாக உள்ளது அது தான் என்னை உணர்ச்சி வசப்பட செய்து அழவைக்கிறது என்றேன். இந்த கதை காசி, வாரணாசி போன்ற இடங்களில் படமாக்கப்படவுள்ளது. கதையின் சாராம்சம் யாதெனில், ஒரு 65 வயது பெண்ணுக்கும், யாரும் இல்லாத அநாதை சிறுவனுக்கும் இடையேயான விஷயங்கள் தான். 

இந்த படம் முதியவர்கள் படும் கஷ்டத்தையும், முதியோர் இல்லங்களில் அவர்களுக்கு நிகழும் அவலங்களையும் பற்றி மிகத்தெளிவாக தோலுரிக்கும். யாரும் இல்லாத அநாதை சிறுவனை பற்றிய விஷயங்களை இந்த படம் உண்மைக்கு அருகில் இருந்து தெளிவுபடுத்தும்.

இயக்குநர் அணில் குமார் நான் சுறுசுறுப்பாக நிகழ்ச்சியில் வேகமாக நடந்து செல்வதை பார்த்து என்னை இந்த கதையில் நடிக்க தேர்வு செய்ததாக கூறினார். எனக்குள் இந்த கதை மிகப்பெரிய தாகத்தை உண்டாகிவிட்டது என்றே கூறவேண்டும். அந்த அளவுக்கு இந்த கதையில் ஜீவன் உள்ளது. இப்படத்தை நாங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கவுள்ளோம். படத்தை திரையரங்குகளில் மட்டுமல்லாமல் திரைப்படவிழாக்களிலும் திரையிட உள்ளோம். மையா திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக திரையிடப்படும். திரைப்படத்தை அங்கு வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமைக்கொள்கிறோம் என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்